இந்தியா பந்துவீச்சிலும் கலக்கும் ரகசியம் என்ன? பந்தில் ஏதும் 'மாயம்' செய்தார்களா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 9 லீக் ஆட்டங்களிலும் ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல், தொடர் வெற்றிகளுடன் 18 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உள்நாட்டில் நடக்கும் போட்டித் தொடர், ரசிகர்களின் ஆதரவு, ஆடுகளம், மைதானம் குறித்த நல்ல புரிதல் ஆகியவை இந்திய அணிக்கு இயல்பாகவே சாதகமான காரணிகளாக அமைந்துவிட்டன.
அது மட்டுமல்லாமல் இந்திய அணியில் 7 முதல் 8 வீரர்கள் வரை உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார்கள். இதுதான் கோப்பையை வெல்ல சரியான தருணம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2011-ஆம் ஆண்டுக்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் வறண்டு கிடக்கும் இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
ஆனால் இந்திய அணியின் வெற்றி பற்றி சந்தேகங்களும் விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் பரலாகத் தென்படுகின்றன. அவற்றில் ஒன்று இந்தியாவின் பந்துவீச்சு பற்றியது.
வழக்கத்திற்கு மாறாக பந்துவீச்சிலும் கலக்கும் இந்தியா
இந்திய அணி பேட்டிங்கில் எப்போதும் வலிமையானது என்பது ஏற்றக்கொள்ளக் கூடியது. ஆனால், இந்த முறை இந்திய அணியின் பந்துவீச்சும் எப்போதும் இல்லாத வகையில் அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறது. முகமது ஷமி, முகமது சிராஜ், பும்ரா ஆகியோர் வேகப்பந்துவீச்சில் கலக்கி வருகிறார்கள். ஒவ்வொரு ஆட்டத்திலும் எதிரணி பேட்டர்களை நிலைகுலையச் செய்யும் வகையில் பந்துவீசுகிறார்கள்.
பேட்டர்கள் சில நேரங்களில் சொதப்பினாலும், அணியை பந்துவீச்சு மூலம் பந்துவீச்சாளர்கள் தூக்கி நிறுத்திவிடுகிறார்கள்.
சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ஜடேஜா இருவர் மட்டுமே அணியில் இருந்தாலும், இருவருமே அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருந்து வருகிறார்கள். பந்துவீச்சுப் பிரிவில் இதற்குமுன் இல்லாத வகையில் வலிமையோடு இந்திய அணி இருக்கிறது என்று கிரிக்கெட் வல்லுநர்களும், விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
பந்தில் ஏதும் 'மாயம்' செய்தார்களா?
ஆனால், இந்திய அணி தொடர் வெற்றிகள் பெறுவதில் திடீரென பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராஜா சந்தேகத்தை கிளப்பியிருந்தார். அதிலும் இலங்கை அணியை 55 ரன்களில் சுருட்டியதைப் பார்த்தபின் ஹசன் ராஸா வலுவான சந்தேகத்தை ஐசிசி மீது எழுப்பினார்.
பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் ஒரு சேனலுக்கு ஹசன் ராஸா அளித்த பேட்டியில், “இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்பட்ட பந்தை பரிசோதிக்க வேண்டும். இந்தியப் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆகின, சீமிங் ஆகின. ஷமி, சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சு ஆலன் டொனால்ட், நிடினி பந்துவீச்சு போல் இருந்தது. மும்பை ஆட்டத்தில் ஷமி வீசிய பந்துகள் அதிகமாக ஸ்விங் ஆகியது குறித்து மேத்யூஸ் கூட வியப்புத் தெரிவித்திருந்தார்," என்றார்.
மேலும், "இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஐசிசி அல்லது பிசிசிஐ 2-வது இன்னிங்ஸில் வித்தியாசமான பந்துகளைக் கொடுத்து அல்லது அதிகமாக ஸ்விங் ஆகும் பந்துகளைக் கொடுத்து உதவி செய்துள்ளதாக நினைக்கிறேன், 3-வது நடுவரும் இந்திய அணிக்கு உதவி வருவதாக நினைக்கிறேன்," என்றார் ராஸா.
"ஆதலால், இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்படும் பந்து நன்றாக ஸ்விங் ஆவதற்காக கூடுதலாக பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்,” என சந்தேகத்தைக் கிளப்பியிருந்தார்.
ஹசன் ரஸாவுக்கு வாசிம் அக்ரம் பதிலடி
ஆனால், ஹசன் ராஸாவின் சந்தேகத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமும் ஒரு பதிலடி கொடுத்திருந்தார்.
அவர் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், “இந்திய அணியின் வெற்றி குறித்து சிலர் சந்தேகம் கொண்டு அளித்த பேட்டிகளை நான் பார்த்தேன், நகைச்சுவையாக இருந்தது. இதுபோன்றவர்கள், உலகின் முன் தங்களையும் அவமானப்படுத்துவதோடு, பாகிஸ்தானையும் அசிங்கப்படுத்துகிறார்கள்," என்றிருந்தார்.
மேலும், "பந்தைத் தேர்வு செய்யும் முறை என்பது எளிதானது. 4-வது நடுவர் 12 பந்துகள் நிறைந்த பெட்டியுடன் மைதானம் வருவார். எந்த அணி டாஸ் வென்றதோ அந்த அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தால், இரு பந்துகளை கள நடுவர்கள், 3-வது நடுவர் முன் கேப்டன் தேர்ந்தெடுப்பார்," என்றார் அக்ரம்.
"கள நடுவர் ஒரு பந்தை வலது பையிலும், மற்றொரு பந்தை இடது பையிலும் வைத்துக் கொள்வார். மற்ற பந்துகளை 4-வது நடுவர் எடுத்துச் சென்றுவிடுவார். இதுபோன்று 2-வது இன்னிங்ஸில் பந்துவீசும் அணியின் கேப்டனும் இரு புதிய பந்துகளைத் தேர்ந்தெடுப்பார், அதைக் களநடுவரிடம் காண்பிப்பார். ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களுக்காக வித்தியாசமான பந்து அளித்து ஐசிசி உதவுகிறது என்ற ஊகத்தின் அடிப்படையில் செய்தி வெளியி்ட்டது யார் எனத் தெரியவில்லை,” எனத் தெரிவித்திருந்தார்.
உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றிகளை உலகின் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் புகழ்ந்துவரும் நிலையில் பாகிஸ்தான் வீரர் சந்தேகம் எழுப்பியிருப்பது சமூகவலைத்தளத்தில் விவாதத்தைக் கிளப்பியது.
ஆனால், அடிப்படையில் டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட் போட்டிக்கு எத்தனை பந்துகள்?
டி20 போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிக்கும் ஒரு புதிய பந்து பயன்படுத்தப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் ஒரு புதிய பந்து பயன்படுத்தப்படுகிறது.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 2 பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பந்துவீசும் முனைக்கும் ஒவ்வொரு பந்து பயன்படுத்தப்படுகிறது. ஆக மொத்தம் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 4 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகிறது என ஐசிசி தெரிவித்துள்ளது.
இதனால் முதல் ஓவரிலும், இரண்டாவது ஓவரிலும் வெவ்வேறு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவது புதிய வழக்கமாக இருக்கிறது.
2011-ஆம் ஆண்டு ஐசிசி கொண்டுவந்த திருத்த விதிகளின்படி, சர்வதேச ஒருநாள் போட்டியில், ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 2 பந்துகள் பயன்படுத்தலாம் என்று மாற்றம் செய்தது.
50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி ஒரு இன்னிங்ஸ் முழுவதும் ஒரு பந்தை மட்டும் பயன்படுத்தும்போது, வெள்ளைப் பந்து விரைவில் தேய்ந்து, தோல் பகுதியில் தையல்கள் கிழிய வாய்ப்புள்ளது. அதன் நிறம் குறைந்து, புற்களின் கரைபடிந்துவிடுகிறது.
இதனால் பந்து வீசுவதற்கும், உயரச் செல்லும்போது கண்ணுக்குத் தெரியாமல் பீல்டிங் செய்வதற்கும் கடினமாகிறது.

பட மூலாதாரம், Getty Images
இதை சரி செய்யவே ஒவ்வொரு இன்னிங்ஸிலும் இரு பந்துகளை ஐசிசி அறிமுகம் செய்தது. அதாவது 25 ஓவர்களுக்கு ஒரு பந்துவீதம் கேப்டன் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்தது.
இரு பந்துகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை பந்துவீசும் அணி முடிவு செய்யலாம். ஒவ்வொரு பந்தையும் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பாலிஷ் செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் நன்றாக தேய்ந்த பந்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச வசதியாகவும், பளபளப்பாக இருக்கும் பந்தில் வேகப் பந்துவீச்சாளர்கள் பந்து வீசவும் கேப்டன் முடிவு செய்யலாம்.
வெள்ளைப் பந்துகள் தொடக்கத்தில் கடினமாக இருக்கும், சிவப்புப் பந்துகளைவிட அதிகமாக ஸ்விங் ஆகும் தன்மை கொண்டவை. ஆனால், 5 ஓவர்களுக்குப்பின், பந்தின் தன்மை மாறி, அதன் கடினத்தன்மை குறையத் தொடங்கும், ஸ்விங் ஆவதும் குறையும்.
இதற்கு முன் ஒருநாள் போட்டிகளில் பந்தை மாற்றுவதற்கு நடுவர்கள் 35 முதல் 36 ஓவர்கள் என்று அளவுகோல் வைத்திருந்தனர். அந்த ஓவர்கள் வந்தபின், பந்தை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் அதன் தேய்மானத்துக்கு ஏற்றாற்போல் வேறு பந்தை நடுவர்கள் வழங்குவார்கள்.
2011-ஆம் ஆண்டு ஐசிசி புதிய விதியைக் கொண்டுவந்தபின் ஒரு இன்னிங்ஸ்கிற்கு 2 பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
பந்து தொலைந்துவிட்டால் என்ன செய்வார்கள்?
கிரிக்கெட் போட்டியின்போது, பேட்டர் அடிக்கும் ஷாட்டில் பந்து அரங்கில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் விழுந்து கண்டுபிடிக்க முடியாமல், தொலைந்து போகலாம். இல்லாவிட்டால், அரங்கிற்கு வெளியே பந்து அடிக்கப்பட்டால் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்.
அவ்வாறு பந்து தொலைந்து, கண்டுபிடிக்க முடியாமல் போனால், நடுவர்கள் உடனடியாக புதிய பந்தை பரிந்துரைக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக எந்த ஓவரில் பந்து தொலைந்திருக்கிறதோ அந்த ஓவர்கள்வரை ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு, தேய்ந்த பந்தைத்தான் நடுவர்கள் தேர்ந்தெடுத்து வழங்குவார்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட ஓவர்கள்வரை பயன்படுத்தப்பட்ட பந்துகள் வரிசையாக பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். அந்த பெட்டியிலிருந்து பந்தைத் தேர்ந்தெடுத்து பந்துவீசும் அணியிடம் வழங்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
பந்து தொலைந்து போகாமல் பந்து மாற்றப்படலாம். அவ்வாறு பந்தை மாற்றுவது குறித்து நடுவர்கள் முடிவு செய்வார்கள். பந்து அதன் உருவத்திலிருந்து மாறுபட்டாலோ அல்லது விளையாடுவதற்கான தகுதியை இழந்துவிட்டாலோ பந்துவீச்சாளர் அல்லது பந்துவீசும் அணியின் கேப்டன் நடுவரிடம் முறையிடலாம்.
அந்த முறையீட்டுக்குப்பின் கள நடுவர்கள் இருவரும் சேர்ந்து ஐசிசி கிரிக்கெட் பால் விதி 4.5-இன் கீழ் பந்தை ஆய்வு செய்வார்கள்.
பந்தை அளவீடு செய்வதற்கு 'கேஜ் ஸ்கேல் ரிங்' என்ற கருவி இருக்கிறது. அதைக் கொண்டு பந்தின் சுற்றளவு, உருவம் ஆகியவற்றை அளவிட்டு அதன் தன்மையைக் கண்டறிவார்கள். பந்து அதிகமாகத் தேய்ந்து உருவத்தை இழந்திருந்தாலோ அல்லது கிழிந்து தையல் பிரிந்திருந்தாலோ பந்தை மாற்றப் பரிந்துரைப்பார்கள்.
அவ்வாறு பந்து மாற்றப்படும் சூழலில் நடுவர்கள் இருவரும் பேட்டர்களிடமும், கேப்டனிடமும் முறைப்படி தெரிவிக்க வேண்டும். பந்தை மாற்றுவதற்கு முன், பந்து விளையாடுவதற்கான தகுதியை இழந்துவிட்டது, எடையிழந்து, உருவமிழந்துவிட்டது என்பதை உறுதி செய்தபின்புதான் மாற்ற வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

பந்தை ஆய்வு செய்ய தனியாக 'பால் கேஜ்' என்ற வளையம் இருக்கிறது. அந்த வளையம் மூலம் பந்தின் அளவைப் பரிசோதிப்பார்கள். அதாவது ஒரு வளையம் பந்தின் சுற்றளவைவிட பெரிதாகவும், மற்றொரு வளையம் பந்தின் சுற்றளவைவிட சற்று சிறிதாகவும் இருக்கும்.
இந்த பெரிய வளையத்துக்குள் பந்து எளிதாகச் சென்றாலோ அல்லது குறைந்தபட்ச சுற்றளவுள்ள வளையத்துக்குள் பந்து செல்லாமல் இருந்தாலோ பந்து அதன் உருவத்தில் மாறியுள்ளது என்று நடுவர்கள் முடிவு செய்யலாம். இந்த நிலை வந்துவிட்டால் பந்தை மாற்றுவது குறித்து நடுவர்கள் முடிவெடுப்பார்கள்.
ஒருநாள் போட்டிகளில் 2 பந்துகள் மாற்றப்படும் முறை குறித்து எம்.ஆர்.எஃப் துணை பந்துவீச்சுப் பயிற்சியாளரும், டி.என்.பி.எல் லீக்கில் பால்சே திருச்சி அணியின் பந்துவீச்சுப்பயிற்சியாளராகவும் இருக்கும் எட்வார்ட் கென்னடி பிபிசி தமிழிடம் பேசுகையில், “சிவப்பு பந்துகள் ஒருநாள் போட்டியில் பயன்படுத்தப்பட்டபோது இருந்த பந்துகளின் தரம் இப்போது இல்லை, கிரிக்கெட்டை பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாகவும் பொழுதுபோக்கு அம்சத்துடனும் கொண்டு செல்வது, ஆகியவற்றுக்காக இரு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. தேய்ந்த பந்தை மாற்றும்போது குழப்பம் வரக்கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன," என்றார்.
மேலும் பேசிய அவர், "2 புதிய பந்துகள் வந்தபின் பந்து தேய்ந்துவிட்டது, கிழிந்துவிட்டது என்று பந்துவீசும் அணி குறை சொல்ல முடியாது. பந்தை எவ்வாறு கையாள்வது என்பதையும் பந்துவீசும் கேப்டனே முடிவு செய்வதால், பந்தை இடையில் மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை,” எனத் தெரிவித்தார்.
இதற்கு முன் என்ன நடைமுறை?
இரண்டு பந்துகள் பயன்படுத்தும் முறைக்கு முன் ஒருநாள் போட்டிகளில் பந்து பயன்படுத்தப்பட்ட முறை குறித்து எட்வார்ட் கென்னடி பேசுகையில், “ 2011-ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஒருநாள் போட்டிகளில் 36 முதல் 37 ஓவர்கள்வரை ஒரு பந்து வீசப்படும். அதன்பின், தேவைப்பட்டால் நடுவர்கள் ஆய்வுக்குப்பின், மீதமுள்ள 12 அல்லது 13 ஓவர்களுக்கு வேறு தேய்ந்த பந்து பயன்படுத்தப்படும்," என்றார்.
"அதிலும் பந்துவீசும் அணியின் கேப்டன், பந்துவீச்சாளர் பந்து தேய்ந்துவிட்டது, வடிவத்தை இழந்துவிட்டது என்று புகார் செய்தால்தான் பந்து மாற்றப்படும். அவ்வாறு புகார் செய்தால் இரு நடுவர்களும் பந்தை ஆய்வு செய்து, அதை அளவீடு மூலம் பந்தின் தரத்தை உறுதி செய்தபின்புதான், வேறு பந்து பயன்படுத்தப்படும்," என்றார்.
இந்திய அணி பிரத்யேகமாக பந்தை தேர்வு செய்ய முடியுமா?
பாகிஸ்தான் வீரர் கூறிய குற்றச்சாட்டுக் குறித்து எட்வார்ட் கென்னடி கூறுகையில், “பாகிஸ்தான் வீரர் கூறும் குற்றச்சாட்டு போன்று கிரிக்கெட்டில் நடக்க வாய்ப்பு ஒருபோதும் கிடையாது. இது ஐசிசி நடத்தும் சர்வதேசப் போட்டி, இந்திய அணி பந்தை தேர்ந்தெடுத்து கொண்டுவர முடியாது," என்றார்.
"ஐசிசிதான் பந்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவருகிறது. இதில் ஒரு அணிக்கு மட்டும் சாதகமாக செயல்படுவது என்பது கற்பனையான வாதம். கிரிக்கெட்டின் ஒவ்வொரு அம்சமும் கேள்விக்குள்ளாக்கப்படும் சூழலில் இதுபோன்ற குற்றச்சாட்டு அபத்தமானது. இதுபோன்று இந்திய அணிக்கு மட்டும் சாதகமாக வித்தியாசமான பந்து பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு வாய்ப்பு கிடையாது,” எனத் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












