நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மை, 'நல்ல' ஆண்மை - இரண்டையும் எளிதில் கண்டுபிடிக்கும் வழிகள்

ஆண்மை

பட மூலாதாரம், GETTY IMAGES

ஆண் என்றால் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றியெல்லாம் உலகம் தோன்றியதிலிருந்தே தனித்துவமான சிந்தனைகள் நிலவி வருகின்றன.

இதில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதன் கலாசாரம் மற்றும் மதங்கள் சார்ந்து வேறுபாடுகள் இருந்தாலும், ஆண்கள் குறித்த சிந்தனைகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகவே இருக்கிறது.

நம்மில் பலரும் இதுபோன்ற விஷயங்களைப் பல தலைமுறைகளாகவே நமது வீடுகளில் தொடங்கி, நாம் பேசும் மனிதர்கள், ஊடகங்கள் மற்றும் படங்கள் வரை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

உதாரணமாக ஆண்களுக்கு வலியே தெரியாது, `என்ன மனுஷன்ப்பா இவன், அடிவாங்கிட்டு திரும்பி வந்திருக்கான் பாரு` என்பது போன்ற பல.

உண்மையில், இவையெல்லாம் ஆணாதிக்கத்தின் பிம்பம்தான்.

பணம் சம்பாதிப்பது மற்றும் குடும்பத்தை நடத்துவது ஆண்களின் பொறுப்பு, ஆண்கள் மட்டுமே கடினமான வேலைகளைச் செய்ய முடியும், ஆண்தான் குடும்பத்தின் முக்கியமான முடிவுகளை எடுப்பான் என்பன போன்ற பல சிந்தனைகள் நமது சமூகத்தின் சிந்தனைகளாக இருந்து வருகிறது.

இதெல்லாம் சமூகத்தால் உருவாக்கப்பட்ட ‘சமூக கட்டமைப்பு’ என்று கூறுகிறார், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் ஆய்வுத் துறையின் பேராசிரியர் டாக்டர். அமீர் சுல்தானா.

பிபிசியுடன் பேசுகையில், ஆண்கள் குறித்த இது போன்ற சிந்தனைகள் சமூகத்தால் உருவாக்கப்பட்டவையே தவிர, இதற்கும் இயற்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுகிறார் அவர்.

“அதனால்தான் ஆண்மை குறித்து வெவ்வேறு சமூகங்கள் வெவ்வேறு கருத்தாக்கங்களைக் கொண்டுள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனாலும், அவற்றில் ஒற்றுமையான ஒன்று என்னவென்றால் ஆண்தான் வலிமையானவன் மற்றும் அவன்தான் இறுதி முடிவுகளை எடுப்பான்.”

ஆண்களை குறிக்கும் சொற்கள்

ஆண்மை

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2018ஆம் ஆண்டு, #Metoo இயக்கம் உலகளவில் தொடங்கியபோது, ஆண்களின் இத்தகைய மனநிலையைக் குறிக்கும் சொல் ஒன்றும் பிரபலமானது. அதுதான் ‘நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மை’ (toxic masculinity).

அதாவது, நீங்கள் ஒரு ஆண் என்பதை தனித்துவமான வழியில் காண்பிக்க வேண்டும் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் இந்தச் சொல் உங்களுக்கு பொருந்தும்.

ஆண்கள் பலமானவர்கள் மற்றும் பெண்கள் பலவீனமானவர்கள் என்ற சிந்தனை உங்கள் மனதில் மட்டுமின்றி, செயலிலும் பிரதிபலிக்கும்.

இதுபோன்ற சிந்தனைகள் இருந்தால் அது ஆண்மை அல்ல, மாறாக நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது விஷத்தன்மை வாய்ந்த ஆண்மை என்று அழைக்கப்படுகிறது.

உடனே ஒரு கேள்வியும் எழுகிறது. பல நூற்றாண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் ஆண்மை குறித்தான சிந்தனை நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மை என்றால், எதுதான் உண்மையான ஆண்மை?

இதுகுறித்த பதிலைத் தேடும் முயற்சியில் புதிதாக உருவான சொல்தான் ஆரோக்கியமான ஆண்மை (Healthy Masculinity) அல்லது நேர்மறை ஆண்மை (Positive Masculinity).

ஆண்கள் நலம் மற்றும் அவர்களின் குணநலன்கள் குறித்து இயங்கி வரும் கேரி பார்க்கர் பிபிசி ரீல்சுடன் ஆண்மை குறித்த தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

ஆண்மை

பட மூலாதாரம், bbc

படக்குறிப்பு, கேரி பார்க்கர்

கேரி பார்க்கர், ஆண்மை மற்றும் சமூக நீதிக்கான ஈக்விமுண்டோ மையத்தின் (Equimundo Center for Masculinities and Social Justice) தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை-நிறுவனர் ஆவார். மேலும் ‘மென்கேர்’ மற்றும் ‘மென் என்கேஜ்’ ஆகிய நிறுவனங்களின் இணை-நிறுவனராகவும் இருந்து வருகிறார்.

மென்கேர் என்பது 50 நாடுகளுக்கும் மேலாக உலகளவில் ஆண்களை அக்கறை செலுத்தும் நபர்களாக இருக்க ஊக்குவிக்கும் முகாம்களை முன்னெடுத்து வருகிறது.

மென்-என்கேஜ் (Menengage) நிறுவனம் உலக அளவில் 700க்கும் மேற்பட்ட என்ஜிஒ அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு கூட்டமைப்பு.

மேலும், கேரி பார்க்கர் சர்வதேச ஆண்கள் மற்றும் பாலின சமத்துவ கணக்கெடுப்பின் (IMAGES) இணை-நிறுவனரும் ஆவார். இதுதான் இதுவரை உலகிலேயே மிகப்பெரிய அளவில் எடுக்கப்பட்ட ஆண்களின் குணநலன்கள், தந்தைகளின் பொறுப்புகள், வன்முறை மற்றும் பாலின சமத்துவம் குறித்தான அவர்களின் அணுகுமுறை ஆகியவை குறித்த கணக்கெடுப்பு.

ஆண்மை

பட மூலாதாரம், Getty Images

நல்ல ஆணாக இருப்பது என்றால் என்ன?

பிபிசி ரீல்சுடன் பேசும்போது, பல சிறுவர்கள் மற்றும் ஆண்கள் உண்மையில் நல்ல சிறுவனாக அல்லது ஆணாக இருப்பது என்றால் என்ன என்பதில் குழம்பிப் போயிருக்கிறார்கள் என்று கூறினார் கேரி.

அவரது கூற்றுப்படி, ஒரு ஆண் தனது குடும்பத்தில் உள்ள பிறர் மீது அக்கறை செலுத்தும்போது அது அந்த ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பயனாக அமைகிறது என்று அவரது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அவரைப் பொறுத்தவரை, ஆரோக்கியமான ஆண்மை என்பது தன்னிலிருந்து பெண்களுக்கு எதிரான நச்சுத்தன்மை வாய்ந்த சிந்தனையைப் போக்குவதாகும்.

பாலியல் வன்முறை அல்லது பெண்களுக்கு எதிரான கேலி ஆகியவற்றை எதிர்கொள்ளும் போது அதை எதிர்த்து குரல் எழுப்புவதே இதை ஆண்களுக்குப் புரிய வைப்பதற்கான எளிமையான வழி என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், ஆண்கள் தங்கள் அலுவலகம் அல்லது நட்பு வட்டம் அல்லது உறவினர்கள் என எங்கு யார் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருந்தாலும் உடனே அவர்களுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்று கூறுகிறார் கேரி.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் டாக்டர். அமீர் சுல்தானாவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பிரச்னைகளுக்கு எதிராக ஆண்கள் கண்டிப்பாக குரல் எழுப்ப வேண்டும் என்று கூறுகிறார்.

டாக்டர். சுல்தானாவை பொறுத்தவரை இதுவே நேர்மறை ஆண்மை.

இதற்கு உதாரணமாக , ஆண்கள் தான் வீடுகளில் முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே, திருமணம் என்று வரும்போது வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய ஒரு ஆண் முன்வந்தால் அதுவே நேர்மறை ஆண்மை என்கிறார் அவர்.

ஆண்மை

பட மூலாதாரம், Getty Images

நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மை

பார்க்கரின் கூற்றுப்படி, பெண்களின் முன்னேற்றம் மற்றும் முழுமையான பாலின சமத்துவத்திற்கான பயணத்தில் ஆண்களுக்கு பெரிய பங்கு உள்ளது என்கிறார்.

மும்பையைச் சேர்ந்த ஹரிஷ் ஐயர் இந்தியாவில் பால்புதுமையினர் உரிமைக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வருபவர் ஆவார். அவரை பொறுத்தவரை, ஆரோக்கியமான ஆண்மை என்பது அனைத்து பாலினமும் சமம், அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் அனைவருக்கும் சமமான இடம் உண்டு என்ற மனநிலையைக் கொண்டிருப்பதே என்று கூறுகிறார்.

பிபிசி ஹிந்தி சேவைக்காக ஃபாத்திமா ஃபர்ஹீனுடன் அவர் பேசுகையில், ஆரோக்கியமான ஆண்மைக்கான சிந்தனை என்பது பெண்ணியத்தின் வேரில்தான் அடங்கியுள்ளது என்று கூறுகிறார் ஹரிஸ் ஐயர்.

சமூகம் ஆண்களின் பார்வைக்கே முன்னுரிமை வழங்குவதால் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் பாகுபாடு மற்றும் அநீதியை எதிர்கொள்ள நேரிடுவதாக பெண்ணியம் நம்புகிறது.

ஆரோக்கியமான ஆண்மை என்பது இதே சிந்தனைதான். ஆனால் அங்கே சமமான வாய்ப்புகள் இருக்க வேண்டும். அது பெண்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பாலினத்திற்கும் என்ற ஒரே ஒரு வித்தியாசம் மட்டும் உள்ளது.

ஏன் சமீபத்தில் நேர்மறை ஆண்மை குறித்து அதிகமாகப் பேசப்படுகிறது என்ற கேள்விக்கு, நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மை குறித்து இந்த சமூகம் பேசிக் கொண்டிருக்கும்போது, இயல்பாகவே அதற்கு எதிரான முற்போக்கு சிந்தனையான இதுவும் பேசப்படும் என்று பதிலளித்தார் ஹரிஷ் ஐயர்.

மேலும் முக்கியமாக நச்சுத்தன்மை வாய்ந்த ஆண்மை என்பது ஆண்களுடன் மட்டும் தொடர்புடையதல்ல, சில பெண்களும்கூட அதை ஊக்குவிக்கின்றனர் என்று கூறுகிறார் ஹரிஷ் ஐயர்.

ஆண்மை

பட மூலாதாரம், Getty Images

வளையல் அடையாளம்

டாக்டர். அமீர் சுல்தானாவும் இதையே நம்புவதாகக் கூறுகிறார்.

“ஆண்மைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அதே சமூகத்தில்தான் பெண்களும் அங்கம் வகிக்கின்றனர். சில நேரங்களில் பெண்களே சில அரசியல் போராட்டங்களில் அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளுக்கு வளையல்கள் வழங்குவதைப் பார்க்க முடிகிறது. அந்தப் போராட்டத்தின் அடையாளமாக அவர்கள் வளையல்களைப் பயன்படுத்துகிறார்கள்," என்று கூறுகிறார் டாக்டர். அமீர் சுல்தானா.

கடந்த சில ஆண்டுகளில் ஆண்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கேரி பார்க்கர் நம்புகிறார். இந்த உலகம் பாலின சமத்துவத்தை நோக்கிப் பயணித்தால் அதில் ஆண்களுக்கு அதிகமாகப் பலன் உண்டு. அதே நேரம் இந்தப் பயணத்தில் ஆண்களுக்கும் முக்கியப் பங்குண்டு என்பதைப் புரிய வைப்பது மிக அவசியம் என்கிறார் அவர்.

பாலின சமத்துவத்திற்கான இந்தப் போராட்டத்தில் பெண்களுக்கு கூட்டாளிகளாக ஆண்கள் நிற்பதன் மூலமாக, இந்த ஒட்டுமொத்த செயல்பாட்டில் அவர்களே சிறந்த மனிதர்களாக மாறி விடுவார்கள்.

பால்புதுமையினருக்கான பெண்ணிய குழுவான நஸ்ரியா என்ற அமைப்பின் மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வரும் ஜயன், ஆரோக்கியமான ஆண்மை என்பது ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட விதிகள் மற்றும் சமூகத்தின் அணுகுமுறைகளுக்கு சவால் விடுவதாகும் என்று கூறுகிறார்.

பிபிசி ஹிந்தி சேவைக்காக ஃபாத்திமா ஃபர்ஹீனுடன் பேசும்போது, சமூகத்தில் குடும்ப வன்முறை அதிகமாகத் தொடங்கியதும் இந்த விஷயம் விவாதத்திற்கு வந்தது. இந்தப் பிரச்னையில் முக்கியமான விஷயம் முதலில் ஆண்மை குறித்து ஆண்களிடம் பேச வேண்டும் என்பதை என்று மக்கள் புரிந்து கொண்டனர், என்று கூறினார் ஜயன்.

அவரைப் பொறுத்தவரை, ஆண்மை குறித்து உருவாக்கப்பட்டுள்ள பிம்பங்கள் அனைத்தும் தவறானது என்று ஆண்களே சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

ஆண்மை

பட மூலாதாரம், Getty Images

மாற்று சிந்தனைக்கான தேவை

தற்போது பேசப்படும் தேசியவாதத்தில் பாரம்பரிய ஆண்மையின் சிந்தனையும் இருப்பதாக ஜயன் கூறுகிறார்.

இந்தியாவிலும் ஆரோக்கியமான ஆண்மை குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் பரவலாக்கப்பட வேண்டும். ‘சிறுவர்களை எப்படி வளர்ப்பது என்று நமது நிறுவனங்கள் மக்களுக்குப் போதிக்கின்றன’ என்று அவர் கூறுகிறார்.

இதில் மக்களின் சிந்தனை மற்றும் பெற்றோர்களின் பங்கு என்ன?

இதுகுறித்து டாக்டர். அமீர் சுல்தானா கூறுகையில், “இதுபோன்ற சிந்தனைகளை மாற்ற நாம் ஆரம்பத்தில் இருந்தே நமது குழந்தைகளுக்கு ஆண் மற்றும் பெண் சமம் என்பதைப் போதித்து வளர்க்க வேண்டும். முதலில் நல்ல மனிதராக மாறுவதன் மூலமே ஒரு நல்ல ஆண் உருவாக முடியும்,” என்றார்.

தற்போது இது வெறும் ஆண் மற்றும் பெண்களை குறித்தது மட்டுமல்ல, இதில் பால்புதுமையினரும் அடங்குவர். அவரை பொறுத்தவரை, இந்த ஒட்டுமொத்த சமூகமும் மாறினால்தான் சமூக முன்னேற்றம் ஏற்படும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)