உலகின் 90% வைரத்தை இங்கே பட்டை தீட்டினாலும் தொழிலாளர்கள் தற்கொலை செய்வது ஏன்? பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சீத்தல் படேல்
- பதவி, பிபிசி குஜராத்திக்காக, சூரத்
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரைச் சேர்ந்தவர் நிகுஞ் டேங்க். வைரத்திற்கு பட்டை தீட்டும் தொழில் செய்த அவருக்கு வயது 28. மே மாதம் தன்னுடைய வேலையை இழந்த பிறகு மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.
ஏழு ஆண்டுகளாக அவர் பணியாற்றி வந்த வைரத்திற்கு பட்டை தீட்டும் சிறிய பட்டறை நிதிப் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டது. நிகுஞ் மட்டுமின்றி அவருடன் பணியாற்றிய ஒரு டஜன் பணியாளர்களும் தங்களின் வேலையை இழந்தனர்.
தன்னுடைய மனைவி, மகள் மற்றும் பெற்றோர்கள் என்று குடும்பத்தை வழி நடத்தும் பொறுப்பு அவருக்கு இருந்தது. அவர் மட்டுமே வேலைக்கு சென்று கொண்டிருந்தார். எந்த விதமான சேமிப்பும் இன்றி சிரமப்பட்டு வந்தார்.
"அந்த இழப்பை அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. புதிய வேலையும் அவனுக்கு கிடைக்கவில்லை. மன உளைச்சலுக்கு ஆளான அவன் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டான்," என்று கூறுகிறார் நிகுஞ்சின் தந்தை ஜெயந்தி டேங்க். நிகுஞ்ச் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய மனைவியையும், 14 மாத மகளையும் இனி யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கேள்வி எழுப்புகிறார் ஜெயந்தி டேங்க். நிகுஞ்சின் தற்கொலையை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல்துறை.

விசாரணை குறித்து பேசிய சூரதின் அம்ரோலி காவல் நிலைய அதிகாரி ஒருவர், "வைர தொழில் துறையில் வேலையாட்கள் குறைக்கப்படுவதால் மன அழுத்தத்திற்கு ஆளான அவர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார் என்று விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம்," என்று குறிப்பிட்டார்.
உலகில் 90% வைரங்கள் பட்டை தீட்டப்படும் சூரத்தில் 5000க்கும் மேற்பட்ட வைரப் பட்டறைகளில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இத்துறையில் ஏற்பட்ட தொய்வால் வேலை இழப்புகள் அதிகரித்து வருகிறது.
27 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி7 நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் ரஷ்யாவின் பட்டைத்தீட்டப்படாத வைரங்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து மார்ச் மாதம் எடுக்கப்பட்ட இந்த முடிவு சூரத்தின் வைரத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடை 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், RUPESH SONAVANE
கோவிட் தொற்றுக்கு பிறகு தொய்வடைந்த ஏற்றுமதி
கோவிட் தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட ஊரடங்கினால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகள் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை வைரத்தின் தேவையை குறைத்தது. இது மட்டுமின்றி இந்த துறை பல்வேறு சிக்கல்களையும் சந்திக்க நேரிட்டது.
ஆய்வகங்களில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு, மிகவும் குறைவான விலைக்கு கிடைக்கும் வைரத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பும் இந்த துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
வைரத்தை வெட்டுதல் மற்றும் பட்டைத் தீட்டும் பணிகளுக்காக ரஷ்யாவிடம் இருந்து 30 சதவீதத்துக்கும் அதிகமான பட்டைத்தீட்டப்படாத வைரங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது.
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை இந்த வைரத்தை வர்த்தகத்தில் இருந்து வெளியேற்றிவிட்டது என்று கூறுகிறார் இந்திய வைர நிறுவனத்தின் தலைவர் தினேஷ் நவதியா.
"2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக 1000 பட்டறைகள் மூடப்பட்டன. 2 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் தங்களின் பணிகளை இழந்தனர். கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு, நம்முடைய சந்தையாக பார்க்கப்பட்ட ஜி7 நாடுகள், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவில் இந்த வைரத்திற்கான தேவை குறைவாக இருப்பது இன்றைய சூழலை மேலும் மோசமடைய வைத்திருக்கிறது," என்றும் தெரிவிக்கிறார் தினேஷ்.
''கோவிட் தொற்றுக்கு பிறகு பட்டைத்தீட்டப்பட்ட வைரத்தின் விலையில் காணப்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக 2021-ஆம் ஆண்டில் இருந்தே நிறைய நபர்கள் தங்களின் வேலைகளை இழக்க துவங்கிவிட்டனர்'' என்கிறார் அவர்

பட மூலாதாரம், RUPESH SONAVANE
மோசமடையும் சூழல்
கடந்த 16 மாதங்களில் 65 வைரத் தொழிலாளர்கள் வேலை இழந்த துக்கத்தால் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டனர். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று பிபிசி குஜராத்தியிடம் குஜராத் வைரத் தொழிலாளர்கள் சங்கம் கூறியது.
சமீபத்தில் உயிரிழந்த 9 தொழிலாளர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசியது பிபிசி குஜராத்தி. வேலையிழப்புதான் இந்த தற்கொலைகளுக்கு காரணம் என்று கூறும் குடும்பத்தினர், தங்களுக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
"சேமிப்பு ஏதுமின்றி எவ்வளவு நாள் வாழ முடியும் என்று எனக்கு தெரியவில்லை," என்று கூறுகிறார் 35 வயதான தீபக் ஹிர்பாரா. அவர் மூன்று மாதத்திற்கு முன்பு தன்னுடைய வேலையை இழந்தார்.
சூரத்தின் வாரச்சா பகுதியில் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் அவருக்கு தேவையான நிதி உதவியை அவரின் மாமனார் குடும்பத்தினர் வழங்கி வருகின்றனர்.
வெட்டி எடுக்கப்பட்ட அசலான வைரத்தை கையாளுவது மற்றும் வைரத்திற்கு பட்டைத் தீட்டி வடிவம் கொடுப்பது என்று இரண்டு பிரதான பணிகளுக்காக மட்டுமே செயல்பட்டு வந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பட்டறைகளில் மட்டுமே பெரும்பாலான வேலை இழப்புகள் நிகழ்ந்துள்ளன.
சூரத்தில் உள்ள வைரத் தொழில்துறை தற்போது மோசமான நிலையில் உள்ளது என்று கூறுகிறார் பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. குமார் கணானி. காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
"இந்த துறையில் உள்ள அனைவருடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். வைரத்திற்கு பட்டைத்தீட்டுபவர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு தேவையான அனைத்துவிதமான உதவிகளையும் வழங்க அரசு தயாராக உள்ளது. அவர்களின் கோரிக்கையை மாநில அரசிடம் முறையிடுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன். அப்போதுதான் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்," என்று கூறினார்.
2022-ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தங்கம் மற்றும் வைர வர்த்தகம் 7% பங்களித்தது. ஆனால் 2023-2024-ஆம் நிதி ஆண்டில் நவரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி மதிப்பானது 22.27 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 14.94% குறைவானது.

பட மூலாதாரம், RUPESH SONAVANE
பெரும் வேலை இழப்புகளை சந்திக்கும் தொழிலாளர்கள்
வேலை இழப்புகளால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்த தொழிலாளர்கள் சங்கம் கடந்த ஜூலையில் உதவி மைய எண்களை வெளியிட்டது.
வைர தொழிலாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் பவேஷ் டேங்க், "ஆகஸ்ட் மாதம் மட்டும் 1600 நபர்களிடம் இருந்து உதவி கோரி அழைப்புகள் வந்திருக்கிறது," என்று கூறினார். ஆனால் பலருக்கும் தேவையான உதவியும் ஆலோசனையும் குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கப்பெறவில்லை.
எங்களுக்கு அழைப்பு விடுக்கும் பெரும்பான்மை நபர்கள் வேலை ஏதாவது கிடைக்குமா, நிதி உதவி ஏதாவது வழங்குவீர்களா என்றுதான் கேட்கின்றனர் என்கிறார் அவர். தொழிலாளர்கள் மட்டுமின்றி இடைத்தரகர்கள், வர்த்தகர்களும் இந்த சூழலால் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இப்படி ஒரு சூழலை நான் என் வாழ்நாளிலும் பார்த்ததில்லை என்று கூறுகிறார் 49 வயதான திலிப் சோஜித்ரா. இடைத்தரகராக பணியாற்றும் அவர் வாடிக்கையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் இதர இடைத்தரகர்களுக்கு வைரங்களை விற்று வரும் பணியை மேற்கொண்டிருக்கிறார்.
பல நாட்களாக எந்த வேலையும் இன்றி அமர்ந்திருக்கிறோம். எதுவும் விற்பனையாகவில்லை என்றும் கூறுகிறார் திலிப்.
சூரத்தில் வருடத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டும் பெரிய பட்டறைகள் 15 மட்டுமே உள்ளன. இதர பட்டறைகள் சிறியதாகவும் நடுத்தர அளவிலும்தான் இருக்கும்.

பட மூலாதாரம், RUPESH SONAVANE
சர்வதேச சந்தையை நம்பியிருக்கும் இந்தியா
"இந்த விற்பனைச் சங்கிலியில் இந்தியா அடிமட்டத்தில் இருக்கிறது. மூலப்பொருட்களைப் பெறவும், நகைகளை விற்கவும் சர்வதேச சந்தையையே இந்தியா நம்பியுள்ளது," என்று கூறுகிறார் வைர ஏற்றுமதி செய்யும் கிர்தி ஷா.
''அமெரிக்கா, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பெல்ஜியம் போன்ற பகுதிகளுக்கு வெட்டப்பட்ட, பட்டைத்தீட்டப்பட்ட ரத்தினங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இருந்து 80% நகைகள் இங்குதான் அனுப்பி வைக்கப்படுகிறது. ஜி7 நாடுகள், ஐக்கிய அரபு அமீரகம், சீனாவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி 23% வரை குறைந்துள்ளது''
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் சர்வதேச பொருளாதார நிலை மந்தமாக இருக்கும் என்று உலக வங்கியின் சமீபத்திய க்ளோபல் எக்கனாமிக் ப்ரோஸ்பெக்ட்ஸ் கூறியுள்ளது.
இஸ்ரேல் - காஸா, ரஷ்யா - யுக்ரேன் போர்கள் இந்த தொழிலை பெரிய அளவில் பாதித்துள்ளது.
உலக அளவில் ஏற்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக பட்டைத்தீட்டப்பட்ட வைர வர்த்தகம் 25 முதல் 30% வரை குறைந்துள்ளது என்று கூறுகிறார் கிரண் ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் வல்லபா லக்கானி.
குறைவான தேவை, அதிக உற்பத்தி காரணமாக பட்டைத்தீட்டப்பட்ட வைரங்களின் விலையும் 5 முதல் 27% வரை குறைந்துள்ளது என்று கூறுகின்றனர் துறைசார் வல்லுநர்கள்.
பட்டறை வைத்து நடத்தும் மகேஷ் விராணி இது குறித்து பேசுகையில், "குறைவான தேவை இருந்தும் உற்பத்தி அதிகமாக நடைபெற்றதுதான் இந்த உயர் விநியோகத்திற்கு காரணம். நாங்கள் தொடர்ந்து இயங்குவதற்காக இத்தகைய முடிவை மேற்கொண்டோம். ஆனால் இது எங்களின் இழப்பைத்தான் மேலும் அதிகரித்தது" என்று குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், RUPESH SONAVANE
மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் ஆய்வக வைரங்கள்
விலை குறைவாக இருப்பதாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாலும் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்கள் இயற்கை வைரத்தின் வர்த்தகத்தில் கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
''2022-ஆம் ஆண்டு ஜூலையில் ஒரு காரட் ஆய்வக வைரத்தின் விலை 300 டாலர்களாக இருந்தது. ஆனால் தற்போது ஒரு காரட் ஆய்வக வைரத்தை மக்களால் 78 டாலர்களுக்கு வாங்க இயலும். இது வர்த்தகத்தை பாதிக்கிறது. வெட்டி எடுக்கப்பட்ட வைரத்தின் விலை குறைந்து, பட்டைத்தீட்டப்பட்ட வைரத்தின் விலை அதிகரிக்கும் போதுதான் இந்த நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் வரும்'' என்று கூறுகிறார் சூரத் வைர இடைத்தரகர்கள் சங்கத்தின் தலைவர் நந்த்லால் நக்ரானி.
வேலையின்மையின் பாதிப்பை சூரத் டயமண்ட் போர்ஸ் கட்டடத்திலும் காண முடியும். 67 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம் இது.
''2022-ஆம் ஆண்டு வெட்டப்பட்ட, பட்டைத்தீட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அது 2023-ஆம் ஆண்டு 16 பில்லியனாக குறைந்தது. 2024-ஆம் ஆண்டு 12 பில்லியனாக குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைரத்துறையில் ஏற்பட்டுள்ள வேலை இழப்பின் பின்விளைவை நேரடியாக இதன் மூலம் உணரலாம். இந்த வர்த்தக தொய்வின் காரணமாக வர்த்தகர்கள் சூரத்திற்கு குடிபெயர இயலவில்லை என்று கூறுகிறார் சூரத் டயமண்ட் போர்ஸின் துணைத்தலைவர் கோவிந்த் தோலாகியா.
எதிர்வரும் பண்டிகை காலங்களில் இந்த நிலைமை மாறலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
"பல்வேறு இன்னல்களை சமாளித்திருக்கிறது இந்த துறை. 2008-ஆம் ஆண்டு இந்த துறை மீண்டு வந்தது. இதுவும் கடந்து போகும். தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் விற்பனையில் முன்னேற்றம் இருக்கும்," என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் திலிப் சொஜித்ரா.
மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் -044- 24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












