'பள்ளிக்கு சிரித்த முகத்துடன் சென்றாள்' - ராமேஸ்வரம் 12-ஆம் வகுப்பு மாணவி கொலையில் நடந்தது என்ன?

ராமேஸ்வரத்தில் பள்ளிக்குச் சென்ற 12-ஆம் வகுப்பு மாணவியை கொலை - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)

ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்ததாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்றதால் போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கத்தியால் குத்தி கொலை

ராமேஸ்வரம், மாணவி கொலை, இளைஞர் கைது
படக்குறிப்பு, மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முனியராஜ்

''ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி இன்று காலை தனது தோழியுடன் பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது முனியராஜ் (21) என்பவர் மாணவியை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்க மறுத்ததால், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை குத்தினார்.'' என காவல் துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த துறைமுக காவல் நிலைய போலீசார் தப்பி ஓடிய முனியராஜை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் மாணவியின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல போலீசார் முடிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய உயிரிழந்த மாணவியின் உறவினர் ஒருவர், "ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இருப்பதில்லை. எங்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதில் உடன்பாடு இல்லை அதனால் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டோம்." என்றார்.

பின்னர் போலீசார் ராமநாதபுரத்திலிருந்து மருத்துவரை வரவழைத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைத்து உடற்கூறாய்வு செய்வதாக தெரிவித்ததால் போராட்டத்தை கைவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ராமேஸ்வரம், மாணவி கொலை, இளைஞர் கைது

மாணவியின் தாய் கூறுவது என்ன?

உயிரிழந்த மாணவியின் தாய் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கடந்த சில நாட்களாக எனது மகளை முனியராஜ் தொடர்ந்து காதலிக்க கட்டாயப்படுத்தியுள்ளான். கடந்த வெள்ளிக்கிழமை கூட பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்து காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளான். முனியராஜ் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்வதாக மகள் என்னிடம் கூறினாள். எனவே, என்னுடைய கணவர் முனியராஜின் வீட்டிற்கு சென்று கண்டித்ததுடன், இனிமேல் எனது மகளை தொந்தரவு செய்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் என எச்சரித்து வந்தார்" எனத் தெரிவித்தார்.

"படித்து நல்ல ஒரு நிலைக்கு வர வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்ட என் மகள் 12-ஆம் வகுப்பில் அதிக கவனம் செலுத்தி படித்து வந்தாள். காலையில் பள்ளிக்குச் செல்லும் போது சிரித்த முகத்துடன் விடைபெற்றுச் சென்ற மகளை சடலமாக பார்ப்பேன் என்று நினைக்கவில்லை" என மாணவியின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

உறவினர்கள் சாலை மறியல்

போலீசார், முனியராஜூக்கு உடனடியாக தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனக் கூறி மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ராமேஸ்வரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீரா தலைமையில் போலீசார் உறவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். "கொலை செய்த முனியராஜ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் தரப்பில் அவருக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும்." என காவல்துறை தரப்பில் அவர்களிடம் தெரிவிக்கபட்டது.

மாணவி கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர் குழு மற்றும் போலீசார் சோதனை செய்ததுடன் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் வீடியோக்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு