இஸ்லாமிய பெண் மீது காதல் கொண்டதால் கசையடி பெற்ற சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்

வரலாறு, சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங், இந்தியா, பாகிஸ்தான், பஞ்சாப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகாராஜா ரஞ்சித் சிங்
    • எழுதியவர், உமர் தராஜ் நங்கியானா
    • பதவி, பிபிசி உருது

(கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான இந்தக் கட்டுரை, மறுபகிர்வு செய்யப்படுகிறது)

பதினெட்டு வயதேயான ஒரு நாட்டியக்காரப் பெண்ணின் அழகிலும் குரலிலும் ஈர்க்கப்பட்டு, ஒரே சந்திப்பில் பித்தானார் ஓர் அரசர். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ததற்காக கசையடி வாங்கவும் அவர் தயாரானார்.

அமிர்தசரஸை சேர்ந்த குல் பஹார் என்பவர்தான் அந்தப் பெண். ஒரு திருமண விழாவில் அந்தப் பெண்ணின் பாடலிலும் ஆடலிலும் மனதைப் பறிகொடுத்தவர் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பஞ்சாபை ஆட்சி புரிந்த மகாராஜா ரஞ்சித் சிங். தமது காதலியாக அவரை வைத்துக் கொள்ள மகாராஜா விரும்பினார்.

ஆனால், அந்தப் பெண் அதற்குச் சம்மதிக்கவில்லை.

பஞ்சாபின் வரலாற்றை உற்று நோக்கி வரும் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான இக்பால் கைசர், "அந்தப் பெண்ணின் அழகில் ஈர்க்கப்பட்ட மகாராஜா ரஞ்சித் சிங் அவருக்காக எதையும் கொடுக்கத் தயாராக இருந்தார். குல் பஹார், தான் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், காதலியாக இருக்க இயலாது என்று கூறிவிட்டார்" என்று தெரிவிக்கிறார்.

அப்போது மகாராஜாவுக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும். ஆங்கிலேயர்கள் இந்திய துணைக் கண்டத்தில் காலூன்றத் தொடங்கிய காலகட்டம். மகாராஜா விரும்பினால், அவரை திருமணம் செய்துகொள்ளத் தயார் என்று குல் பஹார் தெரிவித்தார்.

இக்பால் கைசர், "மகாராஜா ரஞ்சித் சிங் அதை மகிழ்ச்சியாக ஏற்று, முறைப்படி குல் பஹாரின் குடும்பத்தாரிடம் சென்று பெண் கேட்டார்" என்கிறார்.

பெண் கேட்க அரசர், லாகூரில் இருந்து அமிர்தசரஸ் வரை நடந்து வந்து தனது பெற்றோரிடம் பெண் கேட்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்ததாக ஒரு சாரார் கூறுகிறார்கள். ஆனால், இதற்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்று இக்பால் கைசர் கூறுகிறார்.

முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வது என்பது சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாப் அரசருக்கும் அவ்வளவு எளிதானது அல்ல.

வரலாறு, சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங், இந்தியா, பாகிஸ்தான், பஞ்சாப்

கசையடி விதித்த அகால் தக்த்

ரஞ்சித் சிங்கின் இந்த முடிவுக்கு சீக்கிய மதத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.

அமிர்தசரஸில் உள்ள சீக்கிய புனிதத் தலமான அகால் தக்த்திற்கு மகாராஜா அழைக்கப்பட்டார். சீக்கிய மதத்தில் கால்சாவின் உச்ச அமைப்பாக அகால் தக்த் கருதப்படுகிறது.

குல் பஹாரை மணந்ததற்குத் தண்டனையாக குருத்வாரா தளம் முழுவதையும் ரஞ்சித் சிங் தனது கைகளால் கழுவிச் சுத்தம் செய்யும்படி அகால் தக்த் தண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இக்பால் கைசர் தனது ஆராய்ச்சியின்படி, அவ்வாறு இல்லை என்று கூறுகிறார். "அகால் தக்த் ரஞ்சித் சிங்கை சாட்டையால் அடித்து தண்டித்தது. ரஞ்சித் சிங் தனது ராணிக்காக இந்தத் தண்டனையை ஏற்றுக் கொண்டார்" என்று இக்பால் கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரஞ்சித் சிங் கசையடி பெற்றது உண்மையா?

அப்போது ரஞ்சித் சிங்கின் வயது 50 வயதுக்கு மேல். ஆனால், இவரது பேரரசு பஞ்சாபை தாண்டியும் விரிந்து பரவியிருந்தது. இவ்வளவு செல்வாக்கு மிக்க நபருக்கு யார் கசையடி கொடுத்திருக்க முடியும்?

"இப்படியொரு கேள்வி எழுந்தாலும், அகால் தக்த்-இன் உத்தரவை ரஞ்சித் சிங்கால்கூட மீற முடியாது. இதற்கு ஒரு தீர்வாக பட்டால் ஒரு சாட்டை தயாரிக்கப்பட்டு, அதைக் கொண்டு அவரை அடித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.குல் பஹாரை இழக்க விரும்பாத அரசர் இதை ஏற்றுக்கொண்டார்" என்றார் இக்பால் கெய்சர்.

ரஞ்சித் சிங், குல் பஹாரின் இந்தத் திருமணம் மற்றும் அதன் கொண்டாட்டங்கள் பல வரலாற்று ஆசிரியர்களால் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. லாகூரிலும் அமிர்தசரஸிலும் இந்தத் திருமணத்தைப் பார்த்த பெரியவர்கள், பின்னாளில் இங்கே அப்படி ஒரு திருமணம் நடந்ததை நினைவு கூர்ந்ததாக அவர் எழுதுகிறார்.

வரலாறு, சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங், இந்தியா, பாகிஸ்தான், பஞ்சாப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாப் அரசருக்கு ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல.

மருதாணி வைத்துக்கொண்ட ரஞ்சித் சிங்

இந்தத் திருமணம் குறித்த விளக்கத்தை வரலாற்று ஆய்வாளர் சுஜன் ராய் தனது 'வரலாற்றின் சாரம்' என்ற நூலில் எழுதியுள்ளதாக ஆய்வாளர் இக்பால் கைசர் கூறுகிறார்.

"மஹாராஜா ரஞ்சித் சிங் முறைப்படி மருதாணி வைத்துக்கொண்டு, தங்க ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக்கொண்டு, அரச உடையை அணிந்து கொண்டு யானை மீது ஏறிச் சென்றார்" என்று எழுதுகிறார்.

"அமிர்தசரஸ் மாநிலத்தில் உள்ள ராம் பாக் பகுதியில் இருந்த ஒரு மாளிகையில் இந்தத் திருமண விழா நடைபெறவிருந்த நிலையில், பல நாட்களுக்கு முன்பே அது காலி செய்யப்பட்டு, மூடப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு, அதில் முதலில் நுழைந்தவர் குல் பஹார்."

"திருமண விழாவை முன்னிட்டு முந்தைய இரவு கச்சேரி, கோலாகலமாக நடத்தப்பட்டு, அந்த நிகழ்ச்சியில் பாடியவர்களுக்குச் சன்மானமாக ஏழாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தொகை."

வரலாறு, சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங், இந்தியா, பாகிஸ்தான், பஞ்சாப்

பட மூலாதாரம், Getty Images

குல் பஹார் செல்வதற்காக ராவி நதியின் கால்வாயில் பாலம்

திருமண விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன் பிறகு அரச தம்பதிகள் அமிர்தசரஸில் இருந்து லாகூர் புறப்பட்டனர். ஆனால், லாகூருக்குள் நுழைவதற்கு முன், ராவி ஆற்றின் ஒரு சிறிய பகுதி அவர்களின் பாதையில் தடையாக இருந்தது.

"அதை நடந்தே கடந்து சென்றிருக்கலாம், ஆனால் குல் பஹார் இப்போது லாகூர் ராணி. ராணி பல்லக்கில் இருந்து இறங்கி, நடந்தே ஆற்றைக் கடக்க முடியுமா? குல் பஹார் அதற்கு மறுத்துவிட்டார். எனவே, அவருக்காக ஒரு பாலம் அமைக்கப்பட்டு, அதன் வழியாக குல் பஹார் கடந்து சென்றதாகக் கூறுபவர்களும் உண்டு" என்று இக்பால் கைசர் கூறுகிறார்.

பின்னாளில் இந்தப் பாலம் 'கஞ்சரி பாலம்' எனப் புகழ் பெற்றது. அதன் ஒரு பகுதி இன்றும் உள்ளது. மேலும் இந்தப் பாலம் 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான், இந்தியா இடையிலான போரின்போது பெரும் விவாதப் பொருளானது என்பதும் இக்பால் கைசரின் கூற்று.

வரலாறு, சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங், இந்தியா, பாகிஸ்தான், பஞ்சாப்
படக்குறிப்பு, கல்லறையின் உள்ளே கூரை மற்றும் சுவர்களில் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகள் நேற்று செய்யப்பட்டவை போல் இன்னும் உள்ளன.

தனது கல்லறையை தானே அமைத்த குல் பஹார்

குல் பஹாரை திருமணம் செய்துகொண்ட 8 ஆண்டுகளில் மகாராஜா ரஞ்சித் சிங் காலமானார். சிறிது காலத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் பஞ்சாபை முழுமையாகக் கைப்பற்றினர்.

ரஞ்சித்தின் வாரிசாக அவரது மகன் திலீப் சிங் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ரஞ்சித் சிங்கின் கடைசி மனைவி ஜிந்தா நாடு கடத்தப்பட்டார். குல் பஹாருக்கு குழந்தைகள் இல்லை. எனவே, அவரிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.

மகாராஜாவின் மனைவி என்பதால், ராணி குல் பஹாருக்கு மாதாந்திர உதவித் தொகையாக சுமார் ஆயிரத்து இருநூறு ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.

ராணி குல் பஹார், சர்தார் கான் என்ற முஸ்லிம் சிறுவனை தத்தெடுத்தார். 1851ஆம் ஆண்டில், குல் பஹார் லாகூரில் உள்ள பண்டைய மியானி சாஹிப் கல்லறை போலத் தனக்கென ஒரு தோட்டத்தைக் கட்டித் தனது கல்லறையையும் அங்கு அமைத்ததாக இக்பால் கூறுகிறார்.

அதன் சுவர்களில் உள்ள சிற்பங்கள் அழிந்து விட்டன. ஆனால், கல்லறையின் உள்ளே கூரை மற்றும் சுவர்களில் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகள் நேற்று செய்யப்பட்டவை போல் இன்னும் உள்ளன.

வரலாறு, சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங், இந்தியா, பாகிஸ்தான், பஞ்சாப்

இந்தத் தோட்டம் அமைக்கப்பட்டு சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ராணி குல் பஹாரும் உயிரிழக்கவே, இந்தக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

"இந்தக் கல்லறைக்குள் இருக்கும் ஓவியங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. ஏற்கெனவே முகலாயர்களின் காலம் நடந்து கொண்டிருந்தது. சீக்கிய அம்சங்களும் இதில் இணைந்து, இந்தக் கல்லறையில் தத்தம் சுவடுகளைப் பதித்துள்ளன," என்று இக்பால் கூறுகிறார்.

பாக் குல் பேகம் என்ற தோட்டம் இன்றும் அதே இடத்தில் உள்ளது. ஆனால், அது மிகவும் பாழடைந்துள்ளது. ஒரு காலத்தில் லாகூரின் ராணியாக இருந்தவரின் கல்லறை இன்று சிதிலமடைந்துள்ளது என்று இக்பால் வேதனையடைகிறார்.

வரலாறு, சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங், இந்தியா, பாகிஸ்தான், பஞ்சாப்
படக்குறிப்பு, பாக் குல் பேகம் என்ற தோட்டம் இன்றும் அதே இடத்தில் உள்ளது, ஆனால், அது மிகவும் பாழடைந்துள்ளது.

குல் பஹார் பேகத்திற்குப் பெருமளவு சொத்து இருந்ததாகவும் அதை நிர்வகிக்கத் தனக்கென சொந்தமாக கருவூலத்தை அவர் வைத்திருந்ததாகவும் கூறும் இக்பால், தாமே நிர்வகித்து வந்த அந்தக் கருவூலம் அவரது மறைவுக்குப் பிறகு வளர்ப்பு மகன் சர்தார் கானின் நிர்வாகத்திற்குக் கீழ் வந்ததாகவும் இக்பால் தெரிவிக்கிறார்.

இந்தத் தோட்டம் இருக்கும் இடத்தைச் சுற்றி சர்தார் கானின் குடும்பம் இன்னும் வாழ்கிறது. பாக் குல் பேகம் என்ற அந்தத் தோட்டமும் அவர்களுக்குச் சொந்தமானது.

இந்தப் பகுதியும் அதன் சுற்றுப்புறங்களும் குல் பேகம் என்றே அழைக்கப்படுகிறது. தோட்டத்தின் நடுவில் உள்ள ஒரு வளாகத்தில் சர்தார் கானின் கல்லறையும் உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு