காயமடைந்த பாலத்தீனரை ஜீப்பில் கட்டி வைத்த இஸ்ரேல் ராணுவம் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், ராபர்ட் பிளம்மர்
- பதவி, பிபிசி நி
காயமடைந்த பாலத்தீனர் ஒருவரை ஜீப்பில் கட்டிவைத்ததன் மூலம் தங்கள் பாதுகாப்புப் படையினர் நெறிமுறைகளை மீறியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.
மேற்குக் கரையில் உள்ள ஜெனின் நகரில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையின் போது இதைச் செய்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) இதனை உறுதி செய்துள்ளது.
சோதனையின் போது துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் காயமடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆம்புலன்ஸ் ஒன்றைக் கேட்டபோது ராணுவத்தினர் வந்து அவரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டி அழைத்துச் சென்றதாக காயமடைந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பின்னர் இந்த நபர் சிகிச்சைக்காக செம்பிறை (Red Crescent) இயக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது குறித்து விசாரணை நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அந்நபர் உள்ளூரை சேர்ந்த முஜாஹத் ஆஸ்மி என, ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இஸ்ரேலிய ராணுவம் என்ன சொன்னது?
இஸ்ரேலிய ராணுவம் இதுதொடர்பான அறிக்கையில், "வாடி புர்கின் பகுதியில் தேடப்படும் சந்தேக நபர்களைக் கைது செய்ய நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது (சனிக்கிழமை, ஜூன் 22) இஸ்ரேலிய படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், அதற்கு பதிலடியாக இஸ்ரேலிய படையினருபடையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்," என தெரிவித்துள்ளது.
"துப்பாக்கிச் சூட்டின் போது, சந்தேக நபர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். உத்தரவுகள் மற்றும் வழக்கமான நடைமுறைகளை மீறி, சந்தேக நபர் ஒரு வாகனத்தில் கட்டி அழைத்துச் செல்லப்பட்டார்," என தெரிவித்துள்ளது.
அந்த வீடியோவில் பதிவாகியுள்ள சம்பவம் இஸ்ரேல் ராணுவத்தின் மாண்புகளின்படி இல்லை என்றும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மறுபுறம், அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு காஸா பகுதியில் போர் தொடங்கியதிலிருந்து, மேற்குக் கரையில் வன்முறை அதிகரித்துள்ளது.
கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக் கரையில் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல்வேறு சம்பவங்களில் இதுவரை 480 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேற்குக் கரையில் 6 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 10 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், Reuters
38 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டனர்
கடந்த சனிக்கிழமையன்று காஸா நகரில் உள்ள கட்டடங்கள் மீது இஸ்ரேல் நடத்திய இரண்டு தனித்தனி வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.
ஹமாஸ் ராணுவக் கட்டமைப்புகள் மீது போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது பற்றிய கூடுதல் தகவல்கள் பின்னர் வழங்கப்படும்.
காஸாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அகதிகள் முகாமான அல்-ஷட்டி பகுதியின் குடியிருப்புப் பகுதியில் பல தாக்குதல்கள் இடம்பெற்றதாக காஸா குடிமை பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
அல்-துஃபா பகுதியில் உள்ள பல வீடுகளை குறிவைத்து மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
புழுதி மற்றும் குப்பைகள் நிறைந்த சாலையில் காயமடைந்தவர்களை மக்கள் சுமந்து செல்வதை வீடியோ காட்சிகள் காட்டுகிறது, மேலும் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பலி எண்ணிக்கை 42 என, முன்பு வெளியான செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்தத் தாக்குதல்களில் மூத்த ஹமாஸ் அதிகாரிகள் குறிவைக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
காஸா நகரின் குடிமை பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஹுசைன் முஹைசென் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம், இந்த தாக்குதல் நிலநடுக்கத்தின் விளைவை ஒத்திருந்ததாக கூறினார்.
"முழு பகுதியும் குறிவைக்கப்பட்டது, வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பல குடும்பங்கள் இன்னும் இடிபாடுகளில் புதைந்துள்ளன," என்று அவர் கூறினார்.
"காயமடைந்தவர்களில் சிலர் பாப்டிஸ்ட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆம்புலன்ஸ்களுக்கான உபகரணங்கள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது,” என்றார்
குறிவைக்கப்பட்ட ஹமாஸ் உயர்மட்டத் தளபதிகள்

பட மூலாதாரம், Getty Images
காஸாவில் ஹமாஸின் உயர்மட்ட தளபதி ராத் சாத்-ஐ கொல்ல இஸ்ரேலிய ராணுவம் முயற்சித்துள்ளதாக, இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸின் பல நடவடிக்கைகளின் தலைவராகவும் அவர் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், லெபனானுக்குள் வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் மூத்த உறுப்பினரையும் அல் ஜமால் அல் இஸ்லாமியாவுடன் தொடர்புடைய உறுப்பினரையும் கொன்றதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் படி, ஹமாஸ் தளபதி அய்மன் காட்மா ஹமாஸுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு பொறுப்பானவர். கைரா நகருக்கு அருகே காரில் சென்று கொண்டிருந்த போது காட்மா ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கானார்.
சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய ராணுவம் தெற்கு காஸாவின் அல்-மசாவி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு பற்றிய ஆரம்ப விசாரணையில் "செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது இஸ்ரேல் ராணுவத்திதின் நேரடித் தாக்குதல் எதுவும் இல்லை," என தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் முன்வைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7-ஆம் தேதி அன்று, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் காஸாவிற்கு பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
இதற்குப் பிறகு தொடங்கிய காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 37,551 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் இறுதி வரை கொல்லப்பட்டவர்களில் 14,680 குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












