ஓரின சேர்க்கையாளர்களை எப்போதும் வாட்டும் 'அந்த பயம்'

ஓரின சேர்க்கையாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சுஷீலா சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"நான் என் பார்ட்னருடன் வாழ்கிறேன். ஒரு நாள் கூட பயத்தின் நிழல் இல்லாமல் கழிந்ததில்லை. ஓரின சேர்க்கை குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 'அலிகர்' என்ற திரைப்பத்தில் காட்டியது போல யாராவது வீட்டிற்குள் நுழையக்கூடும் என்ற அச்சம் இருக்கிறது. ஏழாண்டு சிறை தண்டனை கிடைப்பதான கனவுகூட எனக்கு வருவதுண்டு."

கடந்த 18 ஆண்டுகளாக மும்பையில் தனது துணையுடன் வசிக்கும் டாக்டர் பிரசாத் ராஜ் தாண்டேகர் கூறிய வார்த்தைகள் இவை.

தனது துணையைப் பற்றி குடும்பத்தினருக்கு தெரியும் என்றாலும்கூட தங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பயம் 24 மணி நேரமும் தன்னை அச்சுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

"ஆவணங்களின்படி என் பார்ட்னர் என்னுடைய நண்பர். நான் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ, அவர் எனக்காக எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஏனென்றால் அவருக்கு சட்டப்பூர்வ உரிமைகள் இல்லை. நான் அவருடன் இவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாலும்கூட இதுதான் உண்மை. நான் விரும்பும் நபர் என்னை கவனித்துக் கொள்ள வேண்டும், என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் என் துணைக்கு அந்த அங்கீகாரம் இல்லை,"என்று அவர் குறிப்பிட்டார்.

”எங்களைப் போன்றவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுப்பது, வீடு வாங்குவது மற்றும் குழந்தையை தத்தெடுப்பதில் கூட சிக்கல்கள் உள்ளன,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் மனநலம் பற்றிய விழிப்புணர்வு வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தின் பெரும் பகுதியினர் மனநலம் மற்றும் அவர்களின் சிவில் உரிமைகள் பற்றி அறியாமல் இருக்க விரும்புகிறார்கள் என்று இந்திய மனநல சங்கத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் கூறுகின்றனர்.

ஓரினச்சேர்க்கையாளர்களும் பாலியல் ரீதியாக சாதாரண மனிதர்கள்தான். இது ஒரு பிறழ்வு அல்லது நோய் அல்ல என்று சமீபத்தில் இந்திய மனநல மருத்துவர் சங்கம் (ஐபிஎஸ்) கூறியுள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்களையும் நாட்டின் சாமானியர்களைப் போல நடத்த வேண்டும் என்று ஐபிஎஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

”ஒரு குடிமகனுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, வீடு, அரசு அல்லது ராணுவத்தில் வேலை, சொத்துரிமை, திருமணம், தத்தெடுப்பு ஆகியவற்றில் எப்படி உரிமை உள்ளதோ, அதே உரிமை இந்தப்பிரிவு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் இவர்களால் செய்ய முடியாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த உரிமைகளை வழங்குவதில் அவர்களிடம் பாரபட்சம் காட்டினால் அது அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்,” என்று அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது..

இந்தியாவின் ஐந்து மண்டலங்களான மத்திய, கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களை சேர்ந்த மனநல மருத்துவர்கள் இந்த சங்கத்தில் உள்ளனர். இவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.

இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் இரண்டாவது பெரிய சங்கமாகும். இது 8000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த சங்கம் ஓரினச்சேர்க்கையை குற்றத்தின் வகையிலிருந்து அகற்றுவதை ஆதரித்தது.

ஓரின சேர்க்கையாளர்களின் மனநலம்

ஓரின சேர்க்கையாளர்கள்

பட மூலாதாரம், LAKSHMI PRASAD

2018 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை குற்றத்தின் பிரிவில் இருந்து அகற்றியது. ஆனால் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான மனுக்கள் இந்த மாதம் அரசியலமைப்பு அமர்வால் விசாரிக்கப்பட உள்ளன.

”இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரட்டை வாழ்க்கை நடத்துகிறார்கள். இது அவர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது,” என்று லக்னெளவைச் சேர்ந்த டாக்டர் எம் அலீம் சித்திக்கி கூறினார்.

”சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினர் அதாவது குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் போன்றோரின் மனநலம் குறித்து இந்த சங்கம் தொடர்ந்து ஆய்வு செய்கிறது. இவர்கள் தொழில் ரீதியாக எவ்வளவு வெற்றி பெற்றாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர்களுடைய ஆசைகள் நிறைவேறுவதில்லை என்பதை நாங்கள் கண்டோம்,” என்று அவர் குறிப்பிட்டார்..

”இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பாலியல் விருப்பம் அல்லது போக்கைப் பற்றி குடும்பத்திற்குச் சொல்ல முடிவதில்லை. சொல்ல முற்படும்போது, அவர்களின் வாய் அடைக்கப்படுகிறது அல்லது அவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்,” என்று டாக்டர் அலீம் சித்திக்கி சுட்டிக்காட்டினார்.

"அப்படிப்பட்டவர்கள் மனநலப் பிரச்சனைகளுடன் வரும்போது அவர்களை மூன்று முதல் நான்கு முறை சந்தித்த பிறகே தங்களின் உண்மையான பிரச்சனை தங்களுடைய ‘அடையாளம்’ தொடர்பானது என்றும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை, இதுவே தங்களின் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்றும் கூறுகிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் டாக்டர் அல்கா சுப்ரமணியம், "இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாகுபாட்டுக்கு ஆளாகிறார்கள். கேலி செய்யப்படுகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தங்களைப் பற்றி அவர்கள் வெளிப்படையாக பேசும்போது அது தவறு என்று சுட்டிக்காட்டப்படுகிறது,” என்று கூறினார்.

"அத்தகைய சூழ்நிலையில் இவர்கள் அடக்கிவைக்கப்படுவது போல உணர்கிறார்கள். பயத்துடனும் அச்சத்துடனும் இருக்கிறார்கள். மனச்சோர்வு மற்றும் மன உளைச்சலுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள். தற்கொலைகளும் நடக்கின்றன. ஆனால் தற்போது இவை குறைந்துள்ளன,” என்று டாக்டர் அல்கா விளக்கினார்.

"இந்திய இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஓரின சேர்க்கை குற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பல நிறுவனங்கள் தங்கள் பன்முகத்தன்மை திட்டத்தின் கீழ் இதுபோன்ற சமூகத்திலிருந்து வருபவர்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளன. இதுபோன்ற முற்போக்கான நடவடிக்கைகள் சமூகத்திற்கு மிகவும் முக்கியம்,” என்றார் அவர்.

தத்தெடுப்பு உரிமை

ஓரின சேர்க்கையாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

ஓரின சேர்க்கையாளர்களுக்கு திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை வழங்குவது குறித்து சங்கம் ஒரு மாதம் ஆலோசனை கலப்புகளை நடத்தியதாக ஐபிஎஸ் துணைத் தலைவர் டாக்டர் லட்சுமி காந்த் ராட்டி கூறுகிறார்.

ஓரின சேர்க்கையாளர்களுக்கு திருமணம் செய்துகொள்ளும் உரிமை கிடைத்த பிறகுதான் குழந்தையை தத்தெடுக்கும் உரிமை பற்றிப் பேச வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இதனுடன் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.

”ஓரின சேர்க்கையாளர்களுக்கு திருமணம் செய்துகொள்ளும் உரிமை கிடைத்தபிறகு அவர்கள் மூன்று ஆண்டுகள் இந்த பந்தத்தில் தொடர்கிறார்களா என்று பார்க்க வேண்டும். திருமண பந்தம் தொடரமுடியாமல் போனால் அல்லது ஏதோ ஒரு நிகழ்வால் குழந்தை ஆதரவற்றதாக ஆகிவிட்டால், சமூகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் குழந்தையை கவனித்துக்கொள்வார் என்று இந்த திருமணத்தின்போது இந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் உறுதிமொழி கொடுக்கவேண்டும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவர்களைப்போன்றவர்களை உறவினர்கள் ஒதுக்கி வைத்துவிடுகின்றனர். ஆனால் ஓரினச்சேர்க்கை சமூகத்தில் உள்ளவர்கள் தங்களிடையே மிகவும் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளனர். குழந்தையின் வளர்ப்பில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக இத்தகைய உறுதிமொழிப்பத்திரம் அவசியமாகிறது,” என்றார் அவர்.

”ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொண்டு குழந்தையை தத்தெடுக்கும் உரிமை உள்ள அமெரிக்கா, கனடா போன்ற பல நாடுகளில் நாங்கள் ஆய்வுகளை மேற்கொண்டோம்,” என்கிறார் டாக்டர் அல்கா.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இந்த உரிமையை வழங்குவதால், அது சமூகத்தையோ அல்லது குழந்தைகளையோ பாதித்துள்ளது என்று எதிர்மறையான தரவு எதுவும் கண்டறியப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரே பாலின திருமணத்தை ஏற்கும் நாடுகள்

ஓரின சேர்க்கையாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

உலகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓரே பாலின திருமணம் சட்டப்பூர்வமாக உள்ளது. ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமானது என்று அறிவித்த ஆசியாவின் முதல் நாடாக தைவான் ஆகியுள்ளது.

2001 ஆம் ஆண்டு ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய உலகின் முதல் நாடு நெதர்லாந்து.

சில நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு திருமணம் செய்துகொள்ளும் உரிமை நீதிமன்றத்தின் வாயிலாக பொதுவாக்கெடுப்பு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை அடங்கும்.

கூடவே பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஸ்வீடன், டென்மார்க், ஐஸ்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: