புல்லட் ரயில், வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் என ரயில்வேயின் கவனம் திசை திரும்பியதே தொடரும் விபத்துகளுக்கு காரணமா?

ஒடிஷா ரயில் விபத்து ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா
    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஒடிஷா மாநிலம் பாலசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்திற்குச்சென்ற பிரதமர் நரேந்திர மோதி குற்றம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

"நேற்று மாலை ஒரு கோர விபத்து நடந்தது. தாங்க முடியாத வேதனையை நான் உணர்கிறேன். இந்த பயணத்தில் பல மாநிலங்களின் மக்கள் எதோ ஒன்றை இழந்துள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து மிகவும் வேதனையானது. மனதை வருத்துகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

கொல்கத்தா -சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சர் எம் விஸ்வேஸ்வரய்யா-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்றும் பாலசோரில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை மோதிக்கொண்டன.

இந்த விபத்து எந்த சூழ்நிலையில் நடந்தது என்று இன்னும் முழுமையாக தெரியவில்லை.

இந்த விபத்தில் இதுவரை 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்துக்குப் பிறகு இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து தீவிரமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ரயில்வே அமைச்சர் பதவி விலக கோரிக்கை

ஒடிஷா ரயில் விபத்து ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா

பட மூலாதாரம், ANI

விபத்துக்குப் பிறகு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

“எதிர்க்கட்சித் தலைவர்களை உளவு பார்ப்பதற்காக மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவழிக்கிறது. ஆனால் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க ரயில்களில் மோதல் தடுப்பு சாதனங்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை புறக்கணிக்கிறது” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி கூறினார்.

”அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் புதிதாக கட்டப்பட்ட ரயில் நிலையங்களை அரசு காட்டிக் கொள்கிறது. ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை புறக்கணிக்கிறது. ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்..” என்றார் அவர்.

காங்கிரஸ் கட்சி கேள்வி

அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் அதிரஞ்சன் செளத்ரியும் அரசு மீது கேள்வி எழுப்பியுள்ளார்.

“பயணிகளை பாதுகாப்பாக அவர்கள் இலக்கை அடையவைக்க தேவையான அடிப்படை கட்டமைப்புகள், கீழ் மட்டத்தில் தேவைப்படும் விஷயங்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்திய ரயில்வேயில் தினமும் சராசரியாக 25 லட்சம் பேர் பயணிக்கின்றனர். புல்லட் ரயில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் அரசு முதலீடு செய்கிறது. பயணிகளின் பாதுகாப்பில் ரயில்வே குறைந்த கவனம் செலுத்துகிறது,” என்று அவர் சொன்னார்.

அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே,“பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் கேட்க பல கேள்விகள் உள்ளன. ஆனால் இப்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிதான் உடனடித்தேவை,” என்றார்.

விசாரணை நடத்தக் கோரும் லாலு

ஒடிஷா ரயில் விபத்து ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா

பட மூலாதாரம், PTI

விபத்து குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைப்பை சீரழித்தவர்களை தப்ப விடக்கூடாது என கூறியுள்ளார்.

“சென்னைக்கு செல்லும் கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் ஒரு அதிவேக ரயில். இந்த ரயிலில் நானும் பயணித்திருக்கிறேன். எப்படி அலட்சியம் காட்டப்பட்டது, எப்படி இவ்வளவு பெரிய விபத்து நடந்தது என்பதை விசாரித்து அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வேயை சீரழித்துவிட்டனர்,” என்று அவர் கூறினார்.

இந்த விபத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சில அரசியல் கட்சிகள் ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரி வருகின்றன.

இந்தியாவில் ரயில்வே அமைச்சர்கள் ராஜினாமா செய்த பழைய உதாரணங்களை மேற்கோள் காட்டி பலர், ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோருகின்றனர்.

விபத்துக்குப் பிறகு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை இரவே சம்பவ இடத்துக்குச் சென்றார். சம்பவ இடத்திற்கு அருகில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஆனால் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்வது உண்மையில் நிலைமையை மேம்படுத்துமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

நீண்ட காலமாக ரயில்வே குறித்து செய்திகளை எழுதிவரும் மூத்த செய்தியாளர் ஷிஷீர் சோனி, அமைச்சரின் ராஜினாமாவுக்கும் பாதுகாப்பு மேம்பாட்டிற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று கருதுகிறார்.

ஒடிஷா ரயில் விபத்து ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா

பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களை வேகமாக செயல்படுத்துவதே இப்போதைய தேவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"நீண்ட காலத்திற்குப் பிறகு இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கிறது. 1981-க்குப் பிறகு இப்போது மூன்று ரயில்கள் மோதியிருக்கின்றன. இந்தியாவில் ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக நிறைய வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது" என்கிறார் சோனி.

"தேசிய ரயில் திட்டத்தின் கீழ் ரயில்வேயில் விபத்துகளை தடுக்க பிரதமர் நரேந்திர மோதியும் பெரும் தொகையை ஒதுக்குவது குறித்து யோசனை தெரிவித்துள்ளார். இதன் கீழ் ஒவ்வொரு ரயிலிலும் மோதல் தடுப்பு கருவிகள் பொருத்தப்பட உள்ளன. ஆனால் அதன் டெண்டர் இதுவரை வெளியிடப்படவில்லை," என்று அவர் தெரிவித்தார்.

"டெண்டர் வழங்குவதற்கான காலக்கெடு இரண்டு ஆண்டுகள் மற்றும் டெண்டர் எடுக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த சாதனங்களை இந்தியாவின் முழு ரயில் நெட்வொர்க்கிலும் நிறுவ வேண்டும். இதை நிறுவ நீண்ட காலம் ஆகும். பாதுகாப்பு குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார் சோனி.

அதேநேரம் அறுதிப் பெரும்பான்மையுடன் இருக்கும் அரசு எந்த அழுத்தத்தையும் உணரவில்லை. அதனால்தான் அதன் அமைச்சர்கள் ராஜினாமா செய்வதில்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

இந்த அரசும் அதன் அமைச்சர்களும் எந்தவிதமான தார்மீக அழுத்தத்தையும் உணரவில்லை. இந்த நிலை துரதிர்ஷ்டவசமானது. முன்பு லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார். நிதிஷ் குமாரும் ராஜினாமா செய்தார். முன்பு அமைச்சர்கள் சுயபொறுப்பை உணர்ந்தார்கள். ஆனால் இந்த அறநெறி இந்த அரசில் இருப்பதாகத் தெரியவில்லை," என்று மூத்த பத்திரிக்கையாளர் ஜெய்சங்கர் குப்தா கூறினார்.

நெருக்கடி அதிகரித்தால் ரயில்வே அமைச்சர் பதவி விலகுவாரா?

ஒடிஷா ரயில் விபத்து ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா

பட மூலாதாரம், Getty Images

"இந்த அரசில் ராஜினாமா என்று எதுவும் இல்லை. அப்படிப்பட்ட மரபு எதுவும் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் அமைச்சர் ராஜினாமா செய்ய மாட்டார் என்றே கூறலாம். வேறு காரணங்களுக்காக அவர் நீக்கப்பட்டால் அது வேறு விஷயம்," என்று ஜெய்சங்கர் குப்தா குறிப்பிட்டார்.

ஆனால் இவ்வளவு பெரிய விபத்து நடந்த பிறகு ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை அறிவித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

"மூன்று ரயில்கள் பயங்கரமாக மோதின. ஆனால் யாரும் தார்மீக பொறுப்பேற்கவில்லை. சமீப ஆண்டுகளில் ரயில்வேயின் கட்டணம் அதிகரித்துள்ளது, ஆனால் பயணிகளின் பாதுகாப்பு குறைந்துள்ளது, ஏனெனில் பொறுப்பு ஏற்கல் என்று எதுவும் இல்லை,"என்றார் அவர்.

கவச் அமைப்பு பற்றிய கேள்வி

இந்த விபத்திற்குப் பிறகு ரயில்வே பாதுகாப்பில் ஒரு முன்னோடி திட்டமான கவச் சிஸ்டம் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பியுள்ளன.

2022 மார்ச் மாதம் கவச் அமைப்பை அறிமுகப்படுத்தியபோது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த பாதுகாப்பு அமைப்பு ஐரோப்பிய அமைப்பை விட சிறந்தது என்று கூறியிருந்தார்.

"கவச் என்பது தானியங்கி ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பம். இரண்டு ரயில்கள் தற்செயலாக ஒரே ரயில் பாதையில் வந்தால் மோதுவதற்கு முன் கவச் அமைப்பு தானாக பிரேக்கை போட்டுவிடும்" என்று ரயில்வே அமைச்சர் கூறியிருந்தார்.

நேருக்கு நேர் வந்த ரயிலில் அமர்ந்து இந்த சிஸ்டத்தை சோதித்த அஷ்வினி வைஷ்ணவ், "நானே ஒரு பொறியாளர். எனக்கு தொழில்நுட்பத்தில் நம்பிக்கை இருந்தது, அதனால் இந்த ரிஸ்க் எடுத்தேன்," என்றார்.

இந்த வழித்தடத்தில் கவச் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்று ஒடிஷா விபத்துக்குப் பிறகு ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா கூறினார்.

சமீப ஆண்டுகளில் பிரதமர் மோதியின் கனவுத் திட்டமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும், பிற ரயில்கள் மற்றும் பாதுகாப்பு, புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

"தற்போது ரயில்வே அமைச்சர் மற்றும் ஒட்டுமொத்த ரயில்வேயின் கவனமும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது உள்ளது. ரயில் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவில்லை. விபத்துகள் நடக்கின்றன, செய்திகள் வெளியிடப்படுகின்றன, ஆனால் யார் மீதும் பொறுப்பு சுமத்தப்படுவதில்லை. அவை பற்றி விவாதிக்கப்படுவதும் இல்லை." என்று ஜெய்சங்கர் குப்தா கூறினார்.

"தற்போது ரயில்வேயின் முழு கவனமும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மீது உள்ளது, அதன் கட்டணம் மற்ற ரயில்களை விட மிக அதிகம்,” என்கிறார் குப்தா.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கவனமா?

ஒடிஷா ரயில் விபத்து ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா

பட மூலாதாரம், Getty Images

இந்திய ரயில்வேயில் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்தும் கடந்த காலங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

2022 டிசம்பர் வரை ரயில்வேயின் எல்லா மண்டலங்களையும் சேர்த்து 2,98,973 பணியிடங்கள் காலியாக உள்ளதாக மாநிலங்களவையில் அளித்த பதிலில் அரசு தெரிவித்திருந்தது.

"ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனாலும் பாதுகாப்பு பலவீனமடைகிறது. நாட்டின் குடிமக்கள் ரயில் விபத்துகளில் இறந்தால், அதற்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும்," என்கிறார் ஜெய்சங்கர் குப்தா.

அதே நேரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் மீதுதான் ரயில்வே தனது முழு கவனத்தையும் செலுத்துகிறது என்று ஷிஷீர் சோனி கருதுகிறார்.

"ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைப்பதால்தான் வந்தே பாரத் ரயிலைப் பற்றி இவ்வளவு அதிகம் பேசப்படுகிறது. அது ஊடகங்களில் பெரும் கவரேஜையும் பெறுகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரதமரே கலந்து கொள்கிறார், அதனால் அரசியல் தாக்கங்களும் உள்ளன. பிரதமரின் கவனம் காரணமாக ரயில்வே துறை தனது முழு கவனத்தையும் இதன் மேல் செலுத்தி வருகிறது,” என்று சோனி கூறினார்.

"வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஓடத் தொடங்கியதும் அரசின் முழு கவனமும் அதன்மீது மாறியது. பயணிகளின் பாதுகாப்பு குறித்து அரசு முதலில் வேலை செய்திருக்க வேண்டும். அதன் பிறகு வந்தே பாரத் படிப்படியாக கொண்டு வரப்பட்டிருக்கலாம்," என்கிறார் சோனி.

இருப்பினும் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்திய ரயில்வே மிகவும் மேம்பட்டுள்ளதாக ஷிஷீர் சோனி கூறுகிறார்.

"கடந்த சில ஆண்டுகளில், ரயில்வே தனது நெட்வொர்க்கை மேம்படுத்துவதற்காக நிறைய வேலைகளைச் செய்துள்ளது. கொரோனா தொற்றுநோய் நேரத்தில் ரயில்வேக்கு இதைச் செய்ய நேரம் கிடைத்தது. இதுபோன்ற சூழ்நிலையில் இந்திய ரயில்வே பாதுகாப்பு திசையில் மேம்பட்டுள்ளது என்றே சொல்லலாம்,” என்றார் அவர்.

விபத்து குறித்து விசாரணையால் பலனில்லை

ஒடிஷா ரயில் விபத்து ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா

பட மூலாதாரம், Getty Images

இந்திய ரயில்வேயின் விபத்து நெறிமுறையின் கீழ் ஒவ்வொரு ரயில் விபத்தும் விசாரிக்கப்பட்டு அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்திய ரயில்வேயில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரயில்வே பாதுகாப்பு ஆணையம் உள்ளது. இது ரயில்வே அமைச்சகத்தைச் சாராமல், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

இந்த ஆணையத்தின் பொறுப்புகள்-

  • பயணம் தொடங்கும் முன் ஒவ்வொரு ரயில் பாதையின் பாதுகாப்புச் சோதனை
  • ரயில் பாதைகளை அவ்வப்போது ஆய்வு செய்தல்
  • பயணிகள் ரயில்களின் இயக்கத்தை மேம்படுத்தும் புதிய பணிகள் மற்றும் புதுப்பித்தல்களுக்கான அனுமதி வழங்கல்.
  • விபத்துகளை ஆய்வு செய்தல்

ரயில்வே விபத்துகளை விசாரிப்பதற்கான விதிகள் உள்ளன. ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 13 இன் கீழ் ஒவ்வொரு பெரிய விபத்துக்குப் பிறகும் விசாரணை கட்டாயமாகும்.

இந்தியாவில் ரயில் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவை குறித்து விசாரணையும் நடத்தப்படுகிறது. ஆனால் கடுமையான நடவடிக்கைக்கு சில உதாரணங்களே உள்ளன.

"ஒவ்வொரு விபத்துக்கு பிறகும் நடக்கும் விசாரணையின் முடிவுகள் என்ன, அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது ஒரு போதும் வெளியிடப்படுவதில்லை. அடுத்த விபத்து நடக்கும் வரை மக்கள் விபத்தை மறந்து விடுகிறார்கள். விபத்து குறித்த எண்ணம் மக்கள் மனதில் இருந்து ஆறு மாதங்களில் சென்றுவிடுகிறது. ஒரு வருடத்திற்குள் விபத்து நடந்தது என்பதையே அவர்கள் மறந்தேவிடுகிறார்கள். தொடர்ந்து கேள்விகளை எழுப்புவது மற்றும் அதை பின்தொடரும் பொறுப்பு செய்தியாளர்களுக்கும் உள்ளது. ஆனால் அவ்வாறு நடப்பதில்லை," என்று ஷிஷீர் சோனி கூறுகிறார்.

முந்தைய விபத்துகளின் விசாரணை அறிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால், சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், விபத்துகளின் எண்ணிக்கை குறைத்திருக்கும் என்று சோனி தெரிவித்தார்.

ராஜினாமா செய்த முன்னாள் ரயில்வே அமைச்சர்கள்

ஒடிஷா ரயில் விபத்து ரயில்வே துறை அமைச்சர் ராஜினாமா

பட மூலாதாரம், Getty Images

  • 1956- லால் பகதூர் சாஸ்திரி

1956 ஆகஸ்டில் ஆந்திர பிரதேசத்தில் மஹ்பூப்நகரில் நேரிட்ட ரயில் விபத்தில் 112 பேர் இறந்த பிறகு, அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு, 1956 நவம்பரில், தமிழகத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 144 பேர் உயிரிழந்தனர். இந்தமுறை லால் பகதூர் சாஸ்திரி தனது ராஜினாமாவுடன் அதை விரைவில் ஏற்கும்படி வேண்டுகோளும் விடுத்தார்.

அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. லால் பகதூர் சாஸ்திரியின் இந்த ராஜினாமா இந்திய அரசியலின் தார்மீகப் பொறுப்பின் சிறந்த உதாரணமாக முன்வைக்கப்படுகிறது.

  • 1999- நிதிஷ் குமார்

அதன் பிறகு பல ரயில் விபத்துகள் தொடர்ந்து நடந்தன. ஆனால் எந்த அமைச்சரும் ராஜினாமா செய்யவில்லை.

43 ஆண்டுகளுக்குப் பிறகு 1999-ம் ஆண்டு அசாமின் கெய்சல் ரயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று நிதிஷ்குமார் பதவி விலகினார். இந்த விபத்தில் 290 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை இரண்டு ரயில்வே அமைச்சர்களின் ராஜினாமாக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன. ஆனால் ராஜினாமாக்கள் அளிக்கப்பட்டு வந்துள்ளன.

  • 2000- மமதா பானர்ஜி

2000 வது ஆண்டில் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் ரயில்வே அமைச்சரான மமதா பானர்ஜி, பஞ்சாபில் நடந்த ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய முன்வந்தார். அதை பிரதமர் நிராகரித்தார்.

  • 2017-சுரேஷ் பிரபு

2017 ஆம் ஆண்டில் அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்ட பல விபத்துக்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று தனது ராஜினாமாவை அறிவித்தார். அதை பிரதமர் நரேந்திர மோதி நிராகரித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: