மு.கருணாநிதி விட்டுச் சென்ற அரசியல் பாரம்பரியம் என்ன?

கருணாநிதி, திமுக, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நூறாவது ஆண்டு இது. தனது நீண்ட அரசியல் பயணத்தில் தமிழ் அரசியல் களத்தில் அவர் விட்டுச் சென்ற முக்கியமான தாக்கம் என்ன என்பதை ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

இந்திய அரசியல் களத்தில் அவ்வப்போது நிகழக்கூடிய பரபரப்பான திருப்பங்களின்போது, சமூக வலைதளங்களில் அடிக்கடி எழுதப்படும் வார்த்தை, "கருணாநிதி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா?" என்பதுதான். அவர் மறைந்து ஐந்தாண்டுகளாகப் போகிறது. இருந்தபோதும், தமிழக அரசியல் அரங்கில் பல தருணங்களில் திரும்பத்திரும்ப நினைவுகூரப்படுகிறார் மு. கருணாநிதி.

1938 பிப்ரவரி 27ல் காஞ்சிபுரத்தில் நடந்த முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்புக் குரல் மாநிலம் முழுவதும் பரவியது. திருவாரூரிலும் அதன் எதிரொலியைக் கேட்டு, அரசியல் களத்தில் இறங்கிய கருணாநிதி, 2016ஆம் ஆண்டின் இறுதியில் உடல்நலக் குறைவால் தனது செயல்பாடுகள் முடங்கும்வரை திராவிட அரசியலின் ஆணிவேராக நீடித்து நின்றார்.

கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுக்கு மேல் நீடித்த தனது அரசியல் பயணத்தில் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக அவர் ஏற்படுத்திய தாக்கமும் எழுப்பிய உரிமைக் குரல்களும், அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது வெற்றிடத்தை உணர வைக்கின்றன.

எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர், அரசியல் தலைவர் என பல களங்களில் செயல்பட்டவர் மு. கருணாநிதி. முதலமைச்சரான பிறகு மு. கருணாநிதி நடைமுறைப்படுத்திய சமூக நலத் திட்டங்கள், உருவாக்கிய புதிய கட்டமைப்புகள், மக்களுக்கான சலுகைகள், இலவசங்கள் ஆகியவற்றைவிட அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பும் வந்த பிறகும் நடத்திய போராட்டங்களுக்காகவே எப்போதும் நினைவுகூரப்படுவார்.

1953ஆம் ஆண்டில் திருச்சிக்கு அருகில் உள்ள கல்லக்குடி என்ற கிராமத்தின் ரயில் நிலையத்தின் பெயரை டால்மியாபுரம் என்று மாற்ற மத்திய அரசு முடிவெடுத்தது. இதனை வடஇந்திய மேலாதிக்கமாகக் காட்ட ஒரு பெரிய போராட்டத்தை நடத்த முடிவெடுத்த தி.மு.க., அந்தப் போராட்டத்தின் தலைவராக மு. கருணாநிதியை அறிவித்தது. இதில் அவருக்கு ஐந்து மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, ஆறு மாத கடுங்காவல் சிறை தண்டனையைப் பெற்றார். இந்த சம்பவத்தை தனது அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையாகக் குறிப்பிடுகிறார் கருணாநிதி.

கருணாநிதி, திமுக, தமிழ்நாடு
படக்குறிப்பு, கருணாநிதி

இதற்குப் பிறகு நெருக்கடி நிலை காலகட்டத்தில், ஒரு முதலமைச்சராக இருந்தபடி மத்திய அரசை அவர் தொடர்ந்து எதிர்த்து வந்ததும், ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் உள்ளிட்ட பாதுகாப்புக் கோரி வந்த தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததும் அவரது அரசு கலைக்கப்பட காரணமாக அமைந்தன. இதற்குப் பிறகு, பல சோதனைகளுக்கு நடுவில் 13 ஆண்டுகள் கட்சியை சிதறாமல் வழி நடத்தி, மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க வழிவகுத்தார் கருணாநிதி. இந்த போராட்ட குணம்தான் கருணாநிதியின் முக்கிய அடையாளம்.

முதலமைச்சர் அண்ணா மறைந்தபோது, திராவிட இயக்கத்தையும் தாண்டிய பேரிழப்பாக அமைந்தது. இருந்தாலும், அந்த இழப்பு தெரியாதபடி ஏழைகளுக்கும் சாமனியர்களுக்கும் ஆதரவான, மதவாதத்திற்கு எதிரான அண்ணாவின் கொள்கைகளின் அடிப்படையில் தனது கட்சியையும் ஆட்சிகளையும் வழிநடத்தினார் மு. கருணாநிதி.

மு. கருணாநிதி செயல்படுத்திய சமூகநலத் திட்டங்களைத் தாண்டி, அவர் வேறு ஒரு முக்கியமான விஷயத்திற்காக நினைவுகூரப்பட வேண்டியவர் என்கிறார் Karunanidhi: The definitive biography நூலின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான வாஸந்தி. "தற்போதைய சூழலில் அவர் மிகவும் தேவைப்படுகிறார். காரணம், "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" என்பதை முதலில் வலியுறுத்தியவர் அவர்தான். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மாதிரியான கல்வி என்ற குரல்கள் ஒலிக்கும் இந்த நேரத்தில் கருணாநிதியின் மாநில சுயாட்சிக் குரல் மிக முக்கியமானது. இந்த ஒரு விஷயத்திற்காக அவர் நிச்சயம் என்றென்றும் நினைவூகூரப்படுவார்.

கருணாநிதி, திமுக, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

கூட்டாட்சி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை சரியாகப் புரிந்துகொண்டவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் இந்தத் தத்துவம் சரியாக புரிந்துகொள்ளப்பட காரணம், அவர் போட்ட அடித்தளம்தான்" என்கிறார் வாஸந்தி.

இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி அமைவதில் மு. கருணாநிதி தொடர்ந்து ஆர்வம் காட்டினார். 1969ல் முதல்வராகப் பதவியேற்ற உடனேயே மத்திய - மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பகிர்வது குறித்து ஆராய, நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். 1971ல் அந்தக் குழு அளித்த பரிந்துரைகள் இப்போதும் கவனிக்கத்தக்கவையாக, தற்போது இந்தியாவில் பா.ஜ.க. அல்லாத மாநிலங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குத் தீர்வாக இருக்கின்றன.

வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு நீதிபதி வெங்கடாச்சலையா தலைமையிலும் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2010ல் நீதிபதி பூஞ்ச் தலைமையிலும் மத்திய - மாநில உறவுகள் பற்றி ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டன. இதன் பின்னணியில் தி.மு.கவின் அழுத்தம் இருந்தது.

மாநிலங்கள் சமமான கூட்டாளியாக கருதப்படும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்பது தி.மு.கவின் கோரிக்கைகளில் ஒன்று. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு யோசிப்பதாக கூறப்படும் நிலையில் கூட்டாட்சி தொடர்பாக கருணாநிதி முன்வைத்த சில கருத்துகள், இப்போதும் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. 1970ல் நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசிய மு. கருணாநிதி, மாநிலங்களவையைப் பொறுத்தவரை எல்லா மாநிலங்களில் இருந்தும் சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அம்மாதிரியான ஒரு ஏற்பாடு இந்தியாவில் தற்போது சாத்தியமில்லாத நிலையில், பல மாநிலக் கட்சிகளும் பிரதானமாக இடம்பெறக்கூடிய கூட்டணி அரசை அமைப்பதில் தி.மு.க. தொடர்ந்து ஆர்வம் காட்டியது. 80களின் இறுதியில் உருவான தேசிய முன்னணி, 1996ல் உருவான ஐக்கிய முன்னணி ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்ததன் மூலம், தனது கூட்டாட்சிக் கனவை சற்று ஆற்றிக்கொண்டார் மு. கருணாநிதி.

மாநிலங்களுக்கென தனியாகக் கொடி வேண்டும் எனப் பேசிய கருணாநிதி, அதில் முடிவெடுக்கப்படாத நிலையில், சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்களுக்கு கொடியேற்றும் அதிகாரம் வேண்டுமென வலியுறுத்தினார். அதனைப் பிரதமர் இந்திரா காந்தி ஏற்றதாலேயே இப்போது இந்தியா முழுவதும் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றுகின்றனர்.

கருணாநிதி, திமுக, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

திராவிட மாடல் என்ற ஆட்சி முறையை தற்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்வைத்துப் பேசுகிறார். ஆனால், இந்த திராவிட மாடலின் பெரும் சாதனைகளாகக் குறிப்பிடப்படுபவனவற்றில் மு. கருணாநிதியின் பங்கு மிகக் கணிசமானது.

கை ரிக்ஷாக்களை ஒழித்தது, குடிசைகளில் வசிப்போருக்கு வீடுகளைக் கட்டி அளிப்பதற்காக குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியது, அரசு நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடச் செய்தது, பிற்படுத்தப்பட்டோருக்கென தனி அமைச்சரவையை உருவாக்கியது, நில உச்சவரம்புச் சட்டத்தை முடிந்த அளவு செயல்படுத்தியது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி, விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய உழவர் சந்தைகளை அமைத்தது, எல்லா சாதியினரும் ஒன்றாக வசிக்க சமத்துவபுரங்களை உருவாக்கியது, மாணவர்களுக்கு இலவசப் பேருந்து போன்ற மு. கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டங்களே திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய அம்சங்களாக அமைந்திருக்கின்றன.

மு. கருணாநிதியின் மற்றொரு முக்கிய அம்சம், மாநிலத்திற்கென ஒரு நீண்ட காலப் பார்வையை உருவாக்கியது. அந்தப் பார்வையாலேயே 1971லேயே தமிழ்நாடு முழுமையாக மின்மயமானது. இந்தப் பார்வையின் அடிப்படையிலேயே இந்திய உணவுக் கழகத்தைப் போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உருவாக்கப்பட்டது. குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்தும் நோக்கில், தனியார் பேருந்து நிறுவனங்கள் நாட்டுடமையாக்கப்பட்டு மிகப் பெரிய போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டன.

கருணாநிதி, திமுக, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

தகவல் தொழில்நுட்பத் துறை மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தப் போகிறதென கணித்து நாட்டிலேயே முதல் மாநிலமாக 1997ல் அதற்கென தனிக் கொள்கையை உருவாக்கினார் கருணாநிதி. இதற்கு ஏழாண்டுகளுக்குப் பிறகுதான் தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்குப் பிறகு கட்டப்பட்ட டைடல் பார்க், முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தது. தற்போது திரும்பிப் பார்க்கையில், தமிழ்நாடு அடைந்த தொழில் முன்னேற்றத்தின் குறியீடாக காட்சியளிக்கிறது அந்தக் கட்டடம்.

மு. கருணாநிதியின் நீண்ட ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட முன்னோடித் திட்டங்களையும் சிறப்பான கொள்கைகளையும் தொடர்ந்து பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ஆனால், தற்போதைய சூழலில் மிக முக்கியமானதாக இருப்பது அவர் வலியுறுத்திய கூட்டாட்சித் தத்துவம்தான்.

கருணாநிதி, திமுக, தமிழ்நாடு

"இப்போது வங்க அரசுக்கென்று சில தனி உரிமைகள் இருக்கின்றன என்றால் அதற்கு கருணாநிதி தமிழ்நாட்டுக்காகப் போராடிப் பெற்ற உரிமைகள்தான் கராணம் என்பதை உணர்கிறேன். கருணாநிதியைப் போல எங்களுடைய உரிமைக்காக, நலன்களுக்காகப் போராட எங்களுக்கு ஒரு தலைவர் கிடைக்கவில்லையே என ஏங்குகிறேன்" என தன்னுடைய "வங்காளிகளுக்குமான போராளி கருணாநிதி" கட்டுரையில் குறிப்பிடுகிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பங்ளா போக்கோ அமைப்பின் கர்க சாட்டர்ஜி.

அவர் அந்தக் கட்டுரையை பின்வரும் வரிகளோடு முடிக்கிறார்: "இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இணையான மரியாதையும் கண்ணியமும் எங்களுக்கும் வேண்டும் என்று கருதும் கோடிக்கணக்கான பிறமொழி பேசும் இந்தியர்கள் ஒவ்வொருவராலும் கருணாநிதி ஒரு போராளியாக நெடுங்காலத்திற்கு நினைவுகூரப்படுவார்".

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: