டெல்லி விமான நிலைய கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி, உடலைப்பெற நாள் முழுவதும் அலைந்த மகன்

- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
தாங்கமுடியாத வெப்பத்தில் தவித்து, தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருந்த டெல்லியில், வியாழன் (ஜூன் 27) இரவு மற்றும் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) காலை வரலாறு காணாத மழை பெய்தது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 4:00 மணி முதல் 8:30 மணி வரை பல்வேறு பகுதிகளில் 64மி.மீ. முதல் 124மி.மீ. வரை மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. சில பகுதிகளில் 200மி.மீட்டரையும் தாண்டி மழை பெய்துள்ளது. 1936-ஆம் ஆண்டுக்குப் பிறகு டெல்லியில் ஜூன் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும்.
இதனால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது. லோதி ரோடு போன்ற மேல்தட்டுப் பகுதிகளில் உள்ள எம்.பி-க்களின் பங்களாக்களில் உடமைகள் தண்ணீரில் மிதக்கத் தொடங்கின.
ஆனால் இந்த மழை சில குடும்பங்களின் தலையில் இடியாக இறங்கியது.
டெல்லியில் வெள்ளிக்கிழமையன்று மழை தொடர்பான வெவ்வேறு சம்பவங்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த திடீர் கனமழை காரணமாக உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-இன் மேற்கூரை இடிந்து விழுந்தது.
தேங்கிய மழை நீரின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் மேற்கூரையின் ஒரு பகுதி, கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் 8 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப்பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
இந்த விபத்தில், காலையில் நிகழ்ந்த மரணத்தைப் பற்றிய செய்தி, இறந்தவரின் குடும்பத்தினருக்கு மாலையில்தான் கிடைத்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், ANI
தகவல் கிடைக்காமல் அலைந்த குடும்பம்
இந்த விபத்தில் டாக்ஸி ஓட்டுநரான ரமேஷ்குமார் உயிரிழந்தார். டெல்லி ரோகிணி பகுதியில் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்த ரமேஷ் குமார், வாடகைக்கு கார் எடுத்து ஓட்டி வந்தார். கடந்த பத்தாண்டுகளாக டாக்ஸி ஓட்டி வந்த ரமேஷ்குமார் வழக்கம்போல் காலையில் வேலைக்குச் சென்றார்.
அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளதாக காலை ஏழு மணியளவில் காரின் உரிமையாளர் உமேத் சிங்குக்கு டெல்லி காவல்துறையில் இருந்து அழைப்பு வந்தது.
உமேத் சிங் டெர்மினல் 1-க்கு சென்றார். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக அந்த இடத்தை அடைய முடியவில்லை.
"ரமேஷ் இறந்தது குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால் என்னால் அவரது உடலை பார்க்க முடியவில்லை," என்று உமேத் சிங் கூறினார்.
ஆனால் ரமேஷின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைக்கவில்லை.
“என் தந்தை சுயநினைவிழந்துவிட்டதாக காலை சுமார் 8:30 மணியளவில் டெல்லி போலீசார் தெரிவித்தனர்,” என்று ரமேஷின் மகன் ரவீந்தர் சிங் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், ANI
ரமேஷ் இறந்த தகவல் மாலை 4:00 மணியளவில் அவரது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.
“என் தந்தையின் மரணம் குறித்து டெல்லி போலீசார் எங்களிடம் கூறவில்லை. பல மணி நேரம் நான் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தேன். என் தந்தையின் உடல் சப்தர்ஜங் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக மாலை நான்கு மணிக்கு எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று ரவீந்தர் அழுது கொண்டே கூறினார்.
இதற்கிடையே ரமேஷின் உடல் குறித்த தகவல்களை டெல்லி காவல்துறையிடம் இருந்து பெற பிபிசி முயன்றது. ஆனால் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
அவரது உடல் முதலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது . அங்குள்ள பிணவறை மழைநீரால் நிரம்பியிருந்தது. எனவே உடல் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டது.
ஆனால் ரமேஷின் உடல் மருத்துவமனையில் இருந்ததை எய்ம்ஸ் மையத்தின் எந்த அதிகாரியும் ஒப்புக்கொள்ளவில்லை.

பட மூலாதாரம், ANI
காயமடைந்தவர்களைச் சந்தித்த அமைச்சர்
டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-இன் மேற்கூரை நான்கு வாகனங்கள் மீது விழுந்தது. அதில் ஒன்று சந்தோஷ் யாதவுடையது.
காயமடைந்த சந்தோஷ், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவரை சந்தித்தார்.
இந்தச் சம்பவத்தில் சந்தோஷ்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. டெர்மினல் ஒன்றின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழும்போது சந்தோஷ் காருக்குள் இருக்கவில்லை. எனவே அவர் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தார்.
“திடீரென கூரை இடிந்து விழுந்தது. என்னைக் காப்பாற்றிக்கொள்ள நான் ஓடினேன். என் தலையில் காயம் ஏற்பட்டது. நான் காருக்குள் இருந்திருந்தால் ஒருவேளை உயிர் பிழைத்திருக்க முடியாமல் போயிருக்கலாம்,” என்று சந்தோஷ் கூறினார்.

விமான நிலையத்திற்கு சந்தோஷ் வந்த கார், மேற்கூரை இடிந்து விழுந்ததில் முற்றிலுமாக சேதமடைந்தது. இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு டாக்ஸி சேவைகளை வழங்கும் ஒரு டாக்ஸி நிறுவனத்தில் அவர் பணிபுரிகிறார். சில ராணுவ அதிகாரிகளை இறக்கிவிட சந்தோஷ் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.
அவர் முதலில் டெர்மினல் 1-இல் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப் பரிந்துரைக்கப்பட்டார். அவரைச் சந்திப்பதற்காக இந்தியாவின் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அமைச்சர் வந்து நலம் விசாரித்துவிட்டுச் சென்றதாக சந்தோஷ் தெரிவித்தார்.

மகளின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அரவிந்த், விமான நிலையத்தில் வார்டு பாயாக பணியாற்றி வருகிறார். அவர் தற்போது இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிபிசி-யுடன் தொலைபேசியில் பேசிய அவர், தன் தலையில் அடிப்பட்டிருக்கிறது என்றும் தன்னால் அதிகம் பேச முடியாது என்றும் கூறினார். அரவிந்த் அவரது சக ஊழியர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டெர்மினலில் நிர்வாகப்பணியில் ஈடுபட்டிருந்த யோகேஷ் என்பவரும் இந்த விபத்தில் காயமடைந்தார். யோகேஷ் தலையில் காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் விமான நிலைய நிர்வாகத்தின் ஒரு அங்கம் என்று கூறிய அவர் மேலே எதுவும் பேச மறுத்துவிட்டார்.
விபத்தில் உயிரிழந்த ரமேஷ்குமாரின் உடல் சஃப்தர்ஜங் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. சனிக்கிழமை மதியம் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் பிரேதப் பரிசோதனைக்கு முன்பு தந்தையின் உடலைப்பார்க்கக் கூட தானும் தனது குடும்பத்தினரும் அனுமதிக்கப்படவில்லை என்று அவரது மகன் ரவீந்தர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளுக்கு தயாராகி வருகின்றனர்.
ரமேஷ் தனது மகளின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்து வந்ததாகவும், அதனால் இரவு பகலாக உழைத்ததாகவும் உயிரிழந்த ரமேஷ்குமாருடன் பணிபுரிந்த உமேத் சிங் கூறுகிறார். தற்போது அவரது குடும்பம் டெல்லியின் ரோகிணி பகுதியில் உள்ள விஜய் விஹாரில் வசிக்கிறது. இங்கு வருவதற்கு முன்பு அவர் ரோகிணியின் செக்டர் 7-இல் நீண்ட காலம் வசித்து வந்தார். ரமேஷ் ஒரு கடின உழைப்பாளி மற்றும் குடும்பத்தின் மீது அன்பு கொண்ட மனிதர் என்று அவர் வசித்த வீட்டின் உரிமையாளர் நினைவு கூர்கிறார்.

விபத்து குறித்து அரசு கூறியது என்ன
விமானப் போக்குவரத்து அமைச்சர் மருத்துவமனையில் சந்தித்தார்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இந்திய அரசு நிதியுதவி அறிவித்துள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும்.
இந்த விபத்துக்குப் பிறகு நாட்டின் எல்லா விமான நிலையங்களிலும் இதுபோன்ற கட்டமைப்புகளின் சோதனை மேற்கொள்ளப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த விமான நிலையத்தை இயக்கும் ஜி.எம்.ஆர் ஏர்போர்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமையிலான இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட், கனமழையே விபத்துக்குக்காரணம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
“நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக அதிகாலை 5:00 மணியளவில் பழைய விமான புறப்பாடு வளாகத்தின் முன் பகுதி இடிந்து விழுந்தது,” என்று அந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1 இன் மேற்கூரை இடிந்து விழுந்ததால் ஆயிரக்கணக்கான மக்களின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
தனது விமானம் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் ரூ.19,000 ரூபாய் செலுத்தி புதிய விமான டிக்கெட் வாங்க வேண்டி வந்தது என்றும் இதனால் தனக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் டெர்மினல் ஒன்றில் இருந்த பயணி ஒருவர் கூறினார்.
இந்தச் சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு ஜபல்பூரில் உள்ள விமான நிலையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் ஒரு கார் சேதமடைந்தது. இருப்பினும், அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுபோன்ற சம்பவங்கள் பல தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளன. விமான நிலைய முனையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது மற்றும் பலர் கேள்விகளை எழுப்பினர்.
வேறொருவரிடம் இருந்து காரை பெற்று அதன் இ.எம்.ஐ செலுத்தி, காரை டாக்ஸியாக ஓட்டுவதற்கு கொடுத்து நிதி நெருக்கடியைச் சமாளித்து வந்ததாகவும், ஆனால் இந்த விபத்து தனது வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டதாகவும் உமேத் சிங் கூறுகிறார்.
இந்த விபத்தில் உயிரிழந்த டிரைவர் ரமேஷ்குமாரின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்தும் தாங்கள் யோசிக்கக்கூடும் என்று அவரது மகன் ரவீந்தர் குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












