திருப்பதிக்கு இன்று பிறந்தநாளா? ராமானுஜர் என்ன செய்தார்?

திருப்பதி நகரம் ராமானுஜரால் உருவாக்கப்பட்டதா?
    • எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி
    • பதவி, பிபிசி

திருப்பதிக்கு பிறந்தநாள் கொண்டாடப்படும் என்று அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வான பூமன கருணாகர ரெட்டி அறிவித்ததை தொடர்ந்து, எப்போது திருப்பதி நகரம் அமைந்தது என்பது தொடர்பான விவாதம் தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி திருப்பதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நகரில் நடைபெறும் என்று பூமன கருணாகர ரெட்டி கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.

“திருப்பதியின் கல்வெட்டுகளில் காணப்படும் தகவலின்படி, பிப்ரவரி 24, 1130ல் திருப்பதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், அன்றைய தினம் திருப்பதியின் ஸ்தாபன நாளாக கொண்டாடப்படும்” என்று அவர் கூறியிருந்தார்.

எனினும், திருப்பதி இந்த தேதியில்தான் அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்ட தேதியை அவர் கூறியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஒருசில வரலாற்று ஆய்வாளர்கள், திருப்பதி பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருவதாக கூறுகின்றனர். வேறு சிலரோ, ராமானுஜர் தான் திருப்பதிக்கு புகழைத் தேடி தந்தார் என்று கூறுகின்றனர்.

திருப்பதி பிறந்தநாள் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட நாளை எம்.எல்.ஏ. பூமன கருணாகர ரெட்டி தேர்வு செய்தது ஏன்? திருப்பதி நகரம் எப்போது அமைந்தது என்று வரலாற்று ஆசிரியர்களின் கூற்று வாயிலாக கண்டறிய பிபிசி முயன்றது.

திருப்பதி நகரம் ராமானுஜரால் உருவாக்கப்பட்டதா?

பட மூலாதாரம், FB/BHUMANAKARUNAKARREDDY

திருப்பதி எம்.எல்.ஏ. கூறியது என்ன?

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றில் பேசிய பூமன கருணாகர ரெட்டி, திருச்சானூரில் இருந்து திருமலைக்கு அர்ச்சகர்கள் சென்று வழிபடுவது சிரமமாக இருந்ததால், ராமானுஜாச்சாரியார் கோவிந்தராஜபுரங்க திருப்பதிக்கு அடிக்கல் நாட்டினார் என்று குறிப்பிட்டார்.

“கோவிந்தசாமியை கௌரவப்படுத்தும் விதமாக திருப்பதிக்கு அடிக்கல் நாட்டிய ராமானுஜர், நான்கு மாட வீதிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். முதலில் இந்நகரத்துக்கு கோவிந்தபுரம் என்று பிப்ரவரி 24, 1130ல் பெயர் சூட்டினார். கோபுரத்தின் தெற்கே உள்ள பிரகாரச் சுவரின் உள் முகத்தில் உள்ள தமிழ்க் கல்வெட்டில் இந்த தகவல் உள்ளன ” என்று கூறினார்.

“கோவிந்தசாமி கோவில், நான்கு மாட வீதிகள், அக்ரஹாரம் மற்றும் பிற பகுதிகள் படிப்படியாக திருப்பதி என்னும் புகழ்பெற்ற ஆன்மிக நகராக உருவெடுத்தது. அதனால் திருப்பதி மாநகராட்சி இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ம் தேதி திருப்பதி பிறந்தநாளை கொண்டாடும்” என்று எம்எல்ஏ அறிவித்தார்.

அதன்படியே, கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கோவிந்தராஜர் கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜர் சிலைக்கு அருகில் பூஜைகள் செய்யப்பட்டு நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெற்றது.

திருப்பதி நகரம் ராமானுஜரால் உருவாக்கப்பட்டதா?

ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட திருப்பதி

எனினும், திருப்பதியின் வரலாறு வெறும் 893 ஆண்டுகளை மட்டுமே உள்ளடக்கியது என்று கூறுவது தவறு என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூமன கருணாகர ரெட்டியின் கூற்றுப்படி, ராமானுஜாச்சாரியாரின் சிலை கோவிந்தராஜ சுவாமி கோயிலால் நிறுவப்பட்டது, இது முன்பு பார்த்தசாரதி கோயில் என்று அழைக்கப்பட்டது, அங்கு கிருஷ்ணர் வழிபடப்பட்டார்.

கோவிந்தராஜசுவாமி கோவிலின் பிரதான ராஜகோபுரத்தில் இன்றும் கிருஷ்ணரின் சிலை இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், பூமன கருணாகர ரெட்டியோ தனது செய்தியாளர் சந்திப்பில், கொத்துருவில் இருந்து வெகு தொலைவில் இல்லாததும் திருச்சானூரில் இருந்து அதே தொலைவில் உள்ளதுமான பார்த்த சாரதி கோயிலில் கோவிந்த ராஜசுவாமி சிலை நிறுவப்பட்டதாக தெரிவித்தார்.

திருப்பதி நகரம் ராமானுஜரால் உருவாக்கப்பட்டதா?

எதிர்ப்புகள் ஏன்?

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரான ஏ.ஆர். ராமச்சந்திரா ரெட்டி இது தொடர்பாக பிபிசியிடம் பேசுகையில் , திருப்பதி ராமானுஜரால் அமைக்கப்படவில்லை மேலும், ஒரு குறிப்பிட்ட நாளில்தான் திருப்பதி உருவாக்கப்பட்டது என்பதற்கு எந்தவிதமான வரலாற்று ஆதாரங்களும் கிடையாது என கூறினார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் வரலாற்று பிரிவில் 1969 முதல் 2005 ஆண்டு வரை ஏ.ஆர். ராமச்சந்திரா ரெட்டி பணியாற்றி உள்ளார்.

“இதுதான் வரலாற்று உண்மை. திருப்பதி ராமானுஜரால் உருவாக்கப்பட்டது என்ற கூற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. கல்வெட்டுகள் மற்றும் புத்தகங்களிலும் இது தொடர்பாக எவ்வித குறிப்பும் இல்லை. யாரோ உணர்ச்சி பெருக்கில் கூறுவது வரலாற்று உண்மை ஆகாது. கோயிலை சுற்றியுள்ள பகுதி கிருஷ்ணாபுரம் என்று அழைக்கப்படுகிறது. மஹாத்வாராவில் இருந்து கடவுள் நேரடியாக எங்கு இருக்கிறாரோ அந்த கோவில் அவருக்கு சொந்தமானது. இது கிருஷ்ணர் கோவில். இங்கு வீற்றிருக்கும் கிருஷ்ணருக்கு பார்த்தசாரதி என்ற பெயரும் உண்டு. கோவிலின் வடக்குப் பகுதியில் ராமானுஜரின் சிலையை நிறுவி வழிபடுவது புதிய டிரெண்டாக இருந்தது. ஏற்கனவே பிரபலமாக இருக்கும் கோவிலில் வேறு சிலையை அமைத்து தனி சிறப்பு பூஜைகள் செய்வது புதிய டிரெண்டாக பார்க்கப்பட்டது. மக்களும் அதனை ஏற்றுக்கொண்டனர். சில காலம் கோவிந்தபுரம் என்ற பெயர் இருந்தது. பின்னர் அது மறைந்துவிட்டது” என்றார்

திருப்பதி என்பதுதான் பழமையான பெயர் என்றும், அதற்கு வேறு பெயர் உண்டு என்பதை தான் எங்கும் படித்ததில்லை என்றும் ராமச்சந்திரா ரெட்டி கூறுகிறார்.

“எங்களுக்கு தெரிந்தவர்கள், எங்களுடன் பணிபுரிந்தவர்கள் பேசும்போது கூட, திருப்பதிக்கு வேறு பெயர்கள் இருப்பதாக கூறியது இல்லை. இங்கு பல மரபுகள் இருந்தன. ராமானுஜர் பற்றி குறிப்பிடும்போது, அவரின் உறவினர் இங்கேயே தங்கியிருப்பார். அதனால்தான் சிறுவயதில் இருந்து மூன்று நான்கு முறை ராமானுஜர் இங்கு வந்தார். இது தமிழ் புத்தகங்களிலும் அவரது வாழ்க்கை வரலாற்றிலும் எழுதப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் தெலுங்கில் அல்லது பிற மொழிகளில் இல்லை. 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகள் வரையிலும் கூட மலைக்கு சென்று வழிபட்டு திரும்புவார்கள். ஆற்காடு நவாப்கள் மற்றும் ராயர்கள் காலத்தில் இது பிரபலமான இருந்தது” என்று அவர் விளக்கினார்.

திருப்பதி நகரம் ராமானுஜரால் உருவாக்கப்பட்டதா?

"திருப்பதிக்கு புகழை சேர்த்த ராமானுஜர்"

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற நாகோலு கிருஷ்ணா ரெட்டியும் இதையே பிபிசியிடம் தெரிவித்தார்.

திருப்பதி என்பது புகழ்பெற்ற இடம் என்றும் திருமலா திருப்பதி குறித்து தமிழ் இலக்கியங்கள் உட்பட பலவற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த அவர், எனினும் திருப்பதியை அனைவரும் அறியும்படி செய்தவர் ராமானுஜர்தான் என்று குறிப்பிட்டார்.

“இந்தப் பகுதி பண்டைய பல்லவர்கள், சோழர்கள் மற்றும் யாதவ மன்னர்களால் ஆளப்பட்டது. பின்னர் விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்தனர். திருப்பதியை ராமானுஜர் பிரபலப்படுத்தியதால், அவர் இந்த நகரத்திற்கு அடித்தளம் அமைத்தார் என்ற தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆனால் இது ராமானுஜரால் கட்டப்பட்டது என்று கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

சுற்றியுள்ள பல பகுதிகளில் சோழ மன்னர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகள் உள்ளன. திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோவிலில் 950 அல்லது 975 க்கு முந்தைய கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் ராயன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதற்கான ஆதாரங்களும் கல்வெட்டில் காணப்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

கபிலத் தீர்த்தம் அருகே கொத்துரு என்ற கிராமம் இருந்தது என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு கொத்துரு இருந்திருந்தால் அருகிலேயே பழைய நகரம் இருந்திருக்க வேண்டும். திருப்பதி அந்த நகரமாக இருந்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

“திருப்பதிக்கு அருகில் உள்ள தற்போதைய ராமசந்திரா நகர் மற்றும் காதி காலனி ஆகியவைதான் இந்த கொத்துருவாக இருந்திருக்கலாம் என்று பலரும் கருதுகின்றனர். இதேபோல், 1970ல் இங்கு பழைமையான கோயில் கோபுரம் இருந்தது என்றும் பின்னர் அது இடிக்கப்பட்டது என்றும் வயதானவர்கள் பலரும் கூறுகின்றனர்.

கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்களில் திருப்பதிக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், இந்த நகரம் நிச்சயமாக ராமானுஜருக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கருதலாம்.” என்று அவர் குறிப்பிட்டார்.

ராமானுஜர் இப்பகுதிக்கு வந்த முக்கிய காரணமே அவரது உறவினர் இங்கு இருந்தார் என்பதால்தான் என்றும் கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.

“தனது உறவினரின் அழைப்பை ஏற்று ராமானுஜர் தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து திருமலைக்கு சென்று சுவாமிக்கு சேவைகளை செய்துவந்ததாக நம்பப்படுகிறது. ராமானுஜரைப் போல் அவரது உறவினரும் திருப்பதியில் இருந்து தினமும் திருமலைக்கு சென்று சுவாமிக்கு சேவைகளை செய்துவிட்டு திரும்பியதாக பலரும் கூறுகின்றனர். அதேபோல், வைணவ இலக்கியத்திலும் அவர் எழுதியுள்ளார். எனவே, அவர் நிச்சயம் தினமும் இங்கு இருந்திருக்க வேண்டும். அவர் திருப்பதி கிராமத்தில் இருந்து சென்று வந்திருக்கலாம் என்று நாம் எண்ணிக்கொள்ளலாம்” என்றார்.

திருப்பதி நகரம் ராமானுஜரால் உருவாக்கப்பட்டதா?

"திருப்பதிக்கு முன்பாக இருந்த கொத்துரு"

திருப்பதி திருமலை பற்றி ஆய்வு செய்தவரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான எஸ்.கிருஷ்ணா ரெட்டி கூறுகையில், முதலில் திருப்பதி என்பது அமையவில்லை. ஆனால் கபில தீர்த்தம் அருகே கோத்துரு என்ற கிராமம் இருந்தது என்றார்.

“திருப்பதி என்ற பெயர் அப்போது கிடையாது. கபில தீர்த்தம் அருகே கொத்துரு என்ற சிறிய கிராமம் இருந்தது. திருச்சானூர் திருப்பதியை விட பழைமையானது. முன்பு, திருச்சானூர் திருக்கோடவூரநாடு என்று அழைக்கப்பட்டது. ஆனால், அப்போது திருப்பதி கிடையாது. பின்னர் சோழர்கள் காலத்தில் ராயன் ராஜேந்திர சோழன் என்பவர் இங்கு கிராமம் ஒன்றை ஏற்படுத்தினார். அந்த கிராமத்தின் பெயர் கொத்துரு ” என கிருஷ்ண ரெட்டி கூறுகிறார்.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசுவாமி கோவிலில் உள்ள சிலை குறித்து கிருஷ்ணா ரெட்டி பிபிசியிடம் மற்றொரு சுவாரசியமான விஷயத்தை கூறினார்.

“சிதம்பரத்தில் உள்ள கோவிந்த ராஜ சுவாமி சிலை கடலில் வீசப்பட்ட போது ராமானுஜர் அந்த சிலையை கடலில் இருந்து எடுத்து திருப்பதிக்கு அனுப்பி வைத்தார். அப்போது லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அருகே உள்ள கோனேடி நிலத்தில், சீனிவாசபுரம் என்ற நன்னீர் குளத்தில் வைத்து சிலை பாதுகாக்கப்பட்டது. சிதம்பரம் கோவிலில் இருந்து கோவிந்தராஜசுவாமியின் உற்சவ சிலைகள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த காலத்தில் திருப்பதி இல்லை, அதனால்தான் கொத்துருவில் பாதுகாக்கப்பட்டது. அப்போது சீனிவாசபுரம் புதிதாக உருவாகி வந்தது” என கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: