ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: 55 பேர் பலி - சேதத்தைக் காட்டும் புகைப்படங்கள்

பட மூலாதாரம், Reuters
ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமையன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதுவரை குறைந்தது 55 பேர் உயிரிழந்ததாகவும், 270க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து வெளிவந்த படங்கள் அதிக அளவு புகை, தீப்பிழம்புகள், அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கு நிலவும் குழப்பமான சூழ்நிலையைக் காட்டுகின்றன.
வியாழக்கிழமை காலைக்குள், எட்டு குடியிருப்பு வளாகங்களில் நான்கில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மீதமுள்ள வளாகங்களில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் காலையிலும் புகையைக் காண முடிந்தது.
வியாழக்கிழமை மாலைக்குள் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று தீயணைப்புத் துறை நம்புகிறது.
ராய்ட்டர்ஸ் தகவலின் படி, ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த வளாகத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் மொத்தம் 2,000 குடியிருப்புகள் உள்ளன.
ஹாங்காங் அரசாங்கத்தின் கூற்றுப்படி, புதன்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:51 மணியளவில் வாங் ஃபுக் கோர்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது, அதன் பிறகு தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 45 பேரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஜான் லீ தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் தீயணைப்பு வீரர் வை-ஹோவும் ஒருவர்.
ஹாங்காங் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், "ஹோ வை-ஹோவின் மறைவுக்கு தீயணைப்புத் துறை இயக்குநர் ஆண்டி யங் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்" என்று கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில், மற்றொரு தீயணைப்பு வீரரும் தற்போது மருத்துவமனையில் இருப்பதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் சுமார் 800 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் உள்ள தாய் போ ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும்போது, மூக்கைத் துளைக்கும் அளவுக்கு கடுமையான புகை நாற்றம் வீசுவதாக ஹாங்காங்கில் உள்ள பிபிசி செய்தியாளர் ஃபோப் காங் கூறுகிறார்.
"நாங்கள் சம்பவ இடத்திற்குச் செல்லும் வழியில், தீப்பிழம்புகளால் சூழப்பட்ட கட்டடங்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஏராளமான மக்களைக் கண்டோம். பல்வேறு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன, மேலும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரைந்துகொண்டிருந்தன. தீயணைப்பு வீரர்கள் அதில் இருந்து ஆக்ஸிஜன் தொட்டிகளை எடுத்துக்கொண்டிருந்தனர்" என்றும் அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
தாய் போ மாவட்ட கவுன்சிலர் முய் சியு-ஃபங் பிபிசி சீன சேவையிடம் கூறுகையில், சுமார் 95 சதவிகித மக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், அருகிலுள்ள மூன்று குடியிருப்புத் தொகுதிகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார்.
வெளியேற்றப்பட்டவர்கள் அருகிலுள்ள சமூக மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்தது.

அருகிலுள்ள கட்டடங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், காயமடைந்தவர்களுக்கு ஒரு உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் அரசாங்கம் தற்காலிக முகாம்களையும் திறந்துள்ளது என, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஹெர்மன் டியு குவான் ஹோ உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இதற்கிடையில், "பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன, 30க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து வேறு திசையில் திருப்பி விடப்பட்டுள்ளன" என ஹாங்காங்கின் போக்குவரத்துத் துறை குறிப்பிட்டுள்ளது.
தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் சூழலில், நேரடி போக்குவரத்து நிலையை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
வாங் ஃபுக் வளாகத்தில் வசிக்கும் ஹாரி சியோங் என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், பிற்பகல் 2:45 மணியளவில் பலத்த சத்தம் கேட்டதாகவும், அருகிலுள்ள கட்டடத்தில் தீப்பிழம்புகள் மிகப்பெரியதாக இருந்ததாகவும் கூறினார்.
"நான் உடனடியாக திரும்பிச் சென்று என் பொருட்களை பேக் செய்ய ஆரம்பித்தேன். நான் எப்படி உணர்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
கட்டடங்களுக்கு இடையிலான தூரம் மிகக் குறைவாக இருந்ததா ?

பட மூலாதாரம், AFP via Getty Images
ஹாங்காங்கில் உள்ள குடியிருப்பு பகுதிகள் பொதுவாகச் சிறிய அளவிலான, ஒன்றுக்கொன்று நெருக்கமாக கட்டப்பட்ட வீடுகளுக்குப் பெயர் பெற்றவை. கட்டடங்களுக்கு இடையிலான இடைவெளியும் மிகவும் குறைவாக இருக்கும்.
நெரிசல் காரணமாக, இந்த தீ விபத்தில் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
வாங் ஃபுக் வளாக குடியிருப்புகளில் ஒவ்வொரு வீடும் பொதுவாக 400 முதல் 500 சதுர அடிவரை பரப்பளவு கொண்டவை. இந்த வளாகம் கடற்கரைக்கு அருகில், ஒரு முக்கிய நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ளது. மேலும் அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, இங்கு மொத்தம் சுமார் 4,600 பேர் வசித்து வருகின்றனர்.
தீ பரவத் தொடங்கியது எப்படி ?

பட மூலாதாரம், AFP via Getty Images
தீ வேகமாக பரவியதற்குக் காரணமாக, அருகிலுள்ள கட்டடங்களில் நடைபெற்று வந்த பழுது பார்க்கும் பணிகள் குறிப்பிடப்படுகின்றன.
கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மூங்கில் கட்டமைப்புகள் இந்த கட்டடங்களின் வெளியே அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர்கள், மற்றொருவர் பொறியியல் ஆலோசகர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனினும், கட்டடங்களில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வந்ததாகவும், ஜன்னல்களில் பொருத்தப்பட்டிருந்த பாலிஸ்டிரீன் பலகைகளின் காரணமாக தீ மிக வேகமாகப் பரவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
கட்டடத் தொகுதிகளுக்கு இடையில் மூங்கில் கட்டமைப்புகள் நிறுவப்பட்டதாகவும், இதனால் தீ மற்ற கட்டடங்களுக்கும் பரவியிருக்கலாம் என்றும் நிர்வாகம் கூறுகிறது.
இந்த தீ விபத்து எவ்வளவு தீவிரமானது ?
இந்த தீ விபத்து 5 ஆம் நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இது தீவிரத்தின் அடிப்படையில் வகை 1 முதல் 5 வரையிலான அளவில் இரண்டாவது மிக உயர்ந்த நிலையாகும்.
முன்னதாக, 17 ஆண்டுகளுக்கு முன்பு, ஹாங்காங்கில் கிரேடு 5 தீ விபத்து ஏற்பட்டது. அதில் நால்வர் உயிரிழந்தனர்.
"ஹாங்காங்கின் வாங் ஃபுக் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்" என்று சீனாவின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
டிசம்பர் 7 ஆம் தேதி ஹாங்காங்கில் சட்டமன்றக் கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும், தீ விபத்து காரணமாக பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பரப்புரைகளை ஒத்திவைத்துள்ளன.
இதற்கிடையில், வாங் ஃபுக் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, தாய் போ மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகள் வியாழக்கிழமை மூடப்படும் என்று ஹாங்காங்கின் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்தின் கோரத்தைக் காட்டும் புகைப்படங்கள்

பட மூலாதாரம், AFP via Getty Images

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், AFP via Getty Images

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், AFP via Getty Images

பட மூலாதாரம், AFP via Getty Images

பட மூலாதாரம், AFP via Getty Images

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Phoebe Kong/BBC

பட மூலாதாரம், Reuters
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












