'எங்காவது வாழ்ந்து கொண்டிருப்பான்' - 13 வயது மகனின் 6 உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்

உடல் உறுப்பு தானம்
    • எழுதியவர், சுஜாதா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வேலூர் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த தமது 13 வயது மகனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், "தங்கள் மகன் மற்றவர்களின் உடல்களில் எங்காவது வாழ்வான்,” என அந்தப் பெற்றோர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ஒடுகத்தூர் கொள்ள கொட்டாய் பகுதியைச் சேர்ந்த தம்பதி சௌந்தர்ராஜன் - தனலட்சுமி. இவர்களுக்கு நித்தியா, வெங்கடேஷ், சந்தோஷ் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில், சின்ன பள்ளிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சந்தோஷ்(13) ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பத்து நாட்களாக பள்ளி விடுமுறை என்பதால், சந்தோஷ் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய நிலத்தில் வேலை செய்பவரை 27ஆம் தேதி காலை 9 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று சந்தோஷ் ராமநாயகன் குப்பம் பகுதியில் விட்டு விட்டு மறுபடியும் தனியாக இருசக்கர வாகனத்தில் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது வரும் வழியில் குரு ராஜபாளையத்தில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் ராமாயணம்குப்பம் பகுதியில் சந்தோஷ் தன்னுடைய நிலத்திற்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையில் பால் எடுத்துக் கொண்டு எதிரே வந்த நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சந்தோஷை அவனுடைய பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கு சந்தோஷ் அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சந்தோஷ் இறந்துவிட்டதாக பெற்றோர்களிடம் தெரிவித்தனர். செய்வதறியாது திகைத்து நின்ற பெற்றோர் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை சிஎம்சி மருத்துவமனையில் தானம் செய்ய முன்வந்தனர்.

உடல் உறுப்பு தானம்
படக்குறிப்பு, குடும்பத்தினருடன் சந்தோஷ்

6 உறுப்புகளை தானமாக அளித்த பெற்றோர்

இதையடுத்து, சந்தோஷின் கண்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகிய ஐந்து உறுப்புகளை சந்தோஷின் பெற்றோர் தானமாக வழங்கினர்.

சிறுவனின் இதயம் மற்றும் அவரது இரண்டு நுரையீரல்களும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை சிஎம்சிக்கு ஒரு சிறுநீரகம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது கல்லீரல் மற்றும் கண் ராணிப்பேட்டை சிஎம்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய சந்தோஷின் தந்தை சௌந்தர்ராஜன், “என் மகன் அனைவரிடமும் அன்பாகவும் பாசமாகவும் பழகக்கூடியவன். வீட்டில் சண்டை போட்டாலும் அதை அவன்தான் சமாதானப்படுத்தி ’சண்டை போடாதீர்கள்’ என்று எங்களைச் சேர்த்து வைப்பான். அவனுக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. எதிர்காலத்தில் நன்றாகப் படித்து காவல்துறை அதிகாரியாக வரவேண்டும் என்ற பெரிய கனவுடன் இருந்தான்,” என மகன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

சந்தோஷின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் ஐந்து உயிர்கள் வாழும் என்கின்ற எண்ணத்தில்தான் குடும்பத்துடன் ஆலோசித்து உறுப்புகளை தானம் செய்ததாக சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

உடல் உறுப்பு தானம்

பட மூலாதாரம், GETTY IMAGES

'எங்காவது வாழ்ந்து கொண்டிருப்பான்'

"என்னுடைய மகன் சந்தோஷ் 5 உயிர்கள் மூலம் இந்த உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருப்பான். எங்களுக்கு அதுவே போதும்,” என அவர் தெரிவித்தார்.

சந்தோஷின் தாய் தனலட்சுமி, “கடைசியாக என் மகனைச் சாப்பிட வருமாறு செல்போனில் கூறினேன். ஆனால், எனக்கு அவன் விபத்தில் அடிபட்ட செய்திதான் கிடைத்தது. அவனை இழந்தது தாங்க முடியாத துயரமாக உள்ளது,” எனத் தெரிவித்தார்.

உடல் உறுப்புகளை தானமாகக் கொடுப்பது எப்படி?

உடல் தானம் செய்ய விரும்புபவர்கள் அந்தந்த மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் அல்லது கண்காணிப்பாளர், முதன்மை மருத்துவ அலுவலரைச் சந்தித்து தகவல்களைக் கேட்டு அறிந்து கொள்ளலாம் என, பிபிசியிடம் முன்பு பேசிய தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

மேலும், "மூளைச் சாவு அடைந்த நபர்களிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகளை வழங்குவோருக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

எனவே, உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களுக்கு ஆட்சியர் அல்லது அரசு சார்ந்த அதிகாரிகள் நேரில் சென்று அரசு சார்பில் மரியாதை செய்வர். தமிழ்நாட்டில் உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு செய்ய உத்தரவு வழங்கப்பட்டு இருக்கிறது," என்று விளக்கினார்.

’உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னோடி’

ககன்தீப் சிங் பேடி

பட மூலாதாரம், GAGANDEEP SINGH BEDI

படக்குறிப்பு, ககன்தீப் சிங் பேடி

"உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தொடர்ச்சியாக உடல் உறுப்புகள் தானம் பெறுவதில் மத்திய அரசின் பாராட்டுகளையும் விருதையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பெற்று வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர்.

இந்த ஆண்டில் தற்போது வரை 600-க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர். ஆனால் உடல் உறுப்பு தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது” என்றும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளிடம் வாகனம் தரக்கூடாது

வாகனங்களை 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் இயக்க அனுமதிக்கக்கூடாது என்று சட்டம் இருந்தாலும், சிறுவர்களிடம் வாகனங்களைக் கொடுக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் நிலவிக்கொண்டுதான் இருக்கிறது.

அதன் விளைவாக இத்தகைய சோகங்கள் மீண்டும் நடந்துவிடாமல் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று மாவட்ட வாகன போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசனிடம் பேசியபோது, வாகன தணிக்கையின்போது 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வாகனம் ஓட்டினால் அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படுவதாகக் கூறினார்.

மேலும், “அவர்களது பெற்றோர்களுக்கு 18 வயதுக்குக் கீழ் உள்ளோரை வாகனம் ஓட்ட அனுமதிப்பதால் ஏற்படும் விபத்து போன்ற பாதிப்புகள் குறித்தும் எச்சரிக்கப்படுகிறது. பெற்றோர் குழந்தைகளை வாகனம் இயக்க அனுமதிக்க வேண்டாம் என்பது பற்றிய விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறோம்.

பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் வாகனம் ஓட்டுவது தவறு என்ற புரிதலே இல்லாமல் இருக்கிறார்கள். ஆகையால் அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வாகனங்களை 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே சரியான முறையில் கற்றுக்கொண்டு, முறையாக உரிமம் பெற்று ஓட்ட வேண்டும் என்பதை பெற்றோர்களுகுப் புரிய வைக்க முயன்று வருகிறோம்.” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)