கொல்கத்தாவிடம் இருந்து 'நம்பமுடியாத' வகையில் வெற்றியைப் பறித்த பட்லர்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
14-ஆவது ஓவர்வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று வர்ணனையாளர்களும், ரசிகர்களும் நம்பி கருத்துக்களைத் தெரிவித்தனர். கணினி கணிப்புகளும் 0.30 சதவீதம் மட்டுமே ராஜஸ்தான் வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக கணித்தது.
ஆனால், கடைசி 6 ஓவர்களில் தனிஒருவனாக இருந்து சாதித்த ஜோஸ் பட்லர் சதம் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகமும், வீரர்களுமே ஒரு கட்டத்தில் தோல்வியை ஏற்கும் மனநிலைக்குச் சென்றிருப்பார்கள். அத்தகைய சூழலில் இருந்து, கடினமான வெற்றியை பட்லர் சாதித்துக் காட்டினார்.
கடைசி 6 ஓவர்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், வெற்றி தங்களின் கரங்களை விட்டு மெல்ல மெல்ல நழுவுகிறது என்பதை அறியாமல் கொல்கத்தா அணியினர் திகைத்துபோய் பந்துவீசியதைக் காண முடிந்தது. அணி நிர்வாகத்திடம் இருந்து அவ்வப்போது, அறிவுரைகள் வந்து கொண்டிருந்தன. ஆயினும் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.
புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் மோதிய ஆட்டம் என்பதால் இரு அணி வீரர்களுமே அதிக நுட்பங்களை, உத்திகளை போட்டியில் கையாண்டனர். எந்த பேட்டருக்கு யாரை பந்துவீசச் செய்வது, யாரை எப்படி வீழ்த்துவது, திட்டங்களை எப்படி முறியடிப்பது என ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் ஆட்டம் அமைந்திருந்தது.

பட மூலாதாரம், SPORTZPICS
முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்தது. 224 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் 6 வெற்றி, ஒரு தோல்வி என 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், நிகர ரன்ரேட்டை பொருத்தவரை பெரிதாக முன்னேற்றமில்லாமல் 0.677 என்ற அளவிலேயே 3வது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே(0.726) அணியை விட குறைவாக இருக்கிறது. அடுத்துவரும் ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்றால்தான் நிகர ரன்ரேட்டை உயர்த்த முடியும்.
அதேசமயம், கொல்கத்தா அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. ஆனால், நிகர ரன்ரேட்டைப் பொருத்தவரை, 1.399 என்று அனைத்து அணிகளையும் விட வலுவாக இருக்கிறது அந்த அணிக்கு பலவகையிலும் சாதகமாக அமையும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர் 107 நாட்அவுட்(60 பந்துகள்,6 சிக்ஸர், 9பவுண்டரி) தவிர வேறு எந்த பேட்டரும் பெரிதாக பங்களிப்பு செய்யவில்லை. ரியான் பராக்(34), ரோவ்மென் பாவெல்(26) ஆகியோர் மட்டும் சிறிய கேமியோ ஆடினர். மற்றவகையில் அனைத்து பேட்டர்களும் ஏமாற்றினர்.

பட மூலாதாரம், Getty Images
‘ரியல் இம்பாக்ட் பிளேயர்’ ஜாஸ் பட்லர்
தொடக்க ஆட்டக்காரராக, இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய ஜாஸ் பட்லர், தனது ஆட்டத்தின் மூலம் “பெரிய இம்பாக்ட்டை” நிகழ்த்திவிட்டார். சதம் அடித்தபோதுகூட கொண்டாடாத பட்லர் அணியை கடைசிப்பந்தில் வென்று கொடுத்தபின்புதான் தனது ஹெல்மெட்டையும், பேட்டையும் தூக்கி எறிந்து வெற்றியைக் கொண்டாடினார். ராஜஸ்தான் அணிக்கு சாத்தியமில்லாத வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜாஸ் பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஜாஸ் பட்லர் இந்த ஐபிஎல் சீசனில் அடித்த 2ஆவது சதமாகும். இதற்கு முன் ஆர்சிபி அணிக்கு எதிராக கோலி சதத்துக்குப் பதிலடியாக பட்லர் சதம் அடித்திருந்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிகசதம் அடித்த பேட்டர்களில் 7 சதங்களுடன் பட்லர் 2-ஆவது இடத்தில் இருக்கிறார்.
அதேபோல சேஸிங்கில் அதிக சதங்களை அடித்தவர்கள் வரிசையில் கோலிக்கு அடுத்ததாக பட்லர் 3 சதங்களுடன் உள்ளார். டி20 சதங்களைப் பொருத்தவரை அதிகமான சதங்களை அடித்த இங்கிலாந்து பேட்டர் என்ற பெருமையையும் பட்லர் பெற்றார். இந்த 8 சதங்களுமே பட்லர் கடந்த 3 ஆண்டுகளுக்குள் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி 6 ஓவர்களில் ஜாஸ் பட்லர் அதிரடியாக பேட் செய்தார். அவரின் கண்களுக்கு வெற்றியைத் தவிர வேறு ஏதும் தெரியவில்லை என்றே கூற வேண்டும். பட்லர் கடைசியாக சந்தித்த 27 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 65 ரன்கள் சேர்த்து 240.74 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்தார். ஆனால் 7ஆவது ஓவர் முதல் 14-ஆவது ஓவர்வரை பட்லர் ஆமை வேகத்தில் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 22ரன்கள் மட்டுமே சேர்த்த்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
‘நம்பமுடியாத வெற்றி’
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “ இந்த வெற்றியால் பெருமகிழ்ச்சி. நம்பமுடியவில்லை. 6 விக்கெட்டுகள் சென்றபின் சிறிது நம்பிக்கையற்று இருந்தோம். ஆனால் பாவெல் களமிறங்கி சிக்ஸர்கள் விளாசியபின் நம்பிக்கை ஏற்பட்டது, போட்டி கையைவிட்டுச் செல்லவில்லை என்று எண்ணினோம். தோல்வியிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெற்று அழகான நிகழ்வு, இதற்கு அதிர்ஷ்டமும் தேவை. நரைன், வருண் இருவருமே அற்புதமாக பந்துவீசி நடுப்பகுதி ஓவர்களில் எங்கள் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்தனர். இந்த விக்கெட் இருவருக்குமே அருமையாக ஒத்துழைத்தது.”
“கடந்த 7 ஆண்டுகளாக ஜாஸ் பட்லர் எங்கள் அணிக்காக அற்புதமாக பேட் செய்து வருகிறார். அவரின் பேட்டிங் நிலைத்துவிட்டால் கடைசி 20 ஓவர்கள்வரை நின்றுவிளையாடுவார் என டக்அவுட்டில் பேசிக்கொள்வோம். பட்லரின் 20வது ஓவர் பேட்டிங், ரன் எடுக்காத அவரின் புத்திசாலித்தனம், யாராலும் அவரை தோற்கடிக்க முடியாது என்பதை வெளிப்படுத்தியது” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், SPORTZPICS
ராஜஸ்தான் செய்த சாதனை
6 விக்கெட்டுகளை இழந்தநிலையில், கடைசி 6 ஓவர்களில் மட்டும் ராஜஸ்தான் அணி 103 ரன்களைச் சேர்த்துள்ளது. 6-வது விக்கெட்டை இழந்தபின், 100க்கும் மேற்பட்ட ரன்களை சேஸிங் செய்த அணி என்ற பெருமையை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றது.
ராஜஸ்தான் அணி 15-வது ஓவரை பேட் செய்ய எதிர்கொண்டபோது வெற்றிக்கு 96 ரன்கள் தேவைப்பட்டது. 36 பந்துகளில் 96 ரன்கள் என்பது சாத்தியமில்லாதது. ஆனால் கடைசி 6 ஓவர்களில் இதுபோன்ற மிகப்பெரிய ஸ்கோரை சேஸிங் செய்த முதல் அணி என்ற பெயரை ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்றது.
ராஜஸ்தான் அணி 14.1 ஓவர்களின்போது 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்திருந்தது. கணினியின் வெற்றிக் கணிப்பின்படி, ராஜஸ்தான் அணி வெல்வதற்கு 0.32 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால், அதன்பின் கூடுதலாக 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 96 ரன்களை சேஸிங் செய்தது ராஜஸ்தான் அணி.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி ராஜஸ்தான் அணி சேஸிங் செய்த 224 ரன்கள்தான் அதிகபட்ச சேஸிங்காகும்.

பட மூலாதாரம், SPORTZPICS
கடைசி 6 ஓவர்களில் நடந்தது என்ன?
ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி 36 பந்துகளில் 96 ரன்கள் தேவைப்பட்டது. பட்லர் 42 ரன்களுடனும், பாவெல்2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வருண் வீசிய 15வது ஓவரில் பட்லர் 4 பவுண்டரிகளை விளாசி 17 ரன்கள் சேர்த்துதனது அரைசதத்தை நிறைவு செய்தார்.
கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 79 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை ஆந்த்ரே ரஸல் வீசினார். ரஸல் ஓவரில் பாவெல் ஒரு சிக்ஸரும், பட்லர் ஒரு சிக்ஸரும் விளாசி 17 ரன்கள் சேர்த்து பதற்றத்தைத் தணித்தனர்.
கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 62 ரன்கள் தேவை. நரைன் வீசிய 17-வது ஓவரை பயன்படுத்திய பாவெல் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி, 4வது பந்தில் கால்காப்பில் வாங்கி 26 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 16 ரன்கள் மட்டுமே கிடைத்தது. பாவெல் சென்றபின் ராஜஸ்தான் அணியில் பெரிதாக பேட்டர்கள் யாரும் இல்லை என்பதால், பட்லரையும் தூக்கிவிட்டால் ராஜஸ்தான் தோல்வி உறுதி என்று வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.
கடைசி 18 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 46 ரன்கள் தேவை. அடுத்த 3 ஓவர்களையுமே பட்லர் தனி ஒருவனாக இருந்து களமாடி, கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை துவம்சம் செய்தார். கடைசி 3 ஓவர்களில் ஒரு பந்தைக் கூட ஸ்ட்ரைக்கில் ஆவேஷ் கானுக்கு பட்லர் வழங்கவில்லை. 2 ரன்கள், கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தனது பக்கவே பட்லர் வைத்திருந்து பேட் செய்தார் .

பட மூலாதாரம், Getty Images
மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய 18-வது ஓவரில் பட்லர் ஒரு சிக்ஸர், பவுண்டரியும் அடித்தார், அந்த ஓவரில் வைடில் பைஸ் 5 ரன்கள் என 18 ரன்கள் ராஜஸ்தானுக்குக் கிடைத்தது. ஆட்டத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.இந்த ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து பட்லர் ஸ்ட்ரைக்கை தக்கவைத்தார்.
கடைசி 12 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்சித் ராணா வீசிய 19-வது ஓவரில் பட்லர் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 19 ரன்கள் விளாசி கடைசிப்பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்து அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார்.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை. வருண் சக்ரவர்த்தி கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் லாங்-ஆன் திசையில் சிக்ஸரை விளாசி பட்லர் அதிர்ச்சி அளித்தார். அடுத்த 3 பந்துகளும் ரன் சேர்க்க வாய்ப்புக் கிடைத்தும் பட்லர் ஓடவில்லை, ஒரு ரன் எடுத்தால் ஆவேஷ் கான் ஸ்ட்ரைக்கில் வருவார், அவரை எளிதாக ஆட்டமிழக்கச் செய்துவிடுவார்கள் என்பதால் 3 பந்துகளையும் பட்லர் டாட் பந்துகளாக கழித்தார். 4வது பந்தில் லாங் ஆப் திசையில் தட்டிவிட்டு 2 ரன்களை பட்லர் சேர்த்தார். ஸ்கோர் சமநிலைக்கு வந்ததையடுத்து, ராஜஸ்தான் தோல்வியிலிருந்து தப்பியது. ஆனால், கடைசிப்பந்தில் ரன் அடிக்காவிட்டால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றுவிடும் என்பதால் ரசிகர்களும், வீரர்களும் பதற்றத்தில் இருந்தனர்.
வருண் வீசிய கடைசிப்பந்தை லெக் திசையில் தட்டிவிட்டு பட்லர் ஒரு ரன் எடுக்க ராஜஸ்தான் அணி ‘சாத்தியமில்லாத’ வெற்றியை பெற்றது. சதம் அடித்தபோதுகூட தனது பேட்டை உயர்த்தி பட்லர் கொண்டாடவில்லை, ஆனால், ராஜஸ்தான் வென்றவுடன், தனது ஹெல்மெட்டையும், பேட்டையும் தூக்கி எறிந்து பட்லர் வெற்றியைக் கொண்டாடினார்.

பட மூலாதாரம், Getty Images
நரைன் அடித்த முதல் சதம் வீணாகியது
கொல்கத்தா அணி 223 ரன்கள் அடித்ததில் பெரும்பகுதி காரணம் சுனில் நரைன்தான். டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 80 ரன்கள்வரை சேர்த்திருந்த நரைன் முதல்முறையாக சதத்தைபதிவு செய்து 109 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணியிலும் சுனில் நரைனைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.
கொல்கத்தா அணியில் இதுவரை 2 பேட்டர்கள் மட்டுமே சதம் அடித்திருந்தனர். முதலாவது மெக்கலம்(158), 2வதாக வெங்கேடஷ் ஐயர்(104), 3வதாக தற்போது நரைன்(109) சதம் அடித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் சதமும் அடித்து, பல விக்கெட்டுகளை 3 வீரர்கள் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர். கிறிஸ் கெயில் இருமுறையும், ஷேன் வாட்சன் ஒருமுறையும் நிகழ்த்தினர், 3வது வீரராத நரைன் சதமும் அடித்து, 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வீரரும், சதம் அடித்த வீரரும் என்ற ஒருசேரப் பெருமை பெற்றவர் சுனில் நரைன் மட்டும்தான். வேறு எந்த ஆல்ரவுண்டரும் சதம் அடித்திருந்தால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை, 5 விக்கெட்டுகளை எடுத்தவர்கள் சதம் அடித்தது இல்லை. இந்த இரு அம்சங்களை நிகழ்த்தியவர் நரைன் மட்டும்தான்.
2வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷியுடன் சேர்ந்து நரைன் 85 ரன்கள் சேர்த்ததுதான் பெரிய பார்ட்னர்ஷிப்பாகும். ரகுவன்ஷி(30) ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக பேட் செய்த நரைன் 29 பந்துகளில் அரைசதம் அடித்து, அடுத்த 20 பந்துகளில் அடுத்த 50 ரன்கள் சேர்த்து 49 பந்துகளில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். நரைன் தனது ரன் கணக்கில் 6 சிக்ஸர்கள், 9பவுண்டரிகளை விளாசினார்.

பட மூலாதாரம், Getty Images
சஹல், அஸ்வினை பந்துகளைப் பறக்க விட்ட நரைன்
நரைன் தனது 109 ரன்களில் 67 ரன்கள் சஹல், அஸ்வின் ஓவர்களில் அடித்ததாகும்.
அஸ்வின்,சஹல் ஓவரை வெளுத்து வாங்கிய நரைன், சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார். அஸ்வின் வீசிய ஓவரில் 17 பந்துகளைச் சந்தித்த நரைன் 34 ரன்களையும், சஹல் வீசிய ஓவரில் 11 பந்துகளில் 33 ரன்களையும் விளாசி, இருவரையும் ஓடவிட்டார். நரைன் கடைசியாக தான் சந்தித்த 14 பந்துகளில் மட்டும் 35 ரன்கள் சேர்த்தார். அஸ்வின், சஹல் இருவரும் ஓவருக்கு 12 ரன்கள் வீதம் வாரி வழங்கினர். அஸ்வினைப் பொருத்தவரை இந்த சீசன் அவருக்கு தொடக்கம் முதலே மோசமாக இருந்துவருகிறது.
மற்றவகையில் கொல்கத்தா அணியில் பேட்டர்கள் அதிகம் இருந்தும் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ்(11), ரஸல்(13), வெங்கடேஷ்(8), பில் சல்ட்(10) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களும் கேமியோ ஆடி இருந்தால் ஸ்கோர் 250 ரன்களைக் கடந்திருக்கும். ரிங்கு சிங் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 9 பந்துகளில் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தா கோட்டைவிட்டது எங்கே?
கொல்கத்தா அணியின் தொடக்கத்தில் இருந்தே நெருக்கடி கொடுத்து பந்துவீசியதால் ராஜஸ்தான் அணி சீராக விக்கெட்டுகளை இழந்தது. ஜெய்ஸ்வால்(19), சாம்ஸன்(12), ஜூரைல்(2), அஸ்வின(8), பராக்34) என சீராக விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் 97 ரன்கள்வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி, அடுத்த 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. நரைன், வருண் இருவரும் நடுப்பகுதி ஓவர்களில் ராஜஸ்தான் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்து, விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். இதனால் வெற்றி கொல்கத்தா பக்கம் என்றுதான் அனைவரும் நம்பினர்.
ஆனால், 15வது ஓவருக்குப்பின் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சு படுமோசமாக மாறியது. குறிப்பாக 15வது ஓவரில் இருந்து ராஜஸ்தான் அணி சராசரியாக 17 ரன்களுக்குள் குறைவில்லாமல் சேர்த்தது, அந்தஅளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு மோசமாக இருந்தது.
தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசிய நரைன், வருண் கடைசி ஸ்பெல்லில் பவுண்டரி, சிஸ்கர் வழங்கினார். மிட்ஷெல் ஸ்டார் கடைசி ஓவரில் பைஸ் உள்பட 18 ரன்கள், ராணவின் கடைசி ஓவர் என கொல்கத்தாவின் பதற்றத்தை பட்லர் பயன்படுத்தினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












