டி20 போட்டிகளில் அசத்தும் அபிஷேக் சர்மாவுக்கு சேவாக், யுவராஜ் கூறிய அறிவுரை என்ன?

பட மூலாதாரம், RAJ KUMAR SHARMA
- எழுதியவர், பாரத் சர்மா
- பதவி, பிபிசி செய்தியாளர்
"நான் முதல் தர கிரிக்கெட் விளையாடினேன். என் சக வீரர்கள் பலரும் இந்தியா அணியில் விளையாடினர், ஆனால் என்னால் முடியவில்லை என்று எப்போதும் என் அம்மாவிடம் சொல்வேன். ஏன் முடியவில்லை என எனக்குத் தெரியாது, ஒருவேளை அது கடவுளின் விருப்பம். அதற்கு என் அம்மா, 'மகனே, கவலைப்படாதே, நீ விளையாடவில்லை என்றாலும், உன் மகன் கண்டிப்பாக இந்தியாவுக்காக விளையாடுவான்' என்று சொல்வார்."
அந்த தருணத்தை நினைக்கும் போது ராஜ்குமார் சர்மா உணர்ச்சிவசப்படுகிறார். காரணம் என்ன தெரியுமா? அவரது அம்மா சொன்ன வார்த்தைகள் இன்று நிஜமாகி விட்டன.
"இது எனக்கு மிகுந்த பெருமையூட்டும் தருணம். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தை தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும், அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் உச்சம் அடைய வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். எங்கள் மகன் பல ஆண்டுகளுக்கு முன் பேட்டைக் கையில் எடுத்தான். போராடினான், கடுமையாக உழைத்தான். இன்று அவன் இந்தியாவுக்காக விளையாடுவதோடு மட்டுமின்றி போட்டிகளையும் வென்று கொண்டிருக்கிறான். இதைப் பார்க்கும் போது என் மனம் நெகிழ்கிறது"என்கிறார் ராஜ்குமார் சர்மா.
ராஜ்குமார் சர்மா, ஆசியக் கோப்பையில் புயலாய் விளையாடிக் கொண்டிருக்கும் அபிஷேக் சர்மாவின் தந்தை மட்டுமல்ல, அவருடைய பயிற்சியாளரும் கூட.
போராட்டப் பயணத்தில் மகனுடன் சேர்ந்து நடந்தவர் இன்று அவரது வெற்றியை நேரில் கண்டு மகிழ்கிறார்.
மூன்று வயதிலேயே தொடங்கிய பயிற்சி

பட மூலாதாரம், RAJ KUMAR SHARMA
அபிஷேக் சர்மாவின் வெற்றிக் கதை சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாபின் அமிர்தசரஸில் தொடங்கியது. அப்போது அவர் மூன்று–நான்கு வயதிலேயே, தனது தந்தையின் கனமான பேட்டை தூக்க முயன்றார்.
"என் உபகரணங்களும் கிரிக்கெட் கிட்டும் வீட்டில் இருக்கும். அப்போது அபிஷேக்குக்கு மூன்று அல்லது நான்கு வயதுதான் ஆனது. அவர், என் மட்டையை எடுக்க முயன்றார். அது அவரால் தூக்க முடியாத அளவுக்கு கனமாக இருந்தது. அதனால் அவருக்காக நான் ஒரு பிளாஸ்டிக் மட்டையை வாங்கினேன்," என்று ராஜ்குமார் சர்மா பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.
"அந்த பிளாஸ்டிக் மட்டையால் அவர் சிறந்த ஷாட்கள் அடிப்பார். அப்போது அவருடைய குரல் கூட தெளிவாக இருக்காது.
ஆனாலும், 'அப்பா, பந்தை எறியுங்கள்' என்று சொல்வார். சகோதரிகளிடம் பந்தை எறியச் சொல்லுவார். இரவில் என் மனைவியிடமும் பந்து வீசச் சொல்வார். இந்த வகையான பேட்டிங் மூலம்தான் அவருடைய ஆர்வம் இவ்வளவு உயர்ந்தது," என்றும் அவர் கூறினார்.
அபிஷேக் சர்மாவின் கடந்த காலம்

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP via Getty Images
அபிஷேக் சர்மாவின் சர்வதேச டி20 வாழ்க்கை குறுகியதாக இருந்தாலும், அதில் அவர் ஏற்கனவே வலுவான தடம் பதித்துள்ளார். 21 போட்டிகளில் 708 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 35.40 என்ற சராசரியுடன் இந்த ரன்களை எடுத்துள்ளார்.
இது டி20க்குப் பொருத்தமான, ஒரு நல்ல சராசரி ரன்ரேட். அதைவிட முக்கியமானது, அவரது ஸ்ட்ரைக் ரேட் 197.21. இது எந்த தொடக்க பேட்ஸ்மேனுக்கும் அபாரமானது.
மேலும், டி20 கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்களை அடைய மிகக் குறைந்த பந்துகள் எடுத்த சாதனையை இவர் படைத்துள்ளார். 331 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் 366 பந்துகளில் சாதித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் எவின் லூயிஸின் சாதனையை முறியடித்தார்.
கிரிக்கெட் வல்லுநர்கள், சேவாக் போன்ற ஆவேசத்தையும், யுவராஜ் சிங் போன்ற நேர்த்தியையும் அபிஷேக்கின் விளையாட்டில் காண்கிறார்கள்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, வீரேந்தர் சேவாக் அபிஷேக்கிடம் உரையாடும்போது, "நீங்கள் 70 ரன்கள் எட்டும்போது, அதை சதகமாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட வாய்ப்புகள் அடிக்கடி வருவதில்லை. இன்னும் சில நிமிடங்களில் யுவராஜ் சிங் உங்களை அழைப்பார். அவர் அதை விளக்குவார் " என்று அறிவுரை கூறினார்.
சேவாக்கின் வார்த்தைகளைக் கேட்ட அபிஷேக், "ஆம், நீங்கள் சொல்வது சரிதான். நானும் அதில் ஈடுபட்டு வருகிறேன். அவர் (யுவராஜ்) கூட அதையேதான் சொல்வார்" என்றார்.
அந்தப் போட்டியில் அபிஷேக் வெறும் 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். அவர் புயலாய் சிக்ஸர்களை அடித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் தவறான முறையில் அடித்ததால் விக்கெட்டை இழந்தார்.
யுவராஜ் சிங்கைப் பற்றி சேவாக் ஏன் குறிப்பிட்டார் என்பதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.
முதலில், அபிஷேக் சர்மாவின் குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவம் வரை நடந்த பயணத்தை தெரிந்துகொள்வோம்.
அபிஷேக் சர்மாவின் வெற்றிப் பயணம்

பட மூலாதாரம், Getty Images
அபிஷேக் சர்மாவின் தந்தை ஒரு வங்கியில் பணியாற்றினார், கிரிக்கெட்டும் விளையாடினார்.
அவரது தாயாரைத் தவிர, அவரது குடும்பத்தில் இரண்டு அக்காக்கள் உள்ளனர். ஒருவர் ஆசிரியர், மற்றொருவர் மருத்துவர்.
பழைய நாட்களை நினைவு கூர்ந்த ராஜ்குமார் சர்மா, "நான் மைதானத்திற்குச் சென்றாலே, அபிஷேக் என்னுடன் வருவார். நான் பெரிய குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருப்பேன். அவர்கள் அபிஷேக்கைப் பார்த்ததும், 'உங்கள் மகனுக்கு நிறைய திறமை இருக்கிறது' என்று சொல்வார்கள்'' என்கிறார்.
"அபிஷேக்கின் ஆர்வத்தைக் கண்டதும், கிரிக்கெட்டில் அவரை நிச்சயம் ஈடுபடுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் தேர்வாளராக, நடுவராக, பயிற்சியாளராக இருந்தாலும், அவரை நான் தனியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்"
அபிஷேக் அமிர்தசரஸில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் பயின்றார், ஒவ்வொரு வகுப்பிலும் 90 சதவீத மதிப்பெண் பெற்றார்.
"அவர் ஒரு சிறந்த மாணவர். போட்டிகளுக்கு இடையில் வந்து, தேர்வுகளை எழுதி, சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார். எந்த பாடத்திலும் அவருக்கு குறைந்த மதிப்பெண்கள் இல்லை. அவர் தனது பி.ஏ. பட்டப்படிப்பை கூட முடித்தார்" என்று அவரது தந்தை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.
திருப்புமுனை

பட மூலாதாரம், RAJ KUMAR SHARMA
பல ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் 12 வயதுக்குட்பட்டோர் மற்றும் 14 வயதுக்குட்பட்டோர் அணிகளை உருவாக்கி ஒரு முகாமை ஏற்பாடு செய்தது.
புதிய திறமைகளை வளர்ப்பதே இதன் குறிக்கோளாக இருந்தது. அதன் தலைவர் கபில் தேவின் வழிகாட்டியாக இருந்த டி.பி. ஆசாத் ஆவார். பஞ்சாப் கிரிக்கெட்டில் அவர் மிகவும் மதிக்கப்பட்டார்.
பஞ்சாப் முழுவதிலுமிருந்து 30 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறுவர்களாக அப்போது அதில் கலந்துகொண்டனர்.
"அவர்கள் இருவரும் மிகச் சிறியவர்கள். இருவருக்கும் இயல்பான திறமை இருக்கிறது என்று ஆசாத் சொன்னார். நான் போட்டியைப் பார்ப்பதற்காக சென்றிருந்தேன். ஆசாத் மற்றும் அருண் பேடியும் அங்கேயே இருந்தார்கள்'' என ராஜ்குமார் சர்மா நினைவுகூருகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், அருண் பேடி என்னை தனியாக அழைத்துச் சென்று, "இந்த 30 பேரில் இந்த இருவர்தான் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இருவரும் இந்தியாவுக்காக விளையாடுவார்கள், இன்னிங்ஸைத் தொடங்குவார்கள்" என்று கூறினார்.
இந்த இரண்டு பயிற்சியாளர்களின் வார்த்தைகள் ராஜ்குமார் சர்மாவின் உறுதியை வலுப்படுத்தின.
அவர் வங்கியில் வேலை பார்த்தாலும், அபிஷேக்குக்காக நேரம் ஒதுக்கி இரவும் பகலும் பயிற்சி அளித்தார்.
பஞ்சாபின் 16 வயதுக்குட்பட்ட அணியின் கேப்டனாக அபிஷேக் சர்மா இருந்தார். ஒரு சீசனில், அவர் 1,200 ரன்கள் எடுத்து 57 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதன் பிறகு அவருக்கு பிசிசிஐ நமன் விருது வழங்கியது.
பின்னர் அவர் 19 வயதுக்குட்பட்ட வடக்கு மண்டல அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார், அவரது அணி வெற்றியும் பெற்றது. பின்னர் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் சென்றார், அங்கு ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலின் கீழ் அவரது திறமை மேலும் மெருகூட்டப்பட்டது.
பின்னர், அபிஷேக் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் கேப்டனானார், அவரது தலைமையில் அந்த அணி இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பையை வென்றது.
அபிஷேக்கின் இந்த முன்னேற்றமே, அவரை இந்திய கிரிக்கெட்டின் பிரபல நட்சத்திரம் யுவராஜ் சிங்குடன் நெருக்கமாகக் கொண்டு சென்றது.
அபிஷேக் - யுவராஜ் சிங் சந்திப்பு

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP via Getty Images
ரஞ்சி டிராபி தான் அபிஷேக் சர்மா மற்றும் யுவராஜ் சிங்கை இணைத்தது. பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் அபிஷேக் மற்றும் சுப்மன் கில்லுக்கு ரஞ்சி டிராபியில் வாய்ப்பு வழங்க விரும்பிய காலம் அது.
அதே சமயம், பிசிசிஐயின் அறிவுறுத்தலின் பேரில், நோயிலிருந்து மீண்டு இந்திய அணிக்கு திரும்ப முயற்சி செய்து கொண்டிருந்த யுவராஜ் சிங் ரஞ்சி டிராபியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது யுவராஜ் சிங்கிடம் 19 வயதுக்குட்பட்ட அணியிலிருந்து இரண்டு சிறுவர்கள் வருவதாகச் சொல்லப்பட்டது. ஒருவர் தொடக்க வீரர் என்றும், மற்றொருவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்றும் சொல்லப்பட்டது.
"யுவராஜ் ஏற்கனவே பந்து வீச்சாளர்கள் இருந்ததால் தனக்கு ஒரு பேட்ஸ்மேன் தேவை என்று கூறினார். வேண்டாம், இருவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார்கள் தேர்வாளர்கள். ஒரு போட்டியில், மூன்று அல்லது நான்கு வீரர்கள் சீக்கிரமே ஆட்டமிழந்தனர். யுவராஜ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அடுத்து அபிஷேக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அப்போது அபிஷேக் களமிறங்கி 100 ரன்கள் எடுத்தார்" என்று ராஜ் குமார் சர்மா நினைவு கூர்ந்தார்.

தன்னுடன் பயிற்சி பெறுவீர்களா என்று மைதானத்தில் அபிஷேக்கிடம் யுவராஜ் சிங் கேட்டதாக ராஜ் குமார் சர்மா கூறினார். ''அதற்கு அபிஷேக், யுவராஜை தனது தெய்வமாகவும், தனது கடவுளாகவும் கருதுவதாகவும், அவரைப் பார்த்து விளையாடக் கற்றுக்கொண்டதாகவும் பதிலளித்தார்.''
அப்போதிருந்து யுவராஜ் சிங் அபிஷேக்கிற்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இன்று இருவரின் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.
அத்தகைய ஒரு வீடியோவில், யுவராஜ் சிங் அபிஷேக் சர்மாவிடம், "நீ இன்னும் மேம்படவில்லை. சிக்ஸர்களை மட்டும் அடித்தாய், ஆனால் கிரவுண்ட் ஷாட்களையும் விளையாடு," என்று அறிவுரை கூறுகிறார்.
"யுவராஜ்தான் என் மகனை முழுமையாகக் கவனித்து வருகிறார். என் மகனை வலிமையாக்கியுள்ளார். ஒரு உலகத் தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் பயிற்சி அளிக்கிறார் என்றால், அந்த வீரர் எவ்வளவு உயரம் செல்ல முடியும் என்று நினைத்துப் பாருங்கள். இது வெறும் தொடக்கம்தான்" என்று பெருமையுடன் சொல்கிறார் ராஜ் குமார் சர்மா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












