ஸ்பெயின்: 50 ஆண்டுகளில் கண்டிராத பெருமழையின் பாதிப்பைக் காட்டும் படங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மட் மெக்கிராத்
- பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர்
ஸ்பெயின், கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெருவெள்ளத்தைத் தற்போது சந்தித்து வருகிறது.
அந்நாட்டின் கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் குறைந்தது 150 பேர் இறந்தனர், மேலும் பலர் காணாமல் போயிருக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
இந்த வெள்ளத்தின் பாதிப்புகளை காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.


பட மூலாதாரம், Getty Images


பட மூலாதாரம், Getty Images
காலநிலை மாற்றம் காரணமா?
எந்தவொரு அதீத காலநிலை நிகழ்வையும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாக குறிப்பிடுவதில் விஞ்ஞானிகள் தயக்கம் காட்டிவரும் நிலையில், ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு வெப்பநிலை உயர்வின் பங்கு குறித்து ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
“இந்தப் பெருமழை, காலநிலை மாற்றத்தால் தான் தீவிரமடைந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை,” என காலநிலை நிகழ்வுகளில் வெப்பமயமாதலின் பங்கு குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச குழுவை வழிநடத்திய, லண்டனில் உள்ள இம்பெரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃபிரெடரிக் ஓட்டோ கூறுகிறார்.


பட மூலாதாரம், Getty Images
புதைபடிவ எரிபொருட்களால் ஏற்படும் வெப்பமயமாதல்
“புதைபடிவ எரிபொருட்களால் ஏற்படும் வெப்பமயமாதலின் ஒவ்வொரு பகுதியிலும், வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தைத் தக்க வைப்பதன் விளைவாக அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது,” என்று ஃபிரெடரிக் ஓட்டோ கூறுகிறார்.
ஸ்பெயினில் இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தில் இயற்கையாக ஏற்படும் வானிலை நிகழ்வு இந்தப் பெருமழைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

'ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு 7% அதிக மழை'
இத்தகைய வானிலை நிகழ்வு ‘கோட்டா ஃப்ரியா’ (gota fría) அல்லது ‘கோல்ட் டிராப்’ (cold drop) என அழைக்கப்படுகிறது. அதாவது, கடந்த சில ஆண்டுகளாக அதீத வெப்பநிலையைச் சந்தித்துவரும் மத்திய தரைக்கடலில், குளிர்காற்று வெப்பமான நீரை நோக்கிக் கீழிறங்குகிறது.
இதனால் மத்திய தரைக்கடலின் மேற்பரப்பில் வெப்பமான ஈரக்காற்று உயர்ந்து, அதிஉயர் மேகங்களை உருவாக்கி அவை பெருமழையை ஏற்படுத்துகின்றன.
இந்த மேகங்கள் உருவாக்கும் மழையின் அளவில், காலநிலை மாற்றம் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் 7% மழை அதிகரிப்பதாக கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Reuters
மண்ணில் வெப்பத்தன்மை அதிகரிப்பு
இதனால், மழை பெய்யத் துவங்கும்போது, அது அதீத தீவிரத்துடன் நிலத்தில் விழுகிறது. இவ்வளவு அதிகமான நீரை உறிஞ்சும் தன்மை மண்ணுக்கு இல்லை.
“அதீத மழைப்பொழிவு நிகழ்வுகளுடன், அதிக வெப்பமான கோடைக்காலத்தை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அதனால், மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மை குறைகிறது,” என லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்க் ஸ்மித் கூறுகிறார்.
“அதிகமான நீர் ஆறுகளில் கலப்பதால், அதீத மழையின் உடனடி விளைவுகள் தீவிரமடைகின்றன,” என்கிறார் அவர்.
வெப்பநிலை உயர்வு இத்தகைய புயல்களை மெதுவாக நகர்பவையக மாற்றி, அதனால் மழைப்பொழிவை அதிகமாக்குவதாக, விஞ்ஞானிகளுக்கு இடையே விவாதங்கள் நடைபெறுகின்றன.


அதிகரிக்கும் புயல்கள்
இவ்வித புயல்களையும் அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் இந்த ஆண்டு நாம் கண்டோம்.
மத்திய ஐரோப்பாவில் கடந்த செப்டம்பர் மாதம் போரிஸ் புயல் உயிரிழப்புகளையும் பேரழிவையும் ஏற்படுத்தியது. இதன் விளைவுகளும் மத்திய தரைக்கடலின் அதீத வெப்பத்தால் அதிகரித்தன.
இத்தகைய மெதுவாக நகரும் பேரழிவை காலநிலை மாற்றம் இரட்டிப்பாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஸ்பெயினில் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Matthias Bachler

பட மூலாதாரம், Daniel Ross

பட மூலாதாரம், Darna Animal Rescue

பட மூலாதாரம், Reuters
ஆனால், வேகமாக நகரும், தீவிரமான இடியுடன் கூடிய மழையை முன்கூட்டியே கணிப்பது சிக்கலான பணி என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“வெள்ளத்திற்கு முன்னதாக, உயர்வான இடங்களுக்குச் செல்ல மக்களுக்கு உதவுவதிலும் பாதுகாப்பிலும் முன்னெச்சரிக்கைகள் உயிர்காக்கும் அம்சமாக விளங்குகின்றது. ஆனால், தற்போது நாம் ஸ்பெயினில் பார்த்தது போன்ற தீவிர, இடியுடன் கூடிய மழைக்கு முன்னெச்சரிக்கை விடுப்பது மிகவும் கடினமானது. ஏனெனில், எங்கு கனமழை பொழியும் என்பதை பெரும்பாலும் முன்கூட்டியே அறிய முடியாது.” என்கிறார், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் டாக்டார் லிண்டா ஸ்பெயிட்.
“வானிலை முன்னறிவிப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், இந்தச் சாவலை எதிர்கொள்வதற்குப் புதுமையான தீர்வுகளைக் கண்டறிய கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இது எளிமையான ஒன்றாக இருக்கப் போவதில்லை,” என்கிறார் அவர்.
அதீத வெள்ளம் போன்ற காலநிலை நிகழ்வுகளைத் தாக்குப்பிடிக்கும் திறன் நவீன உட்கட்டமைப்புகளுக்கு இல்லை என்பதை ஸ்பெயின் வெள்ளம் சுட்டிக்காட்டுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல நமது சாலைகள், பாலங்கள், தெருக்கள் ஆகியவை கடந்த நூற்றாண்டின் காலநிலையைத் தாங்கும் வகையில் கட்டப்பட்டவை, மாறிவரும் காலநிலைக்கு ஏற்றவை அல்ல.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












