வெனிசுவேலாவுக்கு எதிரான 'போர்' அல்ல - மார்கோ ரூபியோ கூறியது என்ன? நேரலை தகவல்கள்

அமெரிக்கா - வெனிசுவேலா, நிக்கோலஸ் மதுரோ, டிரம்ப்

பட மூலாதாரம், TRUTH SOCIAL

படக்குறிப்பு, நிக்கோலஸ் மதுரோ

வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் மதுரோவை சிறைபிடித்த அமெரிக்கா, அவரை நியூயார்க் கொண்டு சென்றுள்ளது. அங்கே மன்ஹாட்டனின் மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

போதைப்பொருள் தடுப்பு மற்றும் அழிவுகரமான ஆயுதங்களை வைத்திருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்காவில் மதுரோ எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதேநேரத்தில், வெனிசுவேலாவில் அரசு நிர்வாகத்தை கவனிக்க துணை அதிபர் ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

வெனிசுவேலாவுக்கு எதிரான 'போர்' அல்ல - மார்கோ ரூபியோ

அமெரிக்காவின் தாக்குதலால் கராகஸில் உருக்குலைந்த கார்கள் மற்றும் கட்டடங்கள்

பட மூலாதாரம், CBS News

படக்குறிப்பு, அமெரிக்காவின் தாக்குதலால் கராகஸில் உருக்குலைந்த கார்கள் மற்றும் கட்டடங்கள்

அமெரிக்க ஊடகங்களுடன் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, வெனிசுவேலா மீதான தாக்குதல் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அமெரிக்காவின் நடவடிக்கை போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளுக்கு எதிரான போர் என குறிப்பிட்ட அவர், இது "வெனிசுவேலாவுக்கு எதிரான போர் அல்ல" என்று கூறினார்.

வெனிசுவேலா மீதான நடவடிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த ரூபியோ, "இது ஒரு ஊடுருவல் படையெடுப்பு அல்ல" என்பதால் நடவடிக்கைக்கு முன் நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் தேவையில்லை என்று கூறுகிறார்

நிக்கோலஸ் மதுரோவை நீக்குவது "ஒரு சிறந்த வெனிசுவேலா"வுக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாகவும், ஆனால் "முக்கிய நோக்கம் அமெரிக்கா" என்றும் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், இப்போது வெனிசுவேலாவின் சட்டபூர்வமான அதிபர் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டபோது, ​​ஆட்சி முறையானது என்று அமெரிக்கா நம்பவில்லை என்று ரூபியோ கூறினார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, சிறைபிடித்து அழைத்து வரப்பட்ட வெனிசுவேலா அதிபர்

மதுரோ நியூயார்க் கொண்டு செல்லப்பட்டது எப்படி?

வெனிசுவேலாவில் சிறை பிடிக்கப்பட்டது முதல் நியூயார்க்கில் தரையிறங்கியது வரையிலான நிக்கோலஸ் மதுரோவின் பயணம் எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம்.

வெனிசுவேலா தலைநகர் கராகஸில் இருந்து சனிக்கிழமை அதிகாலையில் மதுரோ ஒரு அமெரிக்க ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார்.

கரீபியன் கடலில் ரகசிய இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த யுஎஸ்எஸ் அயோவா ஜிமா என்ற போர்க்கப்பலில் அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கியது. மதுரோ அந்த கப்பலில் ஏற்றப்பட்டார்.

பின்னர் கியூபாவில் உள்ள குவாண்டனாமோ விரிகுடா அமெரிக்க கடற்படைத் தளத்திற்கு விமானத்தில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அமெரிக்க கடற்படை தளத்தில் இருந்து நியூயார்க் மாகாணத்தின் ஆரஞ்சு கவுன்டியில் உள்ள ஸ்டீவர்ட் விமானப்படைத் தளத்திற்குச் செல்ல மற்றொரு விமானத்திற்கு மதுரோ மாற்றப்பட்டார்.

அதன் பிறகு, மதுரோ ஹெலிகாப்டர் மூலம் நியூயார்க் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

மொத்தத்தில், வெனிசுவேலா அதிபர் மதுரோ சிறை பிடிக்கப்பட்டது முதல் அமெரிக்காவில் தரையிறங்கும் வரையிலான பயணம் 2,100 மைல்கள் (3,300 கி.மீ) தூரம் நீண்டுள்ளது.

அமெரிக்கா - வெனிசுவேலா, நிக்கோலஸ் மதுரோ, டிரம்ப்

பட மூலாதாரம், Jeenah Moon/Reuters

படக்குறிப்பு, மதுரோவை ஏற்றிச் சென்றதாக கருதப்படும் ஹெலிகாப்டர் மன்ஹாட்டனில் தரையிறங்கிய போது எடுத்த படம்

மதுரோவும் அவரது மனைவியும் எங்கே?

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, சிறை பிடிக்கப்பட்ட நிகோலஸ் மதுரோவின் மனைவி யார்?

நிக்கோலஸ் மதுரோவை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் வாகன அணிவகுப்பு, மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திலிருந்து வெளியேறி, மன்ஹாட்டனின் வெஸ்ட்சைடு நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிச் சென்று, பின்னர் ஹெலிபேடிற்குத் திரும்பியது.

வெனிசுவேலா அதிபரும் அவரது மனைவியும் பின்னர் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்திற்குச் செல்வதற்காக மீண்டும் ஒரு ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டதாகத் தெரிகிறது.

மூன்று ஹெலிகாப்டர்கள் ஹட்சன் நதி வழியாகப் பயணித்து, நியூயார்க் துறைமுகத்தில் உள்ள சுதந்திர தேவி சிலையை கடந்து சென்றன. அவர்கள் இப்போது தரையிறக்கப்பட்டு, சட்ட அமலாக்க வாகனங்களின் அணிவகுப்பில் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து அமெரிக்கா தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

அமெரிக்கா - வெனிசுவேலா, நிக்கோலஸ் மதுரோ, டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

மதுரோ மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிப்புக்கு எதிராக போராட்டம்

வெனிசுவேலா அதிபர் மற்றும் அவரது மனைவியும் முதல் பெண்மணியுமான சிலியா ஃபுளோரஸ் ஆகியோர் மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பயங்கரவாதத்தில் ஈடுபட சதி செய்தல் மற்றும் கோகெய்ன் இறக்குமதி செய்தல், இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல், அமெரிக்காவிற்கு எதிராக இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை அவர்கள் இருவரும் எதிர்கொண்டுள்ளனர்.

வெனிசுவேலாவின் ராணுவ நிலைகள் மீதான தாக்குதல்களால் உருக்குலைந்த வாகனங்கள்

பட மூலாதாரம், CBS News

படக்குறிப்பு, வெனிசுவேலாவின் ராணுவ நிலைகள் மீதான தாக்குதல்களால் உருக்குலைந்த வாகனங்கள்

அமெரிக்க ஊடக செய்திகளின்படி, இந்த தம்பதியினரின் பயோமெட்ரிக்ஸ் தகவல்களை பதிவு செய்யும் செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

அவர்களின் தகவல்கள் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பில் உள்ளிடப்படுவதற்கு முன்பு, பயோமெட்ரிக்ஸ் பதிவுகள், கைரேகைகள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும்.

இந்த தம்பதியினர் நியூயார்க் நகரத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும், அங்கு அவர்கள் மீண்டும் பதிவு செய்யப்படுவார்கள்.

அதன்பிறகு மதுரோவும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள், இது திங்கட்கிழமையே (நாளை) நடக்கக்கூடும்.

வெனிசுவேலாவில் இடைக்கால அதிபர் நியமனம்

அமெரிக்கா - வெனிசுவேலா, நிக்கோலஸ் மதுரோ, டிரம்ப்

பட மூலாதாரம், Venezuela State Television

படக்குறிப்பு, வெனிசுவேலாவின் துணை அதிபராக பணியாற்றி வரும் ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக செயல்படலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸில், அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் துணை அதிபராக பணியாற்றி வரும் டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக செயல்படலாம் என்று அறிவித்துள்ளது.

"நிர்வாகம் தொடர்ந்து நடப்பதை உறுதி செய்வதற்கும், தேசத்தின் முழுமையான பாதுகாப்பிற்கும்" ரோட்ரிக்ஸை அப்பதவியில் அமர்த்துவது முக்கியம் என்று வெனிசுவேலா உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு