வாங்குவது அதிகம், அணிவது குறைவு - இந்தியர்கள் தங்கம் வாங்குவதில் புதிய மாற்றம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அனாஹிதா சச்தேவ்
- பதவி, நிகில் இனாம்தார்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
மாலை நேரத்தில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கடைகளின் பளபளப்பான விளம்பரப் பலகைகள் ஒருபுறம் வாடிக்கையாளர்களை ஈர்க்க, தெருக்களில் கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
10 கிராம் தங்கத்தின் விலை 1,440 டாலரைத் (1,081 யூரோ) எட்டியுள்ளது. இதனால், உலகின் இரண்டாவது பெரிய தங்கச் சந்தையான இந்தியாவில் நகைக்கான தேவை சற்று குறைந்திருக்கலாம். ஆனால், தங்கத்தின் மீதான இந்தியர்களின் ஆர்வம் முழுமையாக குறையவில்லை.
தீபாவளியும், வட இந்தியாவில் கொண்டாடப்படும் தந்தேராஸ் தினமும் (18/10/2025) தங்கம், வெள்ளி போன்ற விலைமதிப்புள்ள உலோகங்களை வாங்குவதற்கு மங்களகரமான நாட்களாகக் கருதப்படுகின்றன. செல்வமும் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், லட்சக்கணக்கான இந்தியர்கள் நகைக்கடைகளில் குவிகின்றனர்.
விலைவாசி உயர்வு, மக்கள் மனதில் 'இன்னும் விலை உயர்ந்தால் என்ன செய்வது, ஒருவேளை கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஃபோமோ (FOMO-Fear Of Missing Out) உணர்வை உருவாக்கியுள்ளது. "இதனால், இந்த ஆண்டு என் கடைக்கு அதிக வாடிக்கையாளர்கள் வந்துள்ளனர்," என்கிறார் குமார் ஜுவல்ஸ் உரிமையாளர் பிரகாஷ் பஹ்லஜானி.
தங்கத்தின் விலை 60% வரையும் வெள்ளியின் விலை 70% வரையும் உயர்ந்ததால், வாடிக்கையாளர்களின் பட்ஜெட் குறைந்துள்ளது. இதனால் நகை வியாபாரிகள் தங்கள் விற்பனை முறையை மாற்ற வேண்டியிருக்கிறது.
"மக்கள் 'வாங்க மாட்டேன்' என்று சொல்லவில்லை. அவர்கள் 'குறைவாக வாங்குகிறேன்' என்று சொல்கிறார்கள்," என்கிறார் மற்றொரு நகை வியாபாரியான தனிஷ்க் குப்தா.
புதுமையான முறையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக குறைவான தங்கத்தைக் கொண்டு, பார்ப்பதற்கு பெரிதாகத் தோன்றும் வகையில் புதிய வடிவமைப்புகளை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
உதாரணமாக, 250 மில்லிகிராம் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு நாணயத்தை 35 டாலருக்கும் குறைவாக தனிஷ்க் குப்தா விற்பனை செய்கிறார்.
அது மெலிதாக இருந்தாலும், கனமான நாணயங்களைப் போலவே பெரிதாகத் தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், 25 மில்லிகிராம் எடையுள்ள சிறிய நாணயங்களும் தற்போது கிடைக்கின்றன.
விலை உயர்வால், எடை குறைந்த நகைகள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. "குறிப்பாக இளைஞர்கள் அன்றாடம் அணியும் எளிமையான நகைகளையே விரும்புகிறார்கள்," என்கிறார் விற்பனையாளர் புஷ்பிந்தர் சவுகான்.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு, நகைகளை விட முதலீட்டுக்காக தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று பல நகை வியாபாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
இது சந்தைத் தரவுகளிலும் தெளிவாகத் தெரிகிறது.
உலக தங்கக் கவுன்சிலின் (WGC) தகவல்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கத் தேவையில் தங்க நகைகள் தொடர்ந்து மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன. ஆனாலும், தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் என முதலீட்டுக்கான தேவையும் மறுபுறம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
"2023-ல் 80% ஆக இருந்த நகைகளின் பங்கு, 2025-ன் இரண்டாவது காலாண்டில் 64%-ஆக குறைந்துள்ளது. அதேநேரம், முதலீட்டுத் தேவை 19%-லிருந்து 35%-ஆக உயர்ந்துள்ளது" என்கிறார் கவுன்சிலின் ஆராய்ச்சித் தலைவர் கவிதா சாக்கோ.
முதலீட்டுத் தேவையில் பெரும்பகுதி பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETF) மற்றும் டிஜிட்டல் தங்கத்திலிருந்து வருகிறது. செப்டம்பர் 2025-ல் பரிவர்த்தனை வர்த்தக நிதிகளில் மிக உயர்ந்த முதலீடு பதிவாகியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) செயல்பாடும் தங்கத்தின் விலையில் பெரிதும் தாக்கம் செலுத்துகிறது. உலக தங்கக் கவுன்சில் தரவுப்படி, 2025 இல் அந்நியச் செலாவணி இருப்புகளில் தங்கத்தின் பங்கு 9% இலிருந்து 14% ஆக உயர்ந்துள்ளது.
"கடந்த மூன்று ஆண்டுகளாக உலகளாவிய தங்கத் தேவையை தீர்மானிப்பதில் முக்கிய ஆதாரமாக இந்திய ரிசர்வ் வங்கியும் இருந்து வருகிறது," என்று கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கெய்னாட் செயின்வாலா கூறுகிறார்.
இந்திய ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணி இருப்பை பன்முகப்படுத்தவும், அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதை குறைக்கவும், புவிசார் அரசியல் பதற்றமாக இருக்கும் சூழலில் நாட்டின் பொருளாதாரம் உறுதியாக இருப்பதை உறுதி செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை பெருமளவில் சேமித்து வருகிறது எனவும் அவர் கூறினார்.

பண்டிகை மற்றும் திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருந்தாலும், அதற்கான தேவை தொடர்ந்து நீடிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"பணக்காரர்கள் தங்கம் வாங்குவதைத் தொடருவார்கள். ஆனால், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இது பெரிய சவாலாக உள்ளது," என்கிறார் பாங்க் ஆஃப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ். "வாங்கப்படும் அளவு குறையலாம், ஆனால் மதிப்பின் அடிப்படையில் தேவை நீடிக்கும்"என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
விலை உயர்வால் சில குடும்பங்கள் தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றன.
"ஏதாவது வாங்கலாமா, வேண்டாமா என்று நிறைய யோசிக்க வேண்டியுள்ளது," என்கிறார் பாவ்னா. அவருக்கு வரும் பிப்ரவரியில் திருமணம் ஆகவுள்ளது.
தற்போது, தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டு, விலை சற்று குறையும் வரை காத்திருக்க அவர் எண்ணுகிறார்.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images
தங்கத்தின் மீது, குறிப்பாக நகைகளின் மீது, இந்தியர்களுக்கு ஆழமான பற்று உள்ளது. இதனால், தங்கத்தின் விலை உயர்ந்தாலும் அல்லது தற்காலிகமாகக் குறைந்தாலும், நீண்ட காலத்திற்கு அதன் மீதான ஆர்வம் குறையாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வளர்ச்சி மந்தமாகவும், வேலைவாய்ப்புகள் குறைவாகவும் உள்ள இந்தக் காலத்தில் தங்கத்தைச் சேமிப்பது, இந்தியர்களுக்கு நல்ல வருமானத்தைத் தந்து, பலரை செல்வந்தர்களாக்கியுள்ளது. அமெரிக்க முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி கணக்கீட்டின்படி, இந்திய குடும்பங்கள் 3.8 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை வைத்திருக்கின்றன. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 88.8% ஆகும்.
"தங்கம் விலை தொடர்ந்து உயர்வதால், இது குடும்பங்களின் சொத்து மதிப்பை அதிகரிக்கிறது," என்கின்றனர் பொருளாதார நிபுணர்களான உபாசனா சச்ரா மற்றும் பானி கம்பீர்.
மேலும், "நிதி கொள்கையால் வட்டி செலவுகள் குறைவதும் மற்றும் நேரடி, மறைமுக வரிக் குறைப்புகளால் செலவழிக்கக் கூடிய வருமானம் அதிகரிப்பதும்" இந்திய குடும்பங்களுக்கு கூடுதல் நன்மையைத் தருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உயர்ந்து வரும் தங்கம் விலை அதன் மீதான ஈர்ப்பை சற்று மங்கச் செய்திருந்தாலும், பண்டிகை காலத்தின் தொடக்கம் சிறப்பாகவே உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












