தமிழ்நாட்டை நோக்கி நகரும் 'திட்வா' புயலால் எங்கெல்லாம் மிக கனமழை பெய்யும்? புதிய அப்டேட்

திட்வா புயல், தமிழ்நாடு, இலங்கை, இந்தியா

பட மூலாதாரம், IMD

படக்குறிப்பு, திட்வா புயலின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள திட்வா புயல், சென்னைக்கு தெற்கே 350 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், "இலங்கை யாழ்ப்பாணத்துக்கு கிழக்கு-வடகிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், நாகை வேதாரண்யத்துக்கு தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தெற்கே 350 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.''

''இது வடக்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நவம்பர் 30 அதிகாலை அடையக்கூடும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

திட்வா புயல் காரணமாக அடுத்த சில நாள்களுக்கு எந்தெந்த இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

நவம்பர் 29:

தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக மிகக் கனமழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கனமழை பெய்யக்கூடும்.

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

நவம்பர் 30:

திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கன மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக மிகக் கனமழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 1:

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்.

இவைதவிர்த்து தமிழ்நாட்டிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒருசில பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 1 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

திட்வா புயலின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம்.

புயல் எச்சரிக்கை கூண்டு

பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் நான்காம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

பலத்த காற்று வீச வாய்ப்பு

தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர பகுதிகளில் இன்றும் (நவம்பர் 29), நாளையும் (நவம்பர் 30) பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நவம்பர் 29:

டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

நவம்பர் 30:

வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த தரைக் காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வீசிவரும் சூறாவளிக் காற்றின் வேகம் நவம்பர் 29 காலை மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தையும், அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தை அடையும் என்றும், அது 30ம் தேதி காலை வரை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் வேகம், டிசம்பர் ஒன்றாம் தேதி மணிக்கு 55-65 கி.மீ ஆகக் குறைந்து (அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசும்), டிசம்பர் 2ம் தேதி மணிக்கு 45-55 கி.மீ வரை (அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசும்) குறையும்.

நவம்பர் 30 வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் அதில் முன்னேற்றம் காணப்படும்.

தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் தற்போது மணிக்கு 55-65 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசிக்கொண்டிருக்கிறது (நவம்பர் 29 அதிகாலை 5.30 நிலவரப்படி). இது அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தை எட்டுகிறது. இந்தக் காற்றின் வேகம் நவம்பர் 30 வரை மணிக்கு 60-70 கி.மீ ஆக நீடிக்கலாம். அவ்வப்போது அது மணிக்கு 80 கி.மீ வேகத்திலும் வீசலாம்.

நவம்பர் 30 நள்ளிரவு வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் மெல்ல முன்னேற்றம் காணப்படும்.

தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் தற்போது மணிக்கு 65-75 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இதன் வேகம் அதிகரித்து, மணிக்கு 70-80 கி.மீ ஆக அதிகரித்து (அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொடும்) நவம்பர் 30 காலை வரை நீடிக்கும். இதன் வேகம், டிசம்பர் ஒன்றாம் தேதி மணிக்கு 55-65 கி.மீ ஆகக் குறைந்து (அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசும்), டிசம்பர் 2ம் தேதி மணிக்கு 45-55 கி.மீ வரை (அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசும்) குறையும்.

நவம்பர் 30 வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் அதில் முன்னேற்றம் காணப்படும்.

மேற்கண்ட இடங்களில் இந்த காலகட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலில் இருப்பவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி & தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளை டிசம்பர் ஒன்றாம் தேதி வரை தவிர்க்கவேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடற்கரையை நவம்பர் 30 வரை தவிர்க்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புயல் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு முழுவதும் இன்று (நவம்பர் 29) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை முழுவதும் இன்று (நவம்பர் 29) கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு

  • திட்வா புயல் எச்சரிக்கை காரணமாக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
  • திருச்சியில் இன்று (நவ.29 சனிக்கிழமை) காலையும், மாலையும் நடக்க இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் தெரிவித்துள்ளார்.
  • புதுவை மத்திய பல்கலைக் கழகத்திற்கும் இன்று (நவ.29 சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை பல்கலை கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் விமான சேவை ரத்து

திட்வா புயல் காரணமாக கனமழை பெய்வதால், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் ரத்து செய்யபட்டுள்ளன.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தினசரி 6 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

சென்னைக்கு 5 விமான சேவைகளும் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு சேவையும் இயக்கப்படுகின்றன.

புயல் காரணமாக ஆறு விமான சேவைகளும் இன்று (29-11-25) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று விமான சேவை இருக்காது.

திட்வா புயல்

புதுச்சேரியில் என்ன நிலை?

திட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு செல்லும் விமான சேவை நாளை இரண்டாவது நாளாக முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலில் பலத்த காற்று வீசி வருவதால், சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என காவல் துறை தெரிவித்துள்ளது. கடற்கரை சாலைக்கு வரும் அனைத்து சாலைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு