சீனாவில் தலைகீழாக மாறிய நிலைமை: குழந்தை பெற்றால் பணம் கொடுப்பதாகக் கூறும் அரசு

சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு அதன் சர்ச்சைக்குரிய 'ஒரு குழந்தை கொள்கையை' ஒழித்த பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • எழுதியவர், ஆஸ்மண்ட் சியா
    • பதவி, வணிக செய்தியாளர், பிபிசி செய்திகள் பிரிவு

சீனாவில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக அரசு அறிவித்த முதல் நாடு தழுவிய மானியத்தின் கீழ், மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான்( 500 டாலர்) பெற்றோருக்கு வழங்கப்படுகிறது.

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு, அதன் சர்ச்சைக்குரிய 'ஒரு குழந்தை கொள்கையை' கைவிட்ட பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த மானியங்கள் சுமார் 20 மில்லியன் குடும்பங்களுக்கு குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளை ஈடுசெய்ய உதவும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீனா, மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொள்கிறது. இதனால், மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க, பல மாகாணங்கள் முன்னோட்டமாக சில மானியங்களை வழங்கி வருகின்றன.

திங்களன்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மொத்தம் 10,800 யுவான் வரை வழங்கும்.

இந்தக் கொள்கை, 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே அமல்படுத்தப்படும் என சீனாவின் அரசு ஊடகமான சிசிடிவி தெரிவித்துள்ளது.

2022 மற்றும் 2024 க்கு இடையில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களும் பகுதி மானியங்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.

சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க உள்ளூர் அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறையும் பிறப்பு விகிதம் - குழந்தை பெற்றால் ஆண்டுக்கு ரூ.43,000 அறிவித்த சீனா

பட மூலாதாரம், Xiqing Wang/BBC

மார்ச் மாதத்தில், சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஹோஹோட் நகரம், குறைந்தது மூன்று குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு ஒரு குழந்தைக்கு 100,000 யுவான் வரை வழங்கத் தொடங்கியது.

பெய்ஜிங்கின் வடகிழக்கில் உள்ள ஷென்யாங் நகரம், மூன்று வயதுக்குட்பட்ட மூன்றாவது குழந்தையைக் கொண்ட உள்ளூர் குடும்பங்களுக்கு மாதத்திற்கு 500 யுவான் வழங்குகிறது.

கடந்த வாரம், உள்ளூர் அரசாங்கங்களை இலவச மழலையர் கல்வி திட்டங்களை உருவாக்குமாறு சீனா வலியுறுத்தியது.

சீனாவைத் தளமாகக் கொண்ட யுவா மக்கள்தொகை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவாகும் நாடுகளில் சீனாவும் ஒன்று.

சீனாவில், ஒரு குழந்தையை 17 வயது வரை வளர்ப்பதற்கு சராசரியாக 75,700 டாலர் வரை செலவாகும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், சீனாவின் மக்கள்தொகை மூன்றாவது ஆண்டாக தொடர்ச்சியாக குறைந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தேசிய புள்ளிவிவர பணியகத்தின் தகவல்படி, 2024 ஆம் ஆண்டில் சீனாவில் 9.54 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

இது முந்தைய ஆண்டை விட சற்று அதிகம்தான், ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகை தொடர்ந்து சுருங்கிக்கொண்டே வருகிறது.

அதேபோல், சீனாவின் 140 கோடி மக்கள் தொகையும் வேகமாக முதுமை அடைந்து வருகிறது. இது அந்நாட்டின் மக்கள்தொகை குறித்த கவலைகளை மேலும் அதிகரிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு