பாலத்தீனத்தை தனி நாடாக 140 நாடுகள் அங்கீகரித்த போதிலும் சில நாடுகள் மறுப்பது ஏன்?
பிரான்ஸ் பாலத்தீனத்தை ஒரு நாடாக அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் மாதத்தில் அங்கீகரிக்கும் என அந்நாட்டு அதிபர் மக்ரோங் அறிவித்துள்ளார். பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் முதல் ஜி7 நாடாக பிரான்ஸ் இருக்கும்.
நியுயார்க்கில் நடைபெறும் ஐநா பொது சபை கூட்டத்தில் அதிகாரப்பூர்வ பிரகடனம் செய்யப்படும் என மக்ரோங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
"காஸாவில் போர் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் மீட்கப்படவேண்டும் என்பதுதான் இன்று இருக்கும் அவசரத் தேவை. அமைதி சாத்தியம்தான். உடனடி போர்நிறுத்தம், அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிப்பு, காஸா மக்களுக்கு அதிக அளவு மனிதாபிமான உதவி ஆகியவை நமக்கு தேவை," என அவர் எழுதியுள்ளார்.
மக்ரோங்கின் முடிவை பாலத்தீன அதிகாரிகள் வரவேற்றிருக்கும் நிலையில், 2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகான இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு பரிசளிப்பதைப் போன்று இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை "விளைவுகளை பற்று கவலைப்படாத ஒன்று" என்று விவரித்துள்ள அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மக்ரோங்கின் அறிவிப்பை அமெரிக்கா' வலுவாக நிராகரிப்பதாக தெரிவித்தார்.
ஜி7 என்பது அதிக தொழில்வளர்ச்சி அடைந்த முக்கிய நாடுகளின் கூட்டமைப்பாகும். இதில் பிரான்ஸுடன் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
இஸ்ரேல் பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. மேற்கு கரை மற்றும் காஸாவில் பாலத்தீன நாடு உருவாவதை தற்போதைய இஸ்ரேல் அரசு எதிர்க்கிறது. அப்படி ஒரு நாடு உருவானால் அது இஸ்ரேலின் இருப்புக்கு அபாயமாக இருக்கும் என அது வாதிடுகிறது.
"இந்த சூழ்நிலையில் பாலத்தீன நாடு (உருவாவது) இஸ்ரேலை அழிப்பதற்கு ஒரு தொடக்கமாக இருக்கும், அதனுடன் அமைதியாக வசிப்பதற்கு அல்ல. நாம் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கவேண்டும் : பாலத்தீனர்கள் இஸ்ரேலுடன் ஒரு நாட்டை கேட்கவில்லை, இஸ்ரேலுக்கு பதிலாக ஒரு நாட்டை அவர்கள் கேட்கிறார்கள்," என பிரதமர் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது யார்?

பட மூலாதாரம், Reuters
தற்போது, ஐநாவின் மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளன. இவற்றில் ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கும் அரபு குழுவான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அணி சேர நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அடங்கும் .
2024 மே மாதத்தில் பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், ஐயர்லாந்து மற்றும் நார்வெ உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் அவற்றில் இருக்கின்றன. அதற்கு முன்பு வெகு சில ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இதைச் செய்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சோவியத் ரஷ்யாவில் ஒரு அங்கமாக இருந்தபோது 1988ஆம் ஆண்டில் இதை செய்திருந்தன.
ஆனால், இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரான அமெரிக்க மற்றும் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அதன் கூட்டாளி நாடுகள் பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. இஸ்ரேலுடன் "இரு நாடுகள் உருவாக்கம் என்ற தீர்வை நோக்க உந்துதலை தீவிரப்படுத்த," பாலத்தீனத்தை அங்கீகரிக்கக்கூடும் என ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters
சில நாடுகள் பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்காதது ஏன்?
பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்காத நாடுகள் பொதுவாக இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வு எட்டப்படாமல் இருப்பதால் அவ்வாறு அங்கீகரிக்காமல் இருக்கின்றன.
"பாலத்தீன நாட்டை நிறுவ வேண்டிய தேவைக்கு வாய்மொழியாக ஆதரவு தெரிவித்தாலும், அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் இடையே நேரடி பேச்சுவார்த்தைகளை வலியுறுத்துகிறது, இது உண்மையில் பாலத்தீன மக்களின் சுயநிர்ணய ஆசைகள் மீது இஸ்ரேலுக்கு வீட்டோ அதிகாரத்தை வழங்குவதாகும்," என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சர்வதேச உறவுகள் மற்றும் மத்திய கிழக்கு அரசியல் பேராசிரியரான ஃபவாஸ் கெர்ஜஸ்.
அமைதி பேச்சுவார்த்தைகள் 1990-களில் தொடங்கப்பட்டன, பின்னர் இஸ்ரேலியர்களும், பாலத்தீனர்களும் தனித்தனி நாடுகளில் அருகருகே வசிக்கும்வகையில் இரண்டு நாடுகள் தீர்வு என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த அமைதிக்கான நடவடிக்கை 2014ஆம் ஆண்டு வாஷிங்டனில் இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைவதற்கு முன்பே 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலேயே மெதுவாக சரியத் தொடங்கியது.
ஒப்பந்தம் ஏற்படுவதும் முள் போல் மிகவும் சிக்கலான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன, இதில் எதிர்கால பாலத்தீன நாட்டின் எல்லைகள் மற்றும் தன்மை, ஜெருசலேமின் நிலை, மற்றும் 1948-49 போரின்போது இஸ்ரேல் உருவாக்கப்பட்டதை அடுத்து புலம்பெயர்ந்த பாலத்தீன அகதிகளின் எதிர்காலம் ஆகியவை அடங்கும்.
பாலத்தீனத்திற்கு ஐநா உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இஸ்ரேலின் ஐநா தூதர் கிலாட் எர்டான், இந்த விவாதம் நடைபெறுவதே " இனப்படுகொலை பயங்கரவாதத்திற்கு ஒரு வெற்றி" எனவும் இந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால் அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு ஒரு வெகுமதியாக அமைந்திருக்கும் என்றும் கூறியதாக 2024ஆம் ஆண்டில் ஏஎஃப்பி தெரிவித்தது.
இஸ்ரேலுடன் நட்புறவை பராமரிக்க விரும்பும் நாடுகள், பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது அவர்களின் நட்பு நாட்டை கோபப்படுத்தும் என்பதை உணர்ந்திருப்பார்கள்.
1933 மான்டிவீடியோ மாநாட்டில் வரையறுக்கப்பட்ட நாட்டுக்கான முக்கிய அளவுகோல்களான நிரந்தர மக்கள் தொகை, வரையறுக்கப்பட்ட பிரதேசம், அரசு, மற்றும் பிற நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்தும் திறன் ஆகியவற்றை பாலத்தீனர்கள் பூர்த்தி செய்யவில்லை என்று இஸ்ரேலை ஆதரிப்பவர்கள் உட்பட சிலர் வாதிடுகின்றனர்.
ஆனால் மற்றவர்கள், பிற நாடுகளால் அங்கீகரிக்கப்படுவதற்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கும் மிகவும் தளர்வான ஒரு வரையறையை ஏற்றுக்கொள்கின்றனர்.
பாலத்தீன பகுதிகளுக்கு ஐநாவில் இருக்கும் அந்தஸ்து என்ன?

பட மூலாதாரம், SHAHZAIB AKBER/EPA-EFE/REX/Shutterstock
ஹோலி சீ (வத்திக்கான்) போலவே, பாலத்தீனர்கள் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்.
2011ஆம் ஆண்டு, பாலத்தீனம் ஐநா முழு உறுப்பினர் நாடாக மாறுவதற்கு விண்ணப்பித்தது, ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போதுமான ஆதரவு இல்லாததால் அந்த முயற்சி தோல்வியடைந்து, வாக்கெடுப்புக்கே வரவில்லை.
எனினும், 2012இல், ஐநா பொதுச்சபை, பாலத்தீனர்களின் அந்தஸ்தை "உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடு" என்று உயர்த்துவதற்கு ஆதரவாக வாக்களித்தது, இது அவர்களை பொதுச்சபை விவாதங்களில் பங்கேற்க அனுமதிக்கிறது, இருப்பினும் அவர்கள் தீர்மானங்கள் மீது வாக்களிக்க முடியாது.
2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியில் வரவேற்கப்பட்டாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் விமர்சிக்கப்பட்டது. இது பாலத்தீனர்களை ஐநாவின் உயர் நீதிமன்றமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட பிற சர்வதேச அமைப்புகளில் இணைய அனுமதித்தது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்கள் 2015இல் இணைந்தனர்.
2024 மே மாதத்தில், காரசாரமான விவாதங்களுக்கு பிறகு பாலத்தீனத்தின் உரிமைகளை மேம்படுத்திய ஐநா பொதுச்சபை அதை உறுப்பு நாடாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்தத் தீர்மானம் பாலத்தீனத்தை விவாதங்களில் முழுமையாகப் பங்கேற்க, நிகழ்ச்சி நிரல் விவாதப் பொருட்களை முன்மொழிய, மற்றும் அதன் பிரதிநிதிகள் குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட அனுமதித்தது, ஆனால் வாக்குரிமை வழங்கவில்லை.
உறுப்பினர் அந்தஸ்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் மட்டுமே வழங்கப்பட முடியும்.

அந்த ஆண்டு ஏப்ரலில், பாலத்தீனத்தை தனிநாடாக அனுமதிக்கக் கோரி பரவலான ஆதரவுடன் அல்ஜீரியா கொண்டு வந்த தீர்மானத்தை ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றான அமெரிக்கா "முதிரா நிலையில் கொண்டுவரப்பட்டது" என்று கூறி வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தது.
பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை, ஆனால் பொதுச்சபை தீர்மானங்கள் அவ்வாறு இல்லை.
"ஐநாவின் முழு உறுப்பினராக மாறுவது பாலத்தீனர்களுக்கு தீர்மானங்களை நேரடியாக முன்மொழியும் திறன், பொதுச்சபையில் வாக்குரிமை (தற்போது 'உறுப்பினர் அல்லாத' நாடாக அவர்களுக்கு இல்லாதது), மற்றும் இறுதியாக பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு இருக்கை/வாக்கு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளிட்டவை அடங்கிய அதிக ராஜதந்திர செல்வாக்கை தரும்," என்கிறார் வாஷிங்டனில் உள்ள மத்திய கிழக்கு நிறுவன ஆய்வகத்தின் பாலத்தீனம் மற்றும் பாலத்தீன-இஸ்ரேல் விவகாரங்கள் திட்டத்தின் இயக்குநர் காலித் எல்கிண்டி.
"ஆனால் இவை எதுவும் இரு-நாட்டு தீர்வை கொண்டு வராது – இது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் மட்டுமே நிகழ முடியும்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
எனினும், லண்டனில் உள்ள ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் நிறுவனத்தின் வளர்ச்சி ஆய்வுகள் மற்றும் சர்வதேச உறவுகள் பேராசிரியரான கில்பர்ட் அச்கர், "பாலத்தீன ஆணையம் முழு ஐநா உறுப்பினர் அந்தஸ்து பெற்றாலும் அதிகம் சாதிக்காது" என்று நம்புகிறார்.
"இது பெரும்பாலும் ஒரு குறியீட்டு வெற்றியாகவே இருக்கும்: 1967 ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் ஒரு சிறிய இடத்தில் இஸ்ரேலை முழுமையாக சார்ந்திருக்கும், அதிகாரமற்ற 'பாலத்தீன ஆணையம்' என்ற நிதர்சனத்திற்கு எதிராக ஒரு கற்பனையான 'பாலத்தீன நாட்டின்' அங்கீகாரம்," என்று அவர் கூறுகிறார், மேலும் "இது 'சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட பாலத்தீன நாட்டிலிருந்து' ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது" என்று கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு









