பூமியின் துருவங்களை ஒரு மீட்டர் நகர்த்திய பிரமாண்ட அணைகள் - எப்படி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், செய்திக்குழு
- பதவி, பிபிசி முண்டோ
1835 மற்றும் 2011ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 7,000 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டவை என்றால், மற்றவை மின்சார உற்பத்தி அல்லது இயற்கை பேரழிவுகளைத் தடுக்கும் விதமாக கட்டப்பட்டன.
ஆனால் கட்டப்பட்ட அணைகள் அனைத்துமே நீர் சேமிப்பு என்ற பொதுவான கொள்கை ஒன்றின் அடிப்படையில் கட்டப்பட்டன, இது பூமியின் சில பகுதிகளில் எடையை அதிகரித்தது.
ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழு மேற்கொண்ட ஓர் ஆய்வு தொடர்பான கட்டுரை ஒன்று, இந்த மாதம் (2025, ஜூலை) அமெரிக்க புவி இயற்பியல் சங்கத்தின் (American Geophysical Society (AGU)) சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.
அந்த ஆய்வு, இருபதாம் நூற்றாண்டில் உச்சத்தை எட்டிய அணை நீர் சேமிப்பானது, நமது பூமி சுழலும் அச்சில் இருந்து துருவங்களை கிட்டத்தட்ட ஒரு மீட்டர் அளவுக்கு நகர்த்தியுள்ளது என்று கூறுகிறது.
இந்த நிகழ்வு 'உண்மை துருவ அலைவு' என்று அழைக்கப்படுகிறது.
இதைத்தவிர, அணைகளின் கட்டுமானம் புவி இயற்பியல் விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஒப்பீட்டளவில் இந்த விளைவுகள் மிகக் குறைவாக இருந்தாலும், உலகம் முழுவதும் அணைகள் பெருமளவில் கட்டப்படுவது கடல்நீர் மட்டங்களிலும் பரவலான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
"இந்த ஆராய்ச்சி இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. முதலாவதாக மனித செயல்பாடுகள், நாம் வாழும் பூமியை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணர்த்துகிறது. இரண்டாவதாக, காலநிலை மாற்றத்தில் மனிதர்களின் செயல்கள் ஏற்படுத்தும் விளைவுகள், அதிலும் குறிப்பாக கடல் மட்டங்களில் ஏற்படுவது" என்று ஆராய்ச்சித் தலைவர் நடாஷா வலென்சிக் AGU அறிவியல் போர்ட்டலில் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
அணைகள் கட்டத் தொடங்கி குறைந்தது 3,000 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இந்த ஆய்வு கடந்த 180 ஆண்டுகளில் கட்டப்பட்ட நவீன அணைகளை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
உலகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள அணைகளில், 6,862 பெரிய அணைகள் மற்றும் அவற்றின் நீர் சேமிப்பு முறைகள் இந்த ஆராய்ச்சியில் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
"துருவங்கள் ஒரு மீட்டர் நகர்வதால் புதிய பனி யுகம் ஏற்படப் போவதில்லை என்பது தெளிவாகிறது" என்று வலென்சிக் விளக்கினார்.
"கிரகத்தின் சில பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் கூடுதல் எடை, பூமியின் சுழற்சியில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை புரிந்து கொள்ள விரும்பினோம்," என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது?
உலகெங்கிலும் உள்ள அணைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்திய இந்த ஆய்வு, துருவப் பெயர்ச்சி அல்லது துருவ நகர்வை எவ்வளவு பாதித்தன மற்றும் அணைகள் கடல் மட்டங்களை எவ்வாறு பாதித்தன ஆகிய இரு கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றது.
ஆராய்ச்சிக் குழுவின் கூற்றுப்படி, டஜன்கணக்கான பிற தரவுகளுடன், சேமிக்கப்பட்ட நீரின் அளவு மற்றும் அணைகளின் இருப்பிடத்தை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
பூமியின் வெளிப்புற அடுக்கில் கூடுதல் எடையை சுமத்தும் போது, அது பூமியின் காந்தப்புலம் அமைந்துள்ள உள் அடுக்கை விட வித்தியாசமாக சுழலும் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இங்குதான் துருவங்களுக்கும் பூமியின் சுழற்சி அச்சுக்கும் இடையிலான வேறுபாடு ஏற்படுகிறது.
ஆனால் அந்த மாற்றம் தொடர்ச்சியாக ஏற்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
"ஆராய்ச்சிக் காலத்தின் முதல் பாதியில், 1835 முதல் 1954 வரையில் பெரும்பாலான அணைகள் வடக்கு அரைக்கோளத்தில் கட்டப்பட்டன என்பது நாங்கள் அடைந்த முதல் முடிவு" என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
இது வட துருவத்தின் விலகலை சுமார் 20.5 சென்டிமீட்டர் என்ற அளவில் மாற்றியது.
"1954 முதல் இப்போது வரை கட்டப்பட்ட அணைகள் பூமியின் பிற இடங்களில் பரவலாக கட்டப்பட்டுள்ளன என்பதுடன், அந்த கூடுதல் எடை ஓரளவு மறுபகிர்வு செய்யப்படுகிறது," என்று அறிக்கை கூறுகிறது.
அத்துடன் முன்னர் கவனிக்கப்பட்டவற்றிலிருந்து மாறுபட்டு, துருவங்களின் விலகல் 57 சென்டிமீட்டர் என்ற அளவில் இருந்ததாக அவதானிக்கப்பட்டது.
1835 முதல் 2011 வரையிலான கட்டப்பட்ட அணைகளால் மொத்தம் 113 சென்டிமீட்டர்கள் அளவு துருவங்கள் நகர்ந்திருப்பதாக ஆய்வு முடிவு செய்துள்ளது.

பெருங்கடல்களில் ஏற்படும் தாக்கம்
அணைகள் கடல் மட்டங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
"கடல்நீர் மட்ட உயர்வைக் கணக்கிடும் போது, நீர்த்தேக்கங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன" என்று வலென்சிக் கூறினார்.
இருபதாம் நூற்றாண்டில் கடல் மட்டங்கள் சராசரியாக 12 முதல் 17 செ.மீ வரை உயர்ந்தன, ஆனால் அணைகள் அந்த அளவில் கால் பங்கைத் தடுத்து நிறுத்தின என்றும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது.
"உலகம் முழுவதும் கடல்நீர் மட்ட உயர்வு ஒன்றுபோல் சீராக நிகழவில்லை என்பதைக் கருத்தில் கொண்டால், இது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும்" என்று விஞ்ஞானி மேலும் கூறினார்.
"அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து, கடல் மட்ட உயர்வின் வடிவியல் மாறும். இது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சமாகும், ஏனெனில் இந்த மாற்றங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












