அமெரிக்கா தரும் நெருக்கடிக்கு நடுவே, நெருங்கி வரும் சீனாவை இந்தியா நம்பலாமா?

பட மூலாதாரம், Getty Images
உலகின் ஐந்து பெரிய பொருளாதாரங்களில் இடம்பெறும் இந்தியாவும் சீனாவும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாகவும் உள்ளன.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளின் உயர்மட்டத் தலைமைகளும் மிகப்பெரிய மேடையில் சந்திப்பது சர்வதேச அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஆகஸ்ட் 31-ஆம் தேதி சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கலந்து கொள்கிறார்கள்.
கடந்த 2020ஆம் ஆண்டு கால்வான் மோதலுக்குப் பிறகு, இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. இதற்கு முன்னர், 2018ஆம் ஆண்டு மோதி சீனாவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கஸான் நகரில் மோதி, ஜின்பிங்கை சந்தித்து இருந்தாலும், அன்றிருந்த சூழலுக்கும், இன்றைய சூழ்நிலைக்கும் இடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.
அமெரிக்காவின் 50 சதவிகித வரிவிதிப்பை இந்தியா எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழலில் நடைபெறும் ஜின்பிங் - மோதி சந்திப்பு அதிமுக்கியத்துவம் பெறுகிறது.

பட மூலாதாரம், Reuters
மே மாதத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா இருந்தது என்ற பின்னணியில், இந்தியா மற்றும் சீனாவின் உயர்மட்டத் தலைவர்களின் தற்போதைய சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
இந்தியா - சீனா இடையே உண்மையிலேயே நெருங்கி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? சீனாவை இந்தியா நம்ப முடியுமா? நரேந்திர மோதியின் பயணம் சீனாவில் எவ்வாறு பார்க்கப்படுகிறது? தற்போதைய சூழ்நிலையை சீனா எந்த விதத்தில் பயன்படுத்திக் கொள்ளும்?
இதுபோன்ற பல கேள்விகள், பிபிசி ஹிந்தியின் வாராந்திர நிகழ்ச்சியான 'தி லென்ஸ்' நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதத்தில், ஓபி ஜிண்டால் பல்கலைக்கழகத்தின் சீன ஆய்வுகள் பேராசிரியர் ஸ்ரீபர்ணா பாடக், சீனாவில் வசித்து அங்குள்ள பிரச்னைகளைப் புரிந்து கொண்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர் சைபல் தாஸ்குப்தா மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணரான கர்னல் (ஓய்வு) அஜய் சுக்லா பங்கேற்றனர்.
இந்தியாவும் சீனாவும் நெருங்குவதற்கான சாத்தியக்கூறுகள்
லடாக்கில் 2020 ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலை இன்னும் மீட்டெடுக்கப்படாத நிலையில் பிரதமர் மோதி சீனா சென்றிருக்கிறார். சீனா, இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளி. கடந்த ஆண்டு, சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் சுமார் 127.7 பில்லியன் டாலராக இருந்தது.
இந்திய தொழில்துறை சீனாவை சார்ந்திருக்கும் நிலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024ஆம் ஆண்டில் சீனாவில் இருந்து 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணுவியல் மற்றும் மின் சாதனங்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தியாவும் சீனாவும் நெருங்கி வருவதற்கு அமெரிக்கா மட்டுமே காரணமாக இருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
இதுகுறித்துப் பேசும் ஸ்ரீபர்ணா பாடக், "இந்தியாவும் சீனாவும் நெருங்கி வர முடியாது. ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்று ஒரு பழமொழி உண்டு."
"பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, சீனா மிகவும் திறமையானது. தனது பிராந்தியத்தில் மற்றொரு சிங்கம் (இந்தியா) உருவாவதை அது ஒருபோதும் விரும்பாது. இந்தியாவை தெற்காசியாவிலேயே மட்டுப்படுத்தி வைத்திருப்பதே சீனாவின் கண்ணோட்டத்தில் சிறந்த வழியாக இருக்கும். அதனால்தான், பாகிஸ்தானை சீனா ஆதரிக்கிறது. இருப்பினும், இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்று என்பதுடன், இந்திய சந்தையும் பிரம்மாண்டமானது. இந்தியாவின் மாபெரும் சந்தையை சீனா ஒருபோதும் விட்டுவிடாது."

பட மூலாதாரம், Getty Images
இந்தியா சுதந்திரம் (1947) பெற்ற பிறகு, இந்தியா-சீனா உறவுகள் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுள்ளன. சீனாவின் கம்யூனிச அரசை முதலில் அங்கீகரித்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவும் அமைதியான இணக்கமான உறவும் இருந்தன.
கடந்த 1950ஆம் ஆண்டில், திபெத்தை தனது கட்டுப்பாட்டில் சீனா எடுத்துக் கொண்டபோது, இந்தியாவின் கவலைகள் அதிகரித்தன. 1950களில், இந்தியாவும் சீனாவும் பஞ்சசீல கொள்கைகளின் அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டன. "இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள்" என்ற முழக்கம் உருவாக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பதற்றத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்ற 1962ஆம் ஆண்டு போருக்குப் பிறகு, 1988ஆம் ஆண்டு அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் சீனப் பயணம் இருதரப்பு உறவுகளை மீண்டும் இணக்கமான பாதைக்குத் திருப்பியது. இருப்பினும், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லை மோதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே கசப்புணர்வு தோன்றியது.
உலகில் எந்தவொரு நாடும், வேறு எந்த நாட்டையும் நம்ப முடியாது என்று பாதுகாப்பு நிபுணரான ஓய்வுபெற்ற கர்னல் அஜய் சுக்லா கூறுகிறார்.
"இந்தியாவின் நலனுக்காகச் சீனா செயல்படும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது. இந்தியா தனது முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளைத் தானே எடுக்க வேண்டும். அதேபோல, சீனா தனது முன்னேற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கிறது என்றே நினைக்க வேண்டும். சீனா, இந்தியாவுக்கு நெருக்கமான நாடாக மாறி, தனது நலனுக்காகச் செயல்படும் என்று இந்தியா எதிர்பார்த்தால், அது மாபெரும் தவறாக இருக்கும்" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மோதி பயணத்தை சீனா எவ்வாறு பார்க்கிறது?
இந்திய பிரதமர் மோதியின் பயணத்திற்கு முன்னதாக, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியா வந்திருந்தார். அவரது வருகை, இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
உலகின் தற்போதைய நிலைமையைச் சமாளிக்க சீனா, இந்தியா இடையிலான ஒத்துழைப்பு முக்கியம் என சீன ஊடகங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் அங்கு நிலவும் உண்மையான சூழல் என்ன?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் மூத்த பத்திரிகையாளர் சைபல் தாஸ்குப்தா, "சீனாவில், இந்திய பிரதமரின் வருகையானது, டொனால்ட் டிரம்ப் மற்றும் புதினின் சூழலில் பார்க்கப்படுகிறது. சீனாவின் பார்வையில், இரண்டு காரணிகள் முக்கியமானவை. முதலாவதாக, சீனாவின் பலவீனமான பொருளாதார நிலை; இரண்டாவதாக சீனாவுக்குள் ஷி ஜின்பிங்கின் பிம்பம்.
டொனால்ட் டிரம்ப், ஷி ஜின்பிங்கை பலவீனப்படுத்தியுள்ளார் என்று மக்கள் புரிந்துகொண்டால், அது சீனாவில் ஏற்றுக்கொள்ளப்படாது. டிரம்பின் வரிவிதிப்பை இரு நாடுகளும் எதிர்கொள்வதால், ஷி ஜின்பிங்கின் பிம்பத்தை கட்டிக் காக்க சீனாவுக்கு இந்தியா தேவை."
டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்திற்கு முன்பு, இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவுகள் சுமூகமாக இருந்தன. இணக்கமான இந்திய-அமெரிக்க உறவுகளில் டிரம்ப் வரிவிதிப்பு என்ற சுவரை எழுப்பிவிட்டார்.
அமெரிக்காவின் கொள்கை தோல்வியடைந்துவிட்டதா? அமெரிக்கா இந்தியாவிடம் சாதிக்க விரும்பியது என்ன?
"அமெரிக்கா ஒருபோதும் யாருக்கும் நண்பராக இருந்ததில்லை. இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகளை டிரம்ப் பெற்றுக் கொண்டார். தெற்காசியாவில் தனது பிடியை வலுப்படுத்த இந்தியாவை அமெரிக்கா சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. சீனாவுக்கு சவால் விடுக்கும் நோக்கில் டிரம்ப் வினோதமான முடிவுகளை எடுத்து வருகிறார்" என்று பேராசிரியர் ஸ்ரீபர்ணா பாடக் கூறுகிறார்.
இந்தியா-சீனா சர்ச்சைகளும் சவால்களும்
இந்தியாவும் சீனாவும் 3,000 கி.மீட்டருக்கும் அதிகமான எல்லைக்கோட்டை பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடுகளாக இருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை இன்னும் நீடிக்கிறது. பிரம்மபுத்திரா நதி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே தண்ணீர்த் தகராறு உள்ளது.
பாகிஸ்தான் 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை' ஊக்குவிப்பதாக இந்தியா நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவின் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. அதே நேரத்தில், பாகிஸ்தானுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை சீனா வழங்குகிறது. இது இந்தியாவின் கவலைக்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது.
இந்தச் சூழலில், சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும் (BRI) சர்ச்சைக்குரிய ஒன்றாகவே உள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கலந்து கொள்கிறார். எனவே இந்தப் பிரச்னைகள் இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய சவாலாக இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.
"சமீபத்தில், ஜின்பிங்கிற்கு அளித்த முக்கியத்துவத்தைவிட டிரம்புக்கே பாகிஸ்தான் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. 2013ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் சீனா சுமார் 60 பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்தாலும், அந்நாட்டின் ராணுவ ஜெனரல் முனீர் டிரம்புக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இது சீனாவுக்கு கவலையை ஏற்படுத்தும் விஷயம்," என்று சைபல் தாஸ்குப்தா கூறுகிறார்.
"எனவே, பாகிஸ்தானை எந்த அளவுக்கு நம்பலாம் என்று சீனாவும் சிந்திக்கும். இதுபோன்ற பல சர்ச்சைகளுக்கும் மத்தியில், எங்கு பயனடையலாம், எங்கு இழப்பு ஏற்படும் என இந்தியா பார்க்க வேண்டியது அவசியமாகிறது" என்கிறார் தாஸ்குப்தா.

பட மூலாதாரம், Getty Images
எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா - சீனா என்ன செய்ய வேண்டும்?
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் கர்னல் (ஓய்வு) அஜய் சுக்லா, "எல்லை தொடர்பாக ஏற்கெனவே சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2020 அல்லது 2021இல் இருந்ததைவிட, தற்போது நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளது" என்று கூறுகிறார்.
"அமெரிக்கா இல்லாமல் இந்தியா நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், இந்த நிபந்தனையின் அடிப்படையில் சீனா எல்லையில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதா இல்லையா என்பது குறித்து இந்தியாவுடன் பேசும் என்றும் சீனாவை சேர்ந்த அரசியல் நிபுணர்கள் நம்புகின்றனர். அமெரிக்காவின் அழுத்தத்தில் இந்திய எல்லையில் இருந்து பின்வாங்கினோம் என்ற பிம்பத்தை உருவாக்க சீனா விரும்பாது."
இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கையை நன்கு யோசித்து வகுக்க வேண்டும். ஏனெனில் சீனா தவிர, ரஷ்யாவும் அமெரிக்காவும் அதன் மையத்தில் இருக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற கர்னல் அஜய் சுக்லா கருதுகிறார்.

அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய மூன்றின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
"இங்கே நாம் மூன்று நாடுகளைப் பற்றிச் சிந்திக்காமல், மூன்று தலைவர்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். உதாரணமாக, பிரதமர் மோதி எஸ்சிஓ அமைப்பின் உச்சிமாநாட்டிற்குச் செல்கிறார். அங்கிருந்து அவர் கொண்டு வரக்கூடிய செய்தி இந்தியாவில் முக்கியத்துவம் பெறும். நான் சீனாவில் இருந்தபோது, இந்தியாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய சீன மக்கள் விரும்பினாலும், சீன அரசுடைய பிடிவாதத்தால் அதற்குப் பெரிய அளவில் அனுமதி கிடைக்கவில்லை" என்று சைபல் தாஸ்குப்தா விளக்குகிறார்.
"ஒட்டுமொத்தமாக, சீனா இந்தியாவுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ள விரும்பினால், எல்லைப் பிரச்னையைத் தவிர வேறு சில உறுதிமொழிகளையும் அது வழங்க வேண்டியிருக்கும். மூன்று நாடுகளும் ஒருவருக்கொருவர் எவ்வாறு ஆதரவளிப்பது என்பது குறித்த பொதுவான புரிதலை ஏற்படுத்த வேண்டும். எதுவுமே ஒருதலைப்பட்சமாக இருக்கக்கூடாது. தற்போது இந்தியா, சீனாவையும் அமெரிக்காவையும் முழுமையாகச் சார்ந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் சிறந்த வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவது கடினமானதாகவே இருக்கும்" என்கிறார் அவர்.
இந்தியா, சீனாவில் இருந்து மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்கிறது. இந்திய தொழில்கள் இன்னும் பல துறைகளுக்கான மூலப் பொருட்களுக்காக சீனாவையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அத்துடன், சீனாவில் பொருட்கள் மலிவாகக் கிடைப்பதால், இந்திய சில்லறை சந்தையில் அவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது.
சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா, சீனாவுக்கு மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக இருக்கிறது. ஐடி மற்றும் மருந்துத் துறைகளில் இந்தியா சிறப்பாகச் செயல்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், இன்றைய காலகட்டத்தில் இந்தியா, சீனா இரு நாடுகளில், யாருடைய தேவை யாருக்கு அதிகமாக இருக்கிறது என்ற கேள்வி எழுந்தால், சீனாவுக்கு இந்தியா அதிகம் தேவை என்பதுதான் நிலைமை என்று கூறுகிறார் பேராசிரியர் ஸ்ரீபர்ணா பாடக்.
இதற்கான காரணத்தை விளக்கும் அவர், "சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதி சார்ந்தது. தற்போது சீனாவால் ஐரோப்பா அல்லது அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சிரமம் நிலவுகிறது. எனவே, சீனா உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான சந்தையைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். இந்தச் சூழலில், இந்தியா அதற்குச் சிறந்த தேர்வாக இருக்க முடியும். இந்தியாவின் உள்நாட்டு நுகர்வு நன்றாக உள்ளது. அதே நேரத்தில் சீனாவின் உள்நாட்டு நுகர்வு மிகவும் குறைவாக உள்ளது" என்று கூறுகிறார்.
சர்வதேச உறவுகளில் இதுபோன்ற பதற்றமான சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், ஏதாவது ஒரு புதிய வழி உருவாகும் என்று பேராசிரியர் ஸ்ரீபர்ணா பாடக் நம்புகிறார். ஒருவேளை இது இந்தியாவுக்கும் நல்ல வாய்ப்பாக இருக்கலாம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












