வடுமாங்காய் ஊறுகாய் 'வேதியியலால்' நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி

 அறிவியல், நோபல் பரிசுகள், வேதியல், ஆராய்ச்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஆல்ஃப்ரட் நோபல் நிறுவிய நோபல் பரிசுகள், 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றன.
    • எழுதியவர், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரில், வருடத்தின் சில மாதங்கள் மட்டுமே வெயிலைக் காண முடியும்; மற்ற நேரங்களில் குளிரும் காரிருளும் சூழ்ந்திருக்கும். எனவே, கோடைக்காலத்தை அந்நகர மக்கள் மிக்க எதிர்பார்ப்போடும், மலர்ந்த முகத்தோடும் வரவேற்கிறார்கள். கோடை காலத்தில் நீண்ட நேரம் வெளியில் கழிப்பதில் அவர்கள் முனைப்பாக ஈடுபடுவார்கள்.

கோடை வெப்பமும் அங்கு மிதமானதுதான். பகல் நேர வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸைத் தாண்டாது; இரவு நேரங்களில் 13 டிகிரி வரை குறைந்து குளிர்ச்சியாக இருக்கும். இந்த வேனிற்காலத்தில், எங்கும் பூக்கள் மலர்ந்து நகரம் முழுவதும் ஒரு வண்ண விருந்தாகத் திகழும்.

1885-ஆம் ஆண்டின் அப்படியொரு கோடை நாளில் தான் இந்த தற்செயல் சந்திப்பு நிகழ்ந்தது.

ஏழு வருடங்களுக்கு முன்னர், வெறும் 25 வயது இளைஞனாக இருந்தபோதிலும், அவரது வேதியல் ஆய்வுத் திறமையைக் கணக்கில் கொண்டு, ஜேக்கபஸ் ஹென்ரிகஸ் வான் டி ஹாஃப் (Jacobus Henricus van 't Hoff) எனும் அந்த இளைஞர், ஆம்ஸ்டர்டம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அன்றும், தனது ஆய்வகப் பணிகளை நிறைவு செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பச் சித்தமாக இருந்தார். தனது கைப்பையையும், கைத்தடியையும் எடுத்துக் கொண்டார். தலையில் தொப்பியைச் சரிப்படுத்திக் கொண்டு, கதவருகே தொங்கிய கோட்டையும் கையில் எடுத்தார். வீடு அதிகத் தொலைவில் இல்லை; நடந்தே செல்வது அவரது வழக்கம். சாலையின் ஒரு புறம் அழகான கட்டடங்கள்; மறுபுறம் அமைதியாக ஓடும் நீரோடை. அந்த ஓடையில், சிலர் படகுச் சவாரி செய்து கொண்டிருந்தனர்.

இந்த அழகிய காட்சிகளை ரசித்து நடந்து கொண்டிருந்த வான் டி ஹாஃப், சாலையின் திருப்பத்தில், தனது நண்பர் ஹ்யூகோ டி வ்ரீஸைக் கண்டார். ஹ்யூகோ, ஒரு தாவரவியலாளர்; அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர். ஒரு திறமைசாலி. அவர் தன் மனைவியுடன், ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கியவாறே, மெதுவாக நடந்து கொண்டிருந்தார். இருவரும் அருகருகேவந்தபோது, வான் டி ஹாஃப் முகமன் கூறினார்.

ஆழ்ந்த சிந்தனையில் புற உலகை மறந்து நடந்து கொண்டிருந்த ஹ்யூகோ திடுக்கிட்டு முழித்தார். ஹ்யூகோவின் முகத்தில் தோய்ந்திருந்த ஆழ்ந்த சிந்தனையைப் பார்த்து, "என்ன நண்பரே? ஏதாவது கவலையா?" என்று வான் டி ஹாஃப் கேட்டார்.

"இல்லை, கவலை இல்லை," என்று சொல்லத் தொடங்கினார் ஹ்யூகோ. "இன்று வில்ஹெல்ம் பிஃபெஃபரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவர் கூறியிருக்கும் செய்தி வியக்க வைக்கிறது. ஆனால், அதன் அர்த்தம் எனக்கு ஒன்றும் புரியவில்லை."

யார் அந்த பிஃபெஃபர்?

 அறிவியல், நோபல் பரிசுகள், வேதியல், ஆராய்ச்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வில்ஹெல்ம் பிஃபெஃபர்

வில்ஹெல்ம் பிஃபெஃபர் (Wilhelm Pfeffer) ஒரு ஜெர்மன் தாவரவியலாளர். தொட்டாசிணுங்கி போன்ற தாவரங்களின் உடலியக்கம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தவர். தொட்டாசிணுங்கி தாவரம் போலவே வெளித்தூண்டுதல் ஏற்பட்டால் சென்டோரியா ஜாசியா (Centaurea jacea) என்ற தாவர இனத்தின் மகரந்த இழையும் சுருங்கி விரியும் தன்மை கொண்டது.

சென்டோரியா ஜாசியா மகரந்த இழை சுருங்கி விரியும் இயக்கம், நாம் நமது கையை நீட்டி மடக்கும்போது தசைநார் சுருங்கி விரிவது போன்ற இயக்கமே என பெரும்பாலான தாவரவியலாளர்கள் கருதிவந்தனர். தாவரங்களின் இயக்கங்கள் அடிப்படையில் திசுக்களின் வடிவத்தில் ஏற்படும் மாற்றங்களின் விளைவு, அதாவது ஒரு தசைசுருக்கம் தான், அளவில் ஏற்படும் மாற்றம் அல்ல என்று அவர்கள் கருதினார்கள். இந்த கருதுகோளை சோதனை செய்து பார்க்க விழைந்தார் பிஃபெஃபர்.

இந்த ஆய்வுகளில் சுருங்கி விரியும் போது மகரந்த இழைகளின் நீளம் மற்றும் கன அளவில் ஏற்படும் மாற்றங்களைத் துல்லியமாக அளவிட்டார். இந்த ஆய்வுகளிலிருந்து இது ஒரு கன அளவு மாற்றம் தான் என்பதை அவர் அடையாளம் கண்டார். தாவர திசு சுருக்கம் அல்ல என்று முடிவுக்கு வந்தார்.

பொதுவாக காற்றைக் கொண்டிருக்கும் திசுக்களுக்கிடையேயான இடைவெளிகளில் (intercellular spaces) அவர் நீரை செலுத்தி ஆய்வு செய்தபோது, மகரந்த இழையின் கன அளவில் மாற்றம் ஏற்படுவதைக் கண்டார். கன அளவு குறைவதும், தண்ணீர் வெளியேறுவதும் ஒன்றுக்கொன்று இணைந்து நடந்தன.

'சவ்வூடு பரவல்' (osmosis) விசைகளே மகரந்த இழைகள் சுருங்கி விரிய காரணம் என பிஃபெஃபர் முடிவு செய்தார். தூண்டுதலால் சுருங்கிய செல்கள், மீண்டும் விரிவடைவது, தண்ணீர் செல்களுக்குள் நுழைவதன் (endosmosis) மூலம் ஏற்படும் என்றார். காற்று ஊதப்படும்போது ஒரு பலூன் விரிவடைவது போல, தண்ணீரை உள்ளெடுப்பதன் மூலம் செல்கள் விரிவடைகின்றன. தூண்டல் நீக்கப்பட்டவுடன், அந்தச் செல்கள் தண்ணீரை வெளியேற்றி, அவற்றின் இயல்பு அளவுக்குத் திரும்புகின்றன.

வடுமாங்காய் ஊறுகாயும் சவ்வூடு பரவல் விசையும்

 அறிவியல், நோபல் பரிசுகள், வேதியல், ஆராய்ச்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

தனது ஆய்வை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றார் பிஃபெஃபர். மகரந்த இழைகள் விரிய எத்தனை சவ்வூடு பரவல் விசை தேவை எனக் கண்டறிய, சுருங்கி விரியும் மகரந்த இழைகளில் பளுவைத் தொங்கவிட்டு பரிசோதனைகளை மேற்கொண்டார். அப்போது கிடைத்த மதிப்புகள், சவ்வூடு பரவல் பற்றிய அக்கால அறிவின் அடிப்படையில் சாத்தியமில்லாத அளவுக்கு அதிகமாக இருந்தன.

உப்பு காரம் சேர்த்த நீரில் ஊறி வடுமாங்காய் ஊறுகாயாகும் பின்னணியில் இருக்கும் இயற்கை நிகழ்வுக்கு பின்புலம் சவ்வூடு பரவல் வினைதான். உப்பு காரம் கலந்த கரைசலில் வடுமாங்காயை ஊற வைக்கும்போது, குறைந்த உப்பு சதவீதம் கொண்ட மாங்காயின் உள்ளிருந்து நீர், கூடுதல் உப்பு சதவீதம் கொண்ட சுற்றியுள்ள உப்பு-கார கரைசலுக்கு நகரும். இதன் விளைவாக வடுமாங்காயில் நீரிழப்பு ஏற்படும். நீரை இழக்கும் வடுமாங்காய் சுருங்கி மென்மையாகும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் அழுகிவிடுவதற்கு காரணம் அவற்றில் உள்ள செறிவான நீர் தான். ஊறுகாயைப் பதனம் செய்யும்போது சவ்வூடு பரவல் வழியே நீர் வெளியேறும். இந்த 'சவ்வூடு பரவல் நீர்நீக்கம்' (osmotic dehydration) மூலம் பதனம் செய்யும்போது வைட்டமின்கள், தாதுக்கள், நிறம், மணம் மற்றும் சுவை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவது இல்லை. ஆனால், அவற்றை கூடுதல் நாள் பயன்படுத்த முடிகிறது.

மனித குல வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளாக ஊறுகாய் பதன முறை இருந்து வருகிறது என்றாலும் 1748-ஆம் ஆண்டு தான் அப்பே ஜீன் அன்டோன் நோலெ (Abbe Jean Antoine Nollet) என்பவர் சவ்வூடு பரவல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். ஒரு பன்றியின் சிறுநீர்ப்பை (bladder) கொண்டு வைன் 'மது' நிறைந்த பாத்திரத்தின் வாயையும் மூடி, அதைத் தண்ணீரில் மூழ்க வைத்தார். மதுவை விடத் தண்ணீர் வேகமாகப் பையின் வழியே செல்வதைக் கண்டார். நீரேற்றம் ஏற்பட்ட அந்தப் பை வீங்கியது; சில சமயம் பெரிதாக ஊதிய பலூன் போல வெடித்து சிதறியது.

அதற்கடுத்த 80 ஆண்டுகளுக்கு சவ்வூடு பரவல் பற்றி குறிப்பிடத்தக்க எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால், பிரெஞ்சு ஆய்வாளர் ஹென்றி டியூட்ரோச்சே (Henri Dutrochet) தற்செயலாக இந்த நிகழ்வைப் பற்றி அறிந்து, அடுத்த பத்து ஆண்டுகளில் பல்வேறு கரைசல்கள் மற்றும் சவ்வுகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டார். எந்தவொரு அறிவியல் ஆய்விற்கும் அளவீடு தேவை; எனவே 'சவ்வூடு பரவல் அழுத்தத்தை' (osmotic pressure) அளவிடும் 'ஆஸ்மோமீட்டர்' (osmometer) என்ற எளிய கருவியை அவர் உருவாக்கினார்.

சவ்வூடு பரவல் அழுத்தம் என்றால் என்ன?

 அறிவியல், நோபல் பரிசுகள், வேதியல், ஆராய்ச்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1901 இல் வான் டி ஹாஃப்க்கு வேதியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

ஒரு கரைசல், உதாரணமாக 'அரை-ஊடுருவு சவ்வினால்' (semipermeable membrane) இரு பகுதியாக பிரிக்கப்பட்ட தொட்டியில் ஒரு பக்கத்தில் சர்க்கரை நீர்க் கரைசலையும் மறுபுறத்தில் தூய கரைப்பானான நீரையும் சம அளவு இட்டால், சவ்வின் வழியே நீர் கசிந்து சர்க்கரை கரைசல் நோக்கி செல்லும்; ஆனால் இந்த சவ்வு சர்க்கரைப் பொருளை கடத்தாது. எனவே தூய நீர் இட்ட பகுதியில் நீரின் அளவு குறையும், மறுபுறத்தில் திரவத்தின் அளவு கூடும். இந்த அழுத்த வேறுபாடு தான் 'சவ்வூடு பரவல் அழுத்தம்'.

ஆய்வுக்கூடங்களில் சவ்வூடு பரவல் அழுத்த விசையை செய்துகாட்ட பொதுவாக 'U' வடிவ குழாய் கருவி பயன்படுத்தப்படும். 'U' வடிவ குழாயின் நடுவே 'அரை-ஊடுருவு சவ்வு' கொண்டு இரண்டாகப் பகுத்து விடுவார்கள். இடதுபுறம் தூய நீரையும் (கரைப்பானையும்), அதே அளவுக்கு வலதுபுறம் செறிவு கொண்ட கரைசலையும் இடுவார்கள். காலப்போக்கில், இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு நீர் நகரும். இதனால் வலது பக்க கரைசல் நிரல் உயரும்; புவியீர்ப்பு விசை நீர் ஓட்டத்தை நிறுத்தும் வரை இது தொடரும். புவியீர்ப்பை சமன் செய்யும் இந்தக் கரைசல் நிரலின் அதிகரித்த உயரத்தை 'நிரல் உயரம்' (column height) என்று அளவிடலாம். ஆச்சரியமாக, வெறும் 1% சர்க்கரை கரைசல் கூட, சுமார் 2/3 'வளிமண்டல அழுத்தத்தை' ஏற்படுத்தும்.

கரைசல்களின் செறிவு கூடி குறையும்போது சவ்வூடு பரவல் அழுத்தமும் வேறுபடும். இந்த மாற்றம் குறித்து ஆய்வு செய்ய தனது சோதனை அமைப்பைக் கொண்டு பிஃபெஃபர், வெவ்வேறு செறிவுகள் கொண்ட கரைசல்களின் சவ்வூடு பரவல் அழுத்தத்தை அளந்தார். கரைப்பான் துகள்களின் செறிவு அதிகரிக்கும் போது, சவ்வூடு பரவல் அழுத்தமும் நேர் விகிதத்தில் அதிகரிக்கிறது எனக் கண்டார்; இதில் எந்த வியப்பும் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தாவரவியல் பரிசோதனைகளை 'வெப்பநிலை கட்டுப்பாடு' உள்ள அறையில் தான் நடத்துவார்கள்.

பிஃபெஃபர், தனது பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த வெப்பநிலை கட்டுப்பாடு அறையில் தான் தனது ஆய்வுகளை மேற்கொண்டுவந்தார். அதாவது, தனது ஆய்வுகளின் போது அறையின் வெப்பநிலையை ஒரு நிலையான அளவில் வைத்திருக்க முடிந்தது. வியப்பாகத் தனது ஆய்வுகளின் போது கரைசல் செறிவை அப்படியே வைத்து, வெப்பநிலையை மட்டும் மாற்றியபோது, அழுத்தம் அதிகரிப்பதைக் கண்டார்.

வெப்பநிலையை சார்ந்து நேர்விகிதத்தில் சவ்வூடு பரவல் அழுத்தம் கூடுகிறது - இதுதான், பிஃபெஃபர் டி வ்ரீஸுக்கு அனுப்பிய கடிதத்தின் முக்கிய உள்ளடக்கம்.

 அறிவியல், நோபல் பரிசுகள், வேதியல், ஆராய்ச்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆய்வுக்கூடங்களில் சவ்வூடு பரவல் அழுத்த விசையை செய்துகாட்ட பொதுவாக 'U' வடிவ குழாய் கருவி பயன்படுத்தப்படும்.

வெப்பத்துக்கும் சவ்வூடு பரவல் அழுத்தத்துக்கும் என்ன சம்பந்தம்?

கடிதத்தில் அப்படி என்ன திகைக்கும் செய்தி என்று கேள்வி எழுப்பிய வான் டி ஹாஃப்க்கு சுருக்கமாக பிஃபெஃபர் ஆய்வுகளை விளக்கிக் கூறினார் ஹ்யூகோ.

"ஒவ்வொரு டிகிரி வெப்பநிலை உயர்வுக்கும் சவ்வூடு பரவல் அழுத்தம் சுமார் 1/270 என்ற விகிதத்தில் அதிகரிக்கிறது என பிஃபெஃபர் ஆய்வுகள் கூறுகிறது. வெப்பத்துக்கும் சவ்வூடுபரவல் அழுத்தத்துக்கும் என்ன சம்பந்தம்? அது தான் குழப்பமாக உள்ளது" என்றார் ஹ்யூகோ.

இதைக் கேட்ட மாத்திரத்தில் வான் டி ஹாஃப் மனதில் பொறி தட்டியது; 1/270 என்பது தோராயமாக இருக்கவேண்டும்; மெய்யாக 1/273 என்று தான் இருக்கவேண்டும் என்று மனதில் பட்டது.

அடுத்த சில வாரங்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டார். சவ்வூடு பரவல் குறித்த ஏனைய அறிஞர்கள் ஆய்வுகளை நுட்பமாக வாசித்தார். பிஃபெஃபர் முதலியோரின் ஆய்வில் மூன்று செய்திகள் அவரது கவனத்தை ஈர்த்தன. முதலாவது, மைனஸ் 273 டிகிரி செல்சியஸ்தான் பூஜ்யம் கெல்வின்- அதாவது முழுமையான பூஜ்ய வெப்பநிலை; ஆகக் குறைவாக எட்டப்படக்கூடிய மிகக்குறைந்த வெப்பநிலை. இதற்குக் கீழ் குளிர் நிலையை எட்டவே முடியாது. அதாவது இதுவே வெப்பத்தின் கீழ்வரம்பு. இரண்டாவது, கரைசல் செறிவுக்கு ஏற்ப நேர் விகிதத்தில் சவ்வூடுபரவல் அழுத்தம் அமைகிறது. மூன்றாவது, வெப்ப நிலைக்கு ஏற்ப நேர் விகிதத்தில் சவ்வூடுபரவல் அழுத்தம் அமைகிறது.

பள்ளியில் பாயிலின் விதி (Boyle's law) வெப்பநிலை, அழுத்தம், வாயுவின் கன அளவு மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என நாம் படித்துப் போலவே அவரும் படித்திருந்தார். இவ்விதியின்படி மாறாத வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தமும் அதன் கன அளவும் எதிர் விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன.

பாயிலின் விதி போலவே சவ்வூடுபரவல் அழுத்தம் குறித்த விதியை உருவாக்க முடியும் எனக் கண்டார் வான் டி ஹாஃப். மாறாத வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட செறிவுள்ள கரைசலின் அழுத்தமும் அதன் சவ்வூடுபரவல் அழுத்தமும் நேர் விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளன என்பதே இந்த விதி.

தனது கண்டுபிடிப்பை ஆய்வுக்கட்டுரையாக எழுதி ஸ்வீடன் அறிவியல் அகாடமிக்குச் சமர்பித்தார். அந்த கட்டுரை அக்டோபர் 14, 1885 அன்று வெளியானது; கணித சமன்பாடு கொண்டு தான் நியூட்டன் விதிகளை தெளிவாக விளங்கிக் கொள்கிறோம்; அதுபோல வேதியல் வினைகளின் இயக்கவியல், வெப்பவியல் கணித சமன்பாடுகளைப் புகுத்தி நவீனம் செய்தார் வான் டி ஹாஃப்.

இதன் தொடர்ச்சியாக வேதியல் உலகம் ஆட்டம் கண்டது. வேதியியல் என்பது அதுவரை, 'இந்த வேதிப்பொருளை இதோடு சேர்த்தால் அது உருவாகும்' என்பது போன்ற சோதனை-விளைவுகளைப் பட்டியல் செய்தல் என்பதாகத் தான் இருந்தது. முதன் முறையாக, இயற்பியல் போலவே வேதியலிலும் விதிகளை உருவாக்கி ஆய்வு செய்யமுடியும் என்கிற புதிய பாதையை வான் டி ஹாஃப் உருவாக்கினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதன் தொடர்ச்சியாக இயற்பியல் வேதியியல் (Physical chemistry) எனும் துறை ஏற்பட்டது. பொருள்களின் இயக்கத்தைக் குறித்து எப்படி நியூட்டன் விதிகள் நமக்கு விளக்குகிறதோ, அதே போல வேதி வினைகளின் இயக்கவியல் விதிகளைக் குறித்தும் வான் டி ஹாஃப் அடிப்படை ஆய்வுகளை மேற்கொண்டார். நீரில் உப்பை இடும்போது அது கரைய எவ்வளவு நேரம் பிடிக்கும் - இது வேதிவினை இயக்கம் குறித்த கேள்வி.

ஊறுகாய் மட்டுமல்ல, பச்சைத் தண்டுகளை உடைய கீரை, மூலிகை போன்ற தாவரங்கள் விறைப்பாக நேராக நிற்பதற்கும் சவ்வூடு பரவல் அழுத்தமே (turgor pressure) காரணம் ஆகும். இந்த அழுத்தம் தாவரச் செல்களுக்குள் நீரை நிரப்பி, அவற்றை விறைப்பாக வைத்திருக்கும் ஒரு இயற்கைப் பம்பாகச் செயல்படுகிறது.

நம் உடலில் நீரிழப்பு ஏற்படும் போது, நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து நீர்ச்சத்து தருவதன் பின்னணியிலும் இந்தத் தத்துவமே அமைந்துள்ளது. இது உடலின் செல்கள் நீரைத் திறம்பட உள்வாங்க உதவுகிறது. இதைவிட முக்கியமாக, டயாலிசிஸ் (Dialysis) போன்ற மருத்துவ முறைகள் சவ்வூடுபரவல் தத்துவத்தின் மீதே இயங்குகின்றன; இதன் மூலம் ரத்தத்திலிருந்து கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.

அணு ஆற்றல் தொழில்துறை முதல், கடல்நீரைக் குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம் வரை, பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களின் இதயத்திலும் சவ்வூடுபரவல் என்ற இயற்கை விசை தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

புதுமை நவீன வேதியியலை உருவாக்க வழிசெய்த வான் டி ஹாஃப்க்கு தான் முதன்முதலாக வேதியியல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. "வேதி இயக்கவியல் மற்றும் சவ்வூடு பரவல் அழுத்தத்தின் விதிகளைக் கண்டுபிடித்ததன் மூலம் அவர் ஆற்றிய அசாதாரண சேவைகளை அங்கீகரிக்கும் வகையில்" 1901 இல் அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஆல்ஃப்ரட் நோபல் நிறுவிய நோபல் பரிசுகள், உலக அளவில், அறிவியல், அரசியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகியத் துறைகளில் தலைசிறந்த பங்காற்றியவர்களுக்கு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றன. நவீன உலகின் வரலாற்றில் பல முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகள், பல முக்கிய அமைதி ஒப்பந்தங்கள், தலைசிறந்த இலக்கியப் படைப்புகள் ஆகியவற்றைச் செய்தவர்களுக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.