'டோமஹாக்' ஏவுகணையை கேட்கும் யுக்ரேன்; புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசியது என்ன?

யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்ற்ஜும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜனவரிக்கு பிறகு மூன்றாவது முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார் ஜெலன்ஸ்கி
    • எழுதியவர், ஷான் செட்டன்

ரஷ்யாவின் உள்பகுதிகளை தாக்கும் திறன் கொண்ட டோமஹாக் ஏவுகணைகளை யுக்ரேனுக்கு வழங்கலாமா என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்துக் கொண்டிருக்கும் நிலையில் யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, வெள்ளிக்கிழமை டிரம்பை வாஷிங்டனில் சந்திக்கவுள்ளார்.

புதினுடனான தொலைபேசி அழைப்பில் "சிறந்த முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் ஹங்கேரியில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் கூறிய ஒரு நாள் கழித்து இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.

ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு புதின் உடனான இந்த முதல் உரையாடல், இது "மிகவும் பயனுள்ளதாக" இருந்தது என்றும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் இருந்து வந்த குழுக்கள் அடுத்த வாரம் சந்திப்பார்கள் என்றும் டிரம்ப் கூறினார்.

ஜனவரிக்குப் பிறகு மூன்றாவது முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் ஜெலென்ஸ்கி வாஷிங்டனுக்கு வந்தபோது, ''டோமஹாக் பற்றி எப்போது பேச்சு எழுந்தாலும், ரஷ்யா உடனடியாக உரையாடலைத் தொடங்க அவசரப்படுகிறது" என்று கூறினார்.

2,500 கிமீ (1,500 மைல்கள்) தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்ட மேம்பட்ட ஏவுகணைகளை யுக்ரேனுக்கு வழங்குமாறு ஜெலென்ஸ்கி அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார்.

யுக்ரேனுக்கு டோமஹாக் வழங்குவது குறித்து பரிசீலிக்கிறாரா என்று இந்தக் வாரத்தின் தொடக்கத்தில் டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, அவர், "பார்ப்போம்... நான் கொடுக்கலாம்" என்று கூறினார்.

ரஷ்யாவுக்குள் 2,500 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை டிரம்ப் யுக்ரேனுக்கு வழங்குவாரா?

பட மூலாதாரம், Getty Images

புதின் - டிரம்ப் இருவரும் தொலைபேசியில் பேசியது என்ன?

ஆனால், புதின் உடனான அழைப்பிற்குப் பிறகு இதே வாய்ப்பு பற்றிக் கேட்கப்பட்டபோது, டோமஹாக்ஸின் அமெரிக்க இருப்பைக் "குறைக்க முடியாது" என்று டிரம்ப் கூறினார். மேலும், "எங்களுக்கும் அவை தேவை... அதனால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை" என்றும் டிரம்ப் கூறினார்.

புதின் உடனான தனது தொலைபேசி அழைப்பு முடிந்த பிறகு, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், யுக்ரேன் போர் முடிந்த பிறகு ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகம் பற்றித் தானும் ரஷ்ய அதிபரும் "அதிக நேரத்தைச் செலவிட்டுப் பேசினோம்" என்று டிரம்ப் எழுதினார்.

அமெரிக்கக் குழுவுக்கு வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமை தாங்குவார் என்று குறிப்பிட்டு, இரு நாடுகளின் "உயர் மட்ட ஆலோசகர்கள்" அடுத்த வாரம் சந்திப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

புதின் உடனான தனது பேச்சுவார்த்தைகள் குறித்து வெள்ளிக்கிழமை ஜெலென்ஸ்கிக்கு தகவல்களை தரவிருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

மேலும், "இன்றைய தொலைபேசி உரையாடலில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டது என்று நான் நம்புகிறேன்" என்றும் அவர் மேலும் கூறினார்.

"இரண்டு வாரங்களுக்குள்" ஹங்கேரியில் புதினைச் சந்திக்கப்போவதாக பின்னர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

ரஷ்யாவுக்குள் 2,500 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை டிரம்ப் யுக்ரேனுக்கு வழங்குவாரா?

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆண்டின் மிகப்பெரிய தாக்குதல்

டிரம்ப் - புதின் அழைப்பிற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, ரஷ்யா யுக்ரேன் மீது இந்த ஆண்டின் மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது. யுக்ரேனின் அமெரிக்கத் தூதர் ஓல்கா ஸ்டெஃபானிஷினா கூற்றுப்படி, இந்தத் தாக்குதலில் 28 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 320 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த அழைப்புக்கு முன் ரஷ்யா யுக்ரேன் மீது இரவுநேரத் தாக்குதல்களைத் தொடுத்தது, இது "சமாதானத்தின் மீது ரஷ்யாவின் உண்மையான அணுகுமுறையை அம்பலப்படுத்துகிறது" என்று ஸ்டெஃபானிஷினா கூறினார்.

"இந்தத் தாக்குதல்கள் மாஸ்கோவின் உத்தி, பயங்கரவாதம் மற்றும் சோர்வு என்பதை காட்டுகின்றன. இதற்குச் செயல்படக்கூடிய ஒரே பதில் அழுத்தம் தான் - கடுமையான தடைகள், வலுவூட்டப்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன்களை வழங்குவதன் மூலம்தான் இதைச் செய்ய முடியும்," என்று பிபிசி-யின் அமெரிக்கப் கூட்டாளியான சிபிஎஸ்ஸிடம் அவர் கூறினார்.

ஹங்கேரியில் திட்டமிடப்பட்டுள்ள டிரம்ப் - புதின் சந்திப்பு "உலகின் அமைதியை விரும்பும் மக்களுக்கு ஒரு சிறந்த செய்தி" என்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் எக்ஸ் தளத்தில் கூறினார்.

முன்னதாக அவர், "சமாதானத்திற்குப் பொறுமை, வலிமை மற்றும் பணிவு தேவை. ஐரோப்பா தனது நிலையை மாற்ற வேண்டும். அகங்காரம் மற்றும் முடிவில்லாத போரின் தீயை ஊதி பெரிதாக்குவதற்கு பதிலாக, நமக்கு ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகள் தேவை. உரையாடல் மட்டுமே நமது கண்டத்திற்கு அமைதியைக் கொண்டு வர முடியும்" என்றும் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் நடந்த நேருக்கு நேர் சந்திப்பில் சமாதான ஒப்பந்தம் ஏற்படாத நிலையில், யுக்ரேன் போர் தொடர்பாகப் புதின் மீது டிரம்ப் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வர விரிவான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்ய அதிபரை முன்வர வைக்கும் என்று அமெரிக்க அதிபர் நம்பிய அந்தச் சந்திப்புக்காக, அவர்கள் ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்க மண்ணில் சந்தித்தனர். ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பை யுக்ரேனில் பிப்ரவரி 2022 இல் தொடங்கியது.

சில நாட்களுக்குப் பிறகு, ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுடனான ஒரு கூட்டத்தை டிரம்ப் இடைமறித்து புதினுக்கு அழைப்பு விடுத்தபோது, அவர்கள் மீண்டும் பேசினர்.

அதன்பிறகு, இருவருக்கும் இடையில் எந்தத் தொடர்பையும் வெள்ளை மாளிகையோ அல்லது கிரெம்ளினோ பொதுவில் உறுதிப்படுத்தவில்லை.

தனது அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, யுக்ரேனில் போரைச் சில நாட்களில் முடிவுக்குக் கொண்டு வர தன்னால் முடியும் என்று டிரம்ப் கூறினார். ஆனால், மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவர் தலையிட்ட எந்த மோதலை விடவும் இந்த மோதலைத் தீர்ப்பது மிகவும் சவாலானது என்று அவர் பின்னர் ஒப்புக்கொண்டார்.

டிரம்ப் தனக்கு முன் அதிபராக இருந்த ஜோ பைடனை விட ரஷ்யாவுக்கு அதிக அனுக்கமுள்ளவராக காணப்பட்டார். மேலும், பிப்ரவரி 28 அன்று, அவரும், துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகிய இருவரும் நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஓவல் அலுவலகத்தில் யுக்ரேன் அதிபரை கண்டித்தபோது, ஜெலென்ஸ்கி உடனான உறவுகள் ஒரு உச்சக்கட்டத்தை அடைந்தன.

ஆனால், ஜெலென்ஸ்கி உடனான பொது உறவுகள் சமீபத்திய மாதங்களில் பெரிதும் மேம்பட்டுள்ளன.

செப்டம்பரில், டிரம்ப் போரைப் பற்றிய தனது பார்வையில் ஒரு பெரிய மாற்றத்தைக் வெளிப்படுத்தினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, புதின் மற்றும் டிரம்ப் கடைசியாக ஆகஸ்ட் 2025 இல் அலாஸ்காவில் உள்ள ஒரு அமெரிக்க தளத்தில் நேரில் சந்தித்தனர்

இந்தியா ஒப்புக்கொண்டதா?

ஜூலை மாதத்தின் பிற்பகுதியில், ரஷ்யாவுடன் இன்னும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய பரந்த தடைகளைச் சந்திக்கலாம் அல்லது போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளலாம் என புதினுக்கு டிரம்ப் இரண்டுவார காலக்கெடு விதித்தார்.

ஆனால், புதின் டிரம்பை அலாஸ்காவில் சந்திக்க ஒப்புக்கொண்ட பிறகு அவர் அந்த அச்சுறுத்தலைத் தொடரவில்லை. எந்தவொரு உறுதியான விளைவையும் ஏற்படுத்தாவிட்டாலும், அந்த நேரத்தில் அமெரிக்க அதிபர் அதை ஒரு குறிப்பிடத்தக்க ராஜ்ஜிய வெற்றியாகப் பாராட்டிக்கொண்டார்.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோதி ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறியது குறித்து வியாழக்கிழமையன்று இந்திய வெளியுறவுத் துறை சந்தேகம் எழுப்பியது.

"குறுகிய காலத்திற்குள்" வாங்குவது நிறுத்தப்படும் என்று மோதி தனக்கு உறுதியளித்ததாக டிரம்ப் கூறிய பிறகு, ஒரு இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், முந்தைய நாள் "இரு தலைவர்களுக்கும் இடையில் நடந்த எந்த உரையாடல் பற்றித் தனக்குத் தெரியாது" என்று கூறினார்.

ரஷ்யா மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க ரஷ்ய எரிசக்தியை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று இந்தியா, சீனா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகள் உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஜெலென்ஸ்கியும் இந்தக் கோரிக்கைகளை எதிரொலித்து வருகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு