கமலா ஹாரிசுக்கு எதிராக தடுமாறும் டிரம்ப் - அதிபர் தேர்தல் வரை இதேநிலை நீடிக்குமா?

அமெரிக்கா, கமலா ஹாரிஸ், டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாரா ஸ்மித்
    • பதவி, வட அமெரிக்கா ஆசிரியர்

சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயக கட்சி மாநாட்டில் வீறுநடையுடன் மேடையேறிய கமலா ஹாரிஸ், தன்னை ஆதரிப்பதற்கு சிறந்ததொரு வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கர்களிடம் தெரிவித்தார்.

இந்த வார தொடக்கத்தில் அம்மாநாட்டில் ஒபாமாவும் அவருடைய மனைவியும் ஆற்றிய எழுச்சிமிக்க உரை போன்று இல்லை எனினும், கமலா ஹாரிஸின் 40 நிமிட உரையின் போது அரங்கத்தில் பரவசமும் நம்பிக்கையும் எழுந்ததை தெளிவாக காண முடிந்தது.

உயர் அதிகார மட்டத்தில் உள்ள பிரபலங்களின் வலியுறுத்தல்கள் மற்றும் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என ஜனநாயக கட்சியினரிடையே நம்பிக்கையும், உற்சாகமும் காணப்படுகிறது. 2008 அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா முதன்முறையாக போட்டியிட்ட போது கூட அக்கட்சி இந்தளவுக்கு நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மகிழ்ச்சியில் ஜனநாயக கட்சியினர்

ஜோ பைடனின் முதிர்ந்த வயது ஒரு சிக்கலாக எழுந்த நிலையில், அவர் இத்தேர்தலில் போட்டியிடாததும் கமலா ஹாரிஸ் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் இருவரும் எந்த தடையுமின்றி அந்த இடத்தை அடைந்ததும், அக்கட்சியினரின் மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது.

ஆனால், இந்த மகிழ்ச்சிக்குப் பின்னால், ஜனநாயக கட்சியின் வாக்காளர்களும் செயற்பாட்டாளர்களும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நவம்பர் 5 அன்று வாக்கு செலுத்த ஊக்கம் அளிப்பது குறித்து கட்சி வியூகவாதிகள் கவலை கொண்டுள்ளனர்.

அதிபர் பைடன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியதையடுத்து, கருத்துக் கணிப்புகள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக வெளிவர தொடங்கினாலும் கடுமையான போட்டியே நிலவுகிறது. வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத ஜார்ஜியா, அரிசோனா, நெவாடா, விஸ்கான்சின், பென்சில்வேனியா, மிச்சிகன், வடக்கு கரோலினா ஆகிய 7 மாகாணங்களே அடுத்த அதிபரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

அமெரிக்கா, கமலா ஹாரிஸ், டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கணவர் டக் எம்ஹாஃப், மற்றும் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் மற்றும் அவருடைய மனைவி க்வென்னுடன் கமலா ஹாரிஸ்

கடந்த ஆறு வாரங்களை வைத்துப் பார்க்கும் போது, தேர்தலுக்கு இன்னும் மீதமுள்ள 70 நாட்களில் விரைவில் மீண்டும் அரசியல் சூழல் மாறலாம்.

பராக் ஒபாமாவின் 2012 தேர்தலின் பிரசாரத்தை நிர்வகித்தவரும் ஜனநாயக கட்சியின் மூத்த வியூகவாதியுமான ஜிம் மெசினா, பிபிசியின் அமெரிகாஸ்ட் எனும் பாட்காஸ்ட்டில், ஜனநாயக கட்சி உறுதியாக வெற்றி பெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று கூறினார்.

“அமெரிக்க அரசியலில் நீண்ட காலமாக நான் பார்த்ததிலேயே, இந்த போட்டிக்குள் கமலா ஹாரிஸ் நுழைந்ததிலிருந்து சிறப்பான 30 நாட்களை அனுபவித்துள்ளார்” என அவர் கூறினார்.

“எனினும், அவர் இத்தேர்தலில் எதிராளியுடன் சம பலத்திலேயே உள்ளார். தேர்தலுக்கு இன்னும் சுமார் 70 நாட்கள் மீதம் உள்ள நிலையில், இன்னும் கடும் போட்டியே நிலவுகிறது” என தெரிவித்தார்.

ஒபாமா பேசியது என்ன?

கமலா ஹாரிஸ் உரையின் போது, அதீத உற்சாகம் தென்பட்டாலும், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஜனநாயக கட்சியினர் செய்வதற்கு இன்னும் பல வேலைகள் உள்ளன.

கமலா ஹாரிஸுக்கு எதிராக எப்படி பரப்புரை செய்வது என்பதில் டிரம்ப் இன்னும் தடுமாறுவதாக தெரிகிறது. கமலா ஹாரிஸுக்கு எதிராக தாக்குதலை தொடுப்பது எப்படி என்பதையும் அவருடைய வழக்கமான பாணியில் ஹாரிஸுக்கு இன்னும் பட்டப்பெயரையும் அவர் தீர்மானிக்கவில்லை.

தன்னுடைய பரப்புரையை சிறப்பானதாக மாற்றும் வகையில், கமலா ஹாரிஸை வரையறுக்கும் வகையில் விரைவில் டிரம்ப் ஒரு திட்டத்தை உருவாக்குவார் என தான் நம்புவதாகவும், அதுதான் அவருடைய சிறப்பான அரசியல் திறன் என்றும் முக்கியமான ஜனநாயக வியூகவாதி ஒருவர் என்னிடம் கூறினார். அதை டிரம்ப் செய்யும் போது கமலா ஹாரிஸுக்கு இந்த தேர்தல் இன்னும் கடினமானதாக மாறும்.

அமெரிக்கா, கமலா ஹாரிஸ், டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2022ம் ஆண்டு வெள்ளை மாளிகை நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமாவும், கமலா ஹாரிஸும்

ஜனநாயக கட்சி மாநாட்டு மேடையில் நம்பிக்கை தெரிந்தாலும், எச்சரிக்கை உணர்வும் இருந்தது.

செவ்வாய்க் கிழமை இரவு மிஷெல் ஒபாமா தன் உரையில், தேர்தலில் மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்று எச்சரித்தார். “எந்த சந்தேகத்தையும் அழித்தொழிக்கும் வகையிலான எண்ணிக்கையில் நாம் வாக்கு செலுத்த வேண்டும்,” என குழுமியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். “நம்மை ஒடுக்கும் எந்த முயற்சியையும் நாம் அடக்க வேண்டும்” என்றார் அவர்.

இதே கருத்தை வலியுறுத்திய பராக் ஒபாமா, அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியதும் தெருக்களில் இறங்கி வேலை செய்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில் சில வலுவான வார்த்தைகளை பயன்படுத்தினார்.

“நாம் மதிக்கும் அமெரிக்காவுக்காக போராடுவது நம் கையில்தான் உள்ளது,” என முன்னாள் அதிபர் தெரிவித்தார். “எந்த தவறும் செய்ய கூடாது, இது ஒரு போராட்டம்” என்றார் அவர்.

"கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார்"

இந்த தேர்தலில் முடிவை தீர்மானிக்கக் கூடிய, இழுபறி நிலவும் முக்கியமான மாகாணங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செய்வதற்கு எவ்வளவு வேலைகள் உள்ளன என்பது நன்றாக தெரிந்திருக்கிறது.

“இந்த வாரம் நான் செல்லும் எல்லா இடங்களிலும் ஜனநாயக கட்சியினரிடம், ‘உங்களை போன்றே எல்லோரும் சக்தியுடன் இருக்கிறார்கள் என எண்ணாதீர்கள்’ என கூறி வருகிறேன்,” என ஜனநாயக கட்சியின் பிரதிநிதியும் மிச்சிகன் மாகாணத்தில் செனட் உறுப்பினருக்கான போட்டியில் உள்ளவருமான எலிசா ஸ்லாட்கின், பொலிடிகோ என்ற இணைய ஊடகத்திடம் தெரிவித்தார்.

இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகள் காரணமாக ஊக்கம் பெற்றுள்ள ஜனநாயக கட்சி பிரதிநிதிகள், ஒபாமாவின் செய்தியை மனதில் கொண்டுள்ளதாக தெரிகிறது.

அமெரிக்கா, கமலா ஹாரிஸ், டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ்

முக்கிய போட்டி களமான ஜார்ஜியாவை சேர்ந்த 21 வயதான கேமரோ லேண்டின், வெற்றியை சாதாரணமாக பெற முடியாது என தெரிவித்தார். ஜார்ஜியாவில் 28 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக கடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.

“கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என நான் நம்புகிறேன்,” என, ஹாரிஸ் மேடை ஏறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு கூறினார்.

சவன்னா நகரை சேர்ந்த பிராந்திய ஒருங்கிணைப்பாளரான அவர், வாக்குப்பதிவை அதிகப்படுத்துவதில் தான் தன்னைப் போன்றவர்கள் கவனம் செலுத்துவதாக கூறினார்.

“இதற்காக வாரத்தில் 60 மணி நேரத்திற்கும் அதிகமாக, ஏழு நாட்களும் ஒருங்கிணைக்கின்றனர். இதற்காக தன்னார்வலர்கள் தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவும் நேரில் சென்றும் பரப்புரை செய்கின்றனர்” என்றார்.

கமலா ஹாரிஸ் மற்றும் வால்ஸை நோக்கி அவர்களின் உருவப்படம் கொண்ட போஸ்டர்களை அசைத்த கட்சி பிரதிநிதிகளை சுட்டிக்காட்டி, “இதுதான் வெற்றி பெறும்” என்றார். “களத்தில் உள்ள மக்களால் தான் வெற்றி கிட்டும்” என்றார்.

"மாயையில் இல்லை"

நெவெடா மாகாணத்தின் ஜனநாயக கட்சி பிரதிநிதி சூசி லீ, லாஸ் வேகாஸ் பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்றும், குறிப்பாக சம பலம் உள்ள தன்னுடைய மாகாணத்தில் கடும் போட்டி நிலவும் என்றும், தான் எந்தவித மாயையிலும் இல்லை என்றும் அவர் கூறினார்.

“வெற்றி குறித்து அதீத நம்பிக்கையில் இருக்கக் கூடாது” என அவர் கூறுகிறார். நெவாடாவில் சில பகுதிகளில் 50-100 வாக்குகளில் கூட வெற்றி தீர்மானிக்கப்படும் என்றார். “எனவே மக்களை வாக்கு செலுத்த ஊக்குவிக்க வேண்டும்.

“ஆனால், டொனால்ட் டிரம்ப் குறித்து மக்கள் சோர்வடைந்து விட்டனர் என நான் நினைக்கிறேன்,” என அவர் தெரிவித்தார். “ஹாரிஸ் மற்றும் டிரம்ப்பில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மிக தெளிவாக உள்ளது. மக்களுக்கு அதுகுறித்து தெரியும் என நினைக்கிறேன்.” என்கிறார் அவர்.

அமெரிக்கா, கமலா ஹாரிஸ், டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப்

சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் அரசியல் மாநாட்டை கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர். முதல் மூன்று நாள் இரவிலும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்தனர்.

ஹாரிஸ்-வால்ஸ் கூட்டணி நிச்சயமாக மேலும் முன்னேற்றம் அடையும். ஆனால், மற்றொரு கட்சி மாநாட்டை தொடர்ந்தே இது நிகழும் என்று மாநாட்டுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

கமலா ஹாரிஸ் குறித்து அமெரிக்கா இப்போதுதான் அறிந்துவரும் நிலையில், கடினமான ஊடக நேர்காணல்களை இதுவரை அவர் தவிர்த்து வருவதாலும் கொள்கைகளை குறைவாகவே வெளிப்படுத்தியுள்ளதாலும் மாநாட்டின் மகிழ்ச்சி தருணம் நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

கிட்டத்தட்ட பாதி அமெரிக்கா, டிரம்ப்பின் பிடியில் உள்ளது. மூன்று தொடர்ச்சியான அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் மூலம் அவர்கள் டிரம்ப்பை நன்கு அறிவார்கள்.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியினர் நிச்சயமாக வெற்றி பெறலாம், ஆனால் அவர்கள் செய்வதற்கு பல கடினமான வேலைகள் உள்ளன.

பெர்ன்ட் டெபுஸ்மன் ஜூனியர் வழங்கிய கூடுதல் தகவல்களுடன்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)