கோவா இரவு விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் குறைந்தது 25 பேர் பலி - நள்ளிரவில் நடந்தது என்ன?

கோவா இரவு விடுதியில் தீ

பட மூலாதாரம், SCREENGRAB

கோவாவில் சனிக்கிழமை இரவு ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர். தீ விபத்துக்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

வடக்கு கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள அந்த இரவு விடுதியில் இறந்தவர்களில் சில சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கிளப்பின் ஊழியர்கள் என்று நம்பப்படுகிறது.

விபத்தில் 25 பேர் இறந்ததாகவும், ஆறு பேர் காயமடைந்ததாகவும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்களில் பெரும்பாலோர் இரவு விடுதியின் சமையலறை ஊழியர்கள் என்றும், அவர்களில் மூன்று பேர் பெண்கள் என்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்தை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நள்ளிரவில் என்ன நடந்தது?

கோவா இரவு விடுதியில் தீ

பட மூலாதாரம், ANI

கோவா டிஜிபி அலோக் குமார் கூறுகையில், "அர்போராவில் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு 12.04 மணிக்கு தீ விபத்து குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு படையினரும் ஆம்புலன்ஸ்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன." என்றார்.

"பெரும்பாலான உடல்கள் உணவகத்தின் சமையலறையில் கண்டெடுக்கப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்றும் அவர் கூறினார்.

சம்பவத்தை நேரில் பார்த்த காவலாளி சஞ்சய் குமார் குப்தா, "இந்த சம்பவம் இரவு 11 மணி முதல் 12 மணிக்குள் நடந்தது. திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது... நான் வாசலில் இருந்தேன். நடனக் கலைஞர்கள் வரவிருந்தனர்." என்று தெரிவித்தார்.

இரவு விடுதிக்கு அருகிலுள்ள ஒரு உணவகத்தின் காவலாளி ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசுகையில், "கார் டயர் வெடித்தது போல பலத்த சத்தம் கேட்டது. சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக பின்னர் கூறப்பட்டது" என்றார்.

கடந்த 8-9 ஆண்டுகளாக இங்கு காவலாளியாக பணியாற்றி வருவதாகவும், சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பணியில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

கோவா இரவு விடுதியில் தீ

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

உயிரிழந்தவர்கள் யார்?

உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்களை அளித்த டிஜிபி அலோக் குமார், "இறந்தவர்களில் பெரும்பாலானோர் உணவக ஊழியர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் சில சுற்றுலாப் பயணிகளும் இருக்கலாம்" என்றார்.

ஊடகங்களிடம் பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் "அர்போராவில் ஏற்பட்ட துயரமான தீ விபத்து குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறேன். இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர், காயமடைந்த ஆறு பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது. அவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கவும், காரணங்களைக் கண்டறியவும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

"மூன்று பேர் தீக்காயங்களால் இறந்தனர், மீதமுள்ளவர்கள் மூச்சுத் திணறலால் இறந்தனர். விரிவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ, "இறந்தவர்களில் பெரும்பாலோர் உணவகத்தின் அடித்தளத்தில் பணிபுரிந்த உள்ளூர்வாசிகள்" என்று கூறியிருந்தார்.

கோவா இரவு விடுதியில் தீ

பட மூலாதாரம், ANI

தீ விபத்தால் எழும் கேள்விகள்

இந்த சம்பவத்திற்குப் பிறகு, கோவாவில் கிளப்களில் தீ தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ, மற்ற கிளப்புகளின் தீ விபத்து தடுப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

"கோவாவில் உள்ள மற்ற அனைத்து கிளப்புகளிலும் நாம் பாதுகாப்பு தணிக்கை செய்ய வேண்டும், இது மிகவும் முக்கியமானது. சுற்றுலாப் பயணிகள் எப்போதும் கோவாவை மிகவும் பாதுகாப்பான இடமாகக் கருதுகின்றனர்" என்று அவர் கூறினார்.

"தீ விபத்து மிகவும் கவலையளிக்கிறது, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் இந்த இடங்களில் பணிபுரியும் மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது..." என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு