தமிழ் சினிமாவில் தீபாவளியன்று திரையில் மோதிய நட்சத்திரங்கள் - ஒரு மீள் பார்வை

தீபாவளியின் போது திரையில் மோதிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள் யார்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மிகப் பெரிய அளவில் திரைப்படங்கள் வெளியாகும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே அந்தப் போக்கில் மந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டில் வெகு சில படங்களே தீபாவளியை ஒட்டி வெளியாகின்றன. இதற்கு முந்தைய தீபாவளி மோதல்கள் எப்படியிருந்தன?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகை நெருங்கும்போது, புத்தாடைகள், பட்டாசுகள் பற்றி எந்த அளவுக்கு பேச்சுகள் அடிபடுமோ அதைவிட அதிகமாக தீபாவளியை ஒட்டி வெளியாகும் திரைப்படங்கள் குறித்த பேச்சுகளும் செய்திகளும் இடம்பெறும். தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலத்திலிருந்தே, அதாவது தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே இந்தப் போக்கு இருந்து வருகிறது.

1944ஆம் தீபாவளிக்கு எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் வெளியானது.
படக்குறிப்பு, 1944ஆம் தீபாவளிக்கு எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் வெளியானது.

தியாகராஜ பாகவதர் vs சின்னப்பா

எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் 1944ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி ஒரு தீபாவளி தினத்தன்றுதான் வெளியானது. அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி கதாநாயகனாக இருந்த பி.யு.சின்னப்பா நடித்த மகாமாயாவும் அதே நாளில் வெளியானது.

இதில் ஹரிதாஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சென்னையில் ஒரு திரையரங்கில் இரண்டு ஆண்டுகள் வரை ஓடியது. ஹரிதாஸ் படத்திற்குப் பிறகு, எம்.கே. தியாகராஜ பாகவதர் சிறைக்குச் சென்றுவிட, அவருடைய படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பி.யு. சின்னப்பா 1951ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார். இதனால், இருவரது படங்களும் தீபாவளிக்கு மோதும் நிலை ஏற்படவில்லை.

சிவாஜி vs எம்.ஜி.ஆர்

1952ஆம் ஆண்டு தீபாவளி அன்று சிவாஜி கணேசனின் பராசக்தி திரைப்படம் வெளியானது.

பட மூலாதாரம், PREMNATH

படக்குறிப்பு, 1952ஆம் ஆண்டு தீபாவளி அன்று சிவாஜி கணேசனின் பராசக்தி திரைப்படம் வெளியானது.

இதே காலகட்டத்தில் ஒரு தீபாவளி தினத்தன்று வெளியான படத்தில் அறிமுகமானார் சிவாஜி கணேசன். 1952ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி மு. கருணாநிதியின் கதை வசனத்தில் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் உருவான பராசக்தி வெளியானது.

படம் மிகப் பெரிய ஹிட். சிவாஜி கணேசன் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின் படங்களைப் பொறுத்தவரை, விக்ரமாதித்தன், காஞ்சித் தலைவன், படகோட்டி, தாழம்பூ, மன்னாதி மன்னன், பறக்கும் பாவை, விவசாயி, காதல் வாகனம், எங்கள் தங்கம், இதய வீணை, நீரும் நெருப்பும், பல்லாண்டு வாழ்க, ஊருக்கு உழைப்பவன் ஆகிய படங்கள் தீபாவளி தினத்தன்றே வெளியாயின.

1960ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று எம்.ஜி.ஆர். நடித்த மன்னாதி மன்னன் திரைப்படம் வெளியானது. அதே நாளில் சிவாஜி கணேசன் நடித்த இரண்டு படங்கள் போட்டியாக வெளியாயின. ஒன்று, பெற்ற மனம். மற்றொன்றி பாவை விளக்கு. இதில் மன்னாதி மன்னன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதற்குப் பிறகு, 1964ஆம் ஆண்டு தீபாவளியை ஒட்டி எம்.ஜி.ஆர். நடித்த படகோட்டியும் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி திரைப்படமும் வெளியாயின. இரண்டு படங்களுமே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றன.

1971ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பு திரைப்படமும், சிவாஜியின் பாபு திரைப்படமும் மோதின. ஜெய்சங்கர் நடித்த வீட்டுக்கு ஒரு பிள்ளை, கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய ஆதிபராசக்தி ஆகிய திரைப்படங்களும் அதே நாளில் வெளியாயின. இதில் ஆதிபாராசக்தி திரைப்படம் மிக பெரிய வசூலைப் பெற்றது.

ரஜினி vs கமல்

ரஜினியின் மாப்பிள்ளை படமும், கமலின் குணா படமும் மோதின.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஜினியின் மாப்பிள்ளை படமும், கமலின் குணா படமும் மோதின.

ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இரு துருவங்களில் முன்னணி நட்சத்திரமாக இருந்த 1980களில் பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி தினத்தன்று இருவரது திரைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன. 1983ல் ரஜினியின் தங்கமகனும் கமல் நடித்து தூங்காதே தம்பி தூங்காதே திரைப்படமும் வெளியானது. இதே தீபாவளிக்கு சிவாஜி நடித்த வெள்ளை ரோஜா திரைப்படமும் வெளியானது.

1984ல் ரஜினிகாந்த் நடித்த நல்லவனுக்கு நல்லவனும் அதற்குப் போட்டியாக கமல் நடித்த எனக்குள் ஒருவன் திரைப்படமும் வெளியாயின. 1985ல் ரஜினிக்கு படிக்காதவன் படமும் கமலுக்கு ஜப்பானில் கல்யாணராமன் படமும் வெளியாகின.

1986ல் ரஜினிக்கு மாவீரன் திரைப்படமும் கமலுக்கு புன்னகை மன்னன் படமும் வெளியாயின. 1987ஆம் ஆண்டு தீபாவளியன்று கமல் நடித்து நாயகன் திரைப்படமும் ரஜினிகாந்த் நடித்து மனிதன் திரைப்படமும் வெளியானது.

இதற்குப் பிறகு 1989ஆம் ஆண்டில் ரஜினி நடித்து மாப்பிள்ளை திரைப்படமும் கமல் நடித்து வெற்றிவிழா திரைப்படமும் வெளியானது. 1991ல் தளபதியும் குணாவும் மோதின. 1992ல் பாண்டியன் - தேவர் மகன் படங்களும் 1995ல் முத்து - குருதிப்புனல் படங்களும் மோதின.

விஜய் vs அஜித்

கடைசியாக தீபாவளிக்கு வெளியான விஜய் படம் லியோ.

பட மூலாதாரம், X/Vijay

படக்குறிப்பு, கடைசியாக தீபாவளிக்கு வெளியான விஜய் படம் லியோ.

இதற்குப் பிறகு, 1990களில் விஜய்யும் அஜித்தும் தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக உருவெடுத்தனர். இவர்கள் இருவரும் நடித்த படங்கள் மோதிக்கொண்ட முக்கியத் தீபாவளியாக 2002ஆம் ஆண்டைக் குறிப்பிடலாம்.

அந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த பகவதி படமும் அஜித் நடித்த வில்லன் படமும் மோதின. இதற்கு அடுத்த ஆண்டும் மோதல் தொடர்ந்தது. 2003ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த திருமலையும் அஜித் நடித்த ஆஞ்சநேயாவும் மோதின. அதே நாளில் சூர்யா - விக்ரம் நடித்த பிதாமகனும் களமிறங்கியது.

இதற்குப் பிந்தைய ஆண்டுகளில் விஜய் தீபாவளியன்று படங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தினாலும் அஜித்தின் படங்கள் வெவ்வேறு தருணங்களில் வெளியாகின. ஆகவே 2005ல் சிவகாசி, 2007ல் அழகிய தமிழ் மகன், 2011ல் வேலாயுதம், 2012ல் துப்பாக்கி, 2014ல் கத்தி, 2017ல் மெர்சல், 2018ல் சர்க்கார், 2019ல் பிகில், 2023ல் லியோ என பல தீபாவளிக்கு ரசிகர்களை மகிழ்வித்தார் விஜய்.

இந்தாண்டு ரிலீஸாகும் படங்கள்

மாரி செல்வராஸ் இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடிப்பில் பைசன் திரைப்படம் வெளியாகிறது.

பட மூலாதாரம், X/MariSelvaraj

படக்குறிப்பு, மாரி செல்வராஸ் இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடிப்பில் பைசன் திரைப்படம் வெளியாகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தீபாவளியை ஒட்டி பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது வெகுவாகக் குறைந்திருக்கிறது. இந்த ஆண்டும் அதே போக்கே நீடிக்கிறது. இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி மூன்று திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. பைசன், டீசல், ட்யூட் என மூன்று தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகின்றன. இது தவிர பாதி ராத்திரி என்ற மலையாளத் திரைப்படமும் வெளியாகிறது.

தீபாவளிக்கு வெளியாகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.

பட மூலாதாரம், X/HarishKalyan

படக்குறிப்பு, தீபாவளிக்கு வெளியாகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.

1. பைசன் - காளமாடன்:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படத்தில் த்ருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

வாழை திரைப்படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படம் இது. ஆதித்ய வர்மா, வர்மா, மகான் ஆகிய படங்களுக்குப் பிறகு த்ருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படம் இது.

இந்தப் படம் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரான மணத்தி பி. கணேசனின் வாழ்வின் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் எனக் கூறப்படுகிறது. மேலும், தென் மாவட்டங்களில் உள்ள சாதிய அடக்குமுறைகள், மோதல்களும் படத்தின் பின்புலமாக இடம்பெற்றுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2. டீசல்:

சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி ஆகியோர் நடிக்கும் படம் இது. லப்பர் பந்து படத்திற்குப் பிறகு ஹரீஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படம் இது. டீசல் திருட்டு, அதன் பின்னால் உள்ள மாஃபியா ஆகியவற்றை முன்வைத்து உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரைப்படம் இது.

இந்தப் படத்தில் வினய் வில்லனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லரும் பாடல்களும் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால், ஒரு எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதீப் ரங்கநாதனும் மமிதா பைஜும் நடித்திருக்கும் திரைப்படம் ட்யூட்.

பட மூலாதாரம், X/Pradeep Ranganathan

படக்குறிப்பு, பிரதீப் ரங்கநாதனும் மமிதா பைஜும் நடித்திருக்கும் திரைப்படம் ட்யூட்.

3. ட்யூட் (Dude):

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனும் மமிதா பைஜும் நடித்திருக்கும் திரைப்படம் இது. ட்ராகன் திரைப்படத்திற்குப் பிறகு பிரதீப் நடித்திருக்கும் படம்.

ஏற்கனவே ப்ரதீப் ரங்கநாதன் இயக்கிய, நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவே அமைந்ததால் இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. சாய் அப்யங்கர் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் பிரதீப் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.

4. பாதி ராத்திரி (மலையாளம்): மம்மூட்டி நடித்த புழு படத்தை இயக்கிய ரத்தீனா இயக்கியிருக்கும் படம் இது. 2022ல் வெளியான க்ரைம் த்ரில்லரான எல வீழா பூஞ்சிரா படத்தின் கதையை நிதீஷுடன் இணைந்து எழுதிய ஷாஜி மாரத் இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.

இதில் ஷௌபீன் ஷபீரும் நவ்யா நாயரும் நடித்திருக்கின்றனர். இடுக்கியில் ஒரு கிராமத்தில் நடப்பதைப்போல இந்தக் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு இரவில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் எதிர்கொள்ளும் சம்பவங்களும் அதைத் தொடரும் நிகழ்வுகளும்தான் இந்தப் படத்தின் கதை. மலையாள த்ரில்லர் திரைப்படங்கள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், இந்தப் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நான்கு திரைப்படங்கள் தவிர, ஆயுஷ்மான் குரானா, ராஷ்மிகா மந்தனா, நவாஸுதீன் சித்திக், சத்யராஜ் ஆகியோர் நடித்த Thamma என்ற இந்திப் படமும் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு