தெற்காசிய கால்பந்து: தீப்பொறி பறந்த பெனால்டி ஷூட் அவுட்டில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், TWITTER/IFTWC - Indian Football
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பெங்களூருவில் நேற்று நடந்த 14-ஆவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் குவைத் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
பெங்களுருவில் உள்ள ஸ்ரீ கான்டீரவா மைதானத்தில் நேற்று நடந்த கால்பந்து இறுதி ஆட்டத்தைப் பார்க்கக் கூடிய 26 ஆயிரம் ரசிகர்களும், இந்திய அணிக்கு அளித்த ஆதரவும் உற்சாகமும், ஆர்ப்பரிப்பும், கிரிக்கெட்டைப் போல் மற்ற போட்டிகளையும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதைக் காட்டியது.
அது மட்டுமல்லாமல் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றவுடன் ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று “வந்தே மாதரம்” பாடல் பாடியது மெய்சிலிர்க்க வைத்தது.
இறுதிப்போட்டியில் இந்தியா - குவைத் பலப்பரீட்சை
தெற்காசிய கால்பந்து சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இந்தியா, குவைத் அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் நேற்றைய ஆட்டத்தில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆகாஷ் மிஸ்ரா, நிகில் பூஜாரி அணிக்குள் வந்தனர், கடந்த ஆட்டத்தில் சஸ்பெண்ட் ஆகிஇருந்த சந்தேஷ் ஜிங்கன், மெஹ்தாப் சிங்கிற்கு பதிலாக ஆடினார்.
இந்திய அணியினர் 4 தற்காப்பு வீரர்களை வைத்து ஆட்டத்தைத் தொடங்கினாலும், குவைத் அணியினர் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருந்தனர். ஆட்டம் தொடங்கியதிலிருந்தே குவைத் அணி ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டநேர முடிவில் சமநிலை
குவைத் வீரர் முபாரக் பந்தை அப்துல்லாவிடம் கடத்தவே, அவர் பந்தை லாவகமாகக் கொண்டு சென்று கட்டத்துக்குள் நின்றிருந்த சபைப் அல் கால்தியிடம் வழங்கினார். சரியான வாய்ப்புக்காக காத்திருந்த அல் கால்தி இந்திய கோல்கீப்பர் சாந்துவை ஏமாற்றி கோல் அடித்து 1-0 என குவைத்தை முன்னிலைப் பெறச் செய்தார்.
இந்திய வீரர்களும் உடனடியாக பதிலடி கொடுக்க முயன்று, இந்திய வீரர் ஹாங்டே அடித்த பந்தை குவைத் கோல் கீப்பர் அப்துல் ரஹ்மான் தடுத்துவிட்டார்.
மனம்தளராமல் போராடிய இந்திய அணியினர் ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தனர், அப்துல் சமதுவின் ஸ்குவயர் பந்தில், லாலியன்ஜூலா ஹான்டே கோல் அடித்து சமன் செய்தார். அதன்பின் ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கூடுதலாக எந்த கோலும் அடிக்கவில்லை. இரு அணிகளும் போட்டி நேரமான 90 நிமிடங்களில் தலா 1-1 என கோல் மட்டுமே அடித்திருந்தனர்.
இரு அணிகளுக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதன்பின் பெனால்டி சூட்அவுட் நடத்தப்பட்டது.
பெனால்டி ஷூட்அவுட்
இந்திய அணி தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். ஆனால், முதல் வாய்ப்பில் குவைத் அணி வீரர் அப்துல்லா கோல் அடிக்காமல் தவறவிட்டார்.
2வது வாய்ப்பில் இந்திய வீரர் ஜிங்கன் லாவகமாக கோல் அடித்து 2-0 என முன்னிலை பெற வைத்தார். குவைத் வீரர் அலோடபி 2வது வாய்ப்பில் முதல் கோலை அணிக்காக அடித்தார்.
3வது வாய்ப்பில் இந்திய வீரர் ஹான்டே கோல் அடித்து 3-1 என்று முன்னேற்றினார். குவைத் வீரர் அல்திபெரி கோல் அடித்து 3-2 என்ற கணக்கில் விரட்டியது.

பட மூலாதாரம், TWITTER/IFTWC - Indian Football
திக்... திக்... நிமிடங்கள்
4வது வாய்ப்பை இந்திய வீரர் உடன்டா கோல் அடிக்காமல் தவறவிட்டார். ஆனால், குவைத் அணி வீரர் மஹ்ரன் கோல் அடித்து 3-3 என சமன் செய்தார். 5வது வாய்ப்பில் இந்திய வீரர் சுபாஷ் போஸ் கோல் அடித்து 4-3 என்றும், குவைத் தரப்பில் அல்காதி கோல் அடிக்கவே 4-4 என்ற பரபரப்பான கட்டத்தை எட்டியது.
கிரிக்கெட்டில் மட்டும்தான் கடைசி ஓவர், கடைசி பந்து பரபரப்புக்காக ரசிகர்கள் இருக்கையின் நுனியில் அமரவில்லை. இந்த ஆட்டத்தின் முடிவைக் காணவும் ரசிகர்கள் பதற்றத்துடன், வாயில் விரல் வைத்தும், முகத்தில் கைபதித்தும் பதற்றத்துடன் இருந்தனர்.
6-வது(சடன்டெத்) வாய்ப்பில் இந்திய வீரர் மகேஷ் சிங் எளிதாக கோல் அடித்து 5-4 என்று முன்னேற்றினார். கடைசி வாய்ப்பில் குவைத் கேப்டன் கலீத் ஹிஜையா கோல் அடிக்க வலதுபுறம் பந்தை உதைத்தார். இதைச் சரியாகக் கவனித்த இந்திய அணியின் கோல் கீப்பர் குர்மீத் சாந்து அற்புதமாகத் தடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
பெனால்டி சூட்அவுட் முறையில், குவைத் அணியை 4-5 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது
கோல்டன் பூட், கோல்டன் பால் விருது
இந்தத் தொடரில் அதிகபட்சமாக 6 கோல்கள் அடித்த இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு “கோல்டன் பூட்” , “கோல்டன் பால்” வழங்கப்பட்டது. சிறந்த கோல்கீப்பராக வங்கதேசத்தின் அனிசுர் ரஹ்மானும், சிறந்த அணிக்கான விருது நேபாளத்துக்கும் வழங்கப்பட்டது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கூறுகையில் “ அனைவரும் உற்சாகத்துடன் இருப்பதும், மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் போட்டித் தொடர் முழுவதும் எங்களுக்கு கடினமாகத்தான் இருந்தது.
ஒடிசாவில் நடந்த போட்டித் தொடரில் கலந்துவிட்டு, நேரடியாக வந்து இந்தத் தொடரில் பங்கேற்றோம். குவைத் அணி மிக வலிமையான அணி என்பது தெரிந்திக்கும். வெற்றியுடன் தொடரை முடித்துக் கொடுத்தது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்

பட மூலாதாரம், TWITTER/IFTWC - Indian Football
கோல் கீப்பர் சாந்து பெருமிதம்
இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த கோல் கீப்பர் சாந்து கூறுகையி்ல் “ அனைத்து பெருமைகளும் இந்திய அணி வீரர்களுக்கே சாரும். குவைத் அணி முதல் கோல் அடித்தாலும், மனம் தளராமல் இருந்து பதிலடி கொடுத்து கோலை சமன் செய்தனர்.
இதன்பின் எதிரணியை கோல் அடிக்கவே இந்திய வீரர்கள் அனுமதிக்கவில்லை. ஒரு கோல் அடிக்க வாய்ப்பளித்ததுதான் எங்களின் பலவீனமாக இருந்துவிட்டது. குவைத்தும் எளிதாக கோல் அடித்துவிட்டது. ஆனால், பெனால்டி சூட்அவுட் முறைக்கு வந்தவுடன் அது எங்களுக்குரிய நாளாக மாறிவிட்டது” எனத் தெரிவித்தார்.
9-வது முறையாக சாம்பியன்
இதன் மூலம் இந்திய அணி, தெற்காசிய கால்பந்து சாம்பியன் பட்டத்தை 1993, 1997, 1999, 205, 2009, 2011, 2015, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் வென்று சாதனை படைத்துள்ளது. நடப்பு சாம்பியன் என்ற கவுரவத்துடன் களமிறங்கிய இந்திய அணி அந்த பட்டத்தையும் தக்கவைத்தது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ஏறக்குறைய ரூ.41 லட்சம்(50ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற குவைத் அணிக்கு ரூ.20.50 லட்சம் பரிசாக அளிக்கப்பட்டது.

பட மூலாதாரம், TWITTER/IFTWC - Indian Football
3 மாதங்களில் 3வது கோப்பை
கடந்த 3 மாதங்களில் இந்திய கால்பந்து அணி வெல்லும் 3வது கோப்பை இதுவாகும். இதற்கு முன் ஜூன் மாதம் லெபானான் அணியை வென்று இன்டர்கான்டிநென்டல் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. அதற்கு முன், முத்தரப்பு நாடுகள் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 2023 ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை தோல்வியே கண்டிராத அணியாக இந்திய அணி இருந்து வருகிறது.
அது மட்டுமல்லாமல் தெற்காசிய கால்பந்துப் போட்டியின் லீக்ஆட்டங்களிலும் காலிறுதி, அரையிறுதியிலும் தோல்வி அடையாமல் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை வென்றது.
தெற்காசியாவில் இல்லாத குவைத், லெபனான் பங்கேற்றது ஏன்?
தெற்காசியக் கால்பந்து சம்மேளனத்தில் குவைத், லெபனான் நாடுகள் உறுப்பு நாடுகளும் இல்லை, கடந்த காலங்களில் போட்டிகளில் பங்கேற்கவும் இல்லை. ஆனால் இலங்கை அணிக்கு கடந்த ஜனவரி மாதம் சர்வதேச கால்பந்து அமைப்பு தடை விதித்தது. இதையடுத்து தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரை சவாலாகக் கொண்டு செல்லவே லெபனான், குவைத் அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இரு அணிகளுமே தங்கள் சார்ந்திருக்கும் பிரிவில் முதல் இரு இடங்களுக்குள் வந்து தங்களின் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












