இந்தியாவுடனான மோதலில் சீன உதவியால் பாகிஸ்தான் வென்றதா? அமெரிக்க அறிக்கை கூறுவது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானின் கை ஓங்கி இருந்தது - அமெரிக்க அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த மே மாதம் நடந்த இந்தியா, பாகிஸ்தான் மோதலில் சீன ஆயுதங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியதாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை கூறுகிறது (கோப்புப் படம்)

இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் மேலாதிக்கம் செலுத்தியதாகவும், சீனா தனது ஆயுதங்களைச் சோதித்துப் பார்க்கவும் அவற்றை ஊக்குவிக்கவும் இந்த மோதலைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஆனால், இந்த நான்கு நாள் மோதலில், பாகிஸ்தான் எல்லையில் இருந்த பல "பயங்கரவாத கட்டமைப்புகளை" அழித்ததாகவும், இந்த ராணுவ மோதலில் இந்திய ராணுவம் "வெற்றி அடைந்ததாகவும்" இந்தியா தெரிவித்தது.

அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையத்தின் (யு.எஸ்.சி.சி) அறிக்கையில் 108, 109 ஆகிய பக்கங்களில், "பிரெஞ்சு ரஃபேல் ஜெட் விமானங்கள் குறித்து 'அவதூறு' பரப்புவதற்கும் தனது சொந்த ஜெ-35 போர் விமானங்களை "ஊக்குவிப்பதற்கும்" போலி சமூக ஊடக கணக்குகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்தி சீனா ஒரு 'திட்டமிடப்பட்ட பிரசாரத்தை' தொடங்கியது" என்று கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ஓரிடத்தில், "நான்கு நாள் மோதலின்போது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் அடைந்த வெற்றியில் சீன ஆயுதங்கள் பங்கு வகித்தன" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதியன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை 'கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்' என்றும் அந்த அறிக்கை விவரித்துள்ளது.

இந்த அறிக்கை இந்தியாவில் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. இது இந்தியாவின் ராஜதந்திரத்திற்குப் பெரும் பின்னடைவு என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறியுள்ளது. இதற்கிடையில், பாஜக மறைமுகமாக எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து விமர்சிக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் மோதல், அமெரிக்கா அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

அறிக்கை என்ன சொல்கிறது?

மொத்தமாக 745 பக்கங்களைக் கொண்ட அறிக்கையின் ஒரு பகுதி, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் சீனாவின் மூலோபாய செல்வாக்கு அதிகரிப்பது பற்றிப் பேசுகிறது.

அதில், இந்தியா, சீனா இடையிலான பதற்றத்தைக் குறைக்க நடைபெற்ற உயர்மட்ட ராணுவ சந்திப்புகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்ட தியான்ஜின் பயணமும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அதில், சீனா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாகவும், பாகிஸ்தானின் ராணுவ நெருக்கடியைத் தனது பாதுகாப்புத் திறன்களைப் பரிசோதிக்கவும் மேம்படுத்தவும் சீனா பயன்படுத்தியது என்றும் ஓரிடத்தில் கூறப்பட்டுள்ளது.

"கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் ராணுவங்களுக்கு இடையிலான மோதலில் சீனாவின் பங்கு உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் பாகிஸ்தான் ராணுவம் சீன ஆயுதங்களை நம்பியிருந்தது, அதோடு சீன உளவுத்துறையையும் அது பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது" என்று அறிக்கை கூறியது.

இந்தியா பாகிஸ்தான் மோதல், அமெரிக்கா அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

"ஜம்மு-காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதியில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய கிளர்ச்சியாளர் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததில் இரு நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் தொடங்கியது" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதோடு, "50 ஆண்டுகளில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் எல்லைகளில் இவ்வளவு தீவிரமான தாக்குதல்களை நடத்துவது இதுவே முதல்முறை.

மோதல் முழுவதிலும் இந்திய ராணுவ நிலைகள் குறித்து பாகிஸ்தானுக்கு சீனா நேரடி தகவல்களை வழங்கியதாகவும், மோதலை அதன் ராணுவ திறன்களுக்கான ஒரு பரிசோதனைக் களமாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் இந்திய ராணுவம் கூறியது.

பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அதே நேரத்தில் சீனா அதன் பங்கை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை" என்றும் அறிக்கை கூறுகிறது.

காணொளிக் குறிப்பு,

சீனா, பாகிஸ்தான் இடையிலான ஒத்துழைப்பும் இந்தியாவும்

2025ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடனான தனது ராணுவ ஒத்துழைப்பை சீனா அதிகரித்தது. இது இந்தியா-சீனா இடையிலான பாதுகாப்பு விவகாரங்களில் பதற்றத்தை ஆழப்படுத்தியதாக அமெரிக்க ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.

அந்த அறிக்கையில், "இந்தியாவுக்கு எதிரான நான்கு நாள் மோதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் வெற்றி, சீன ஆயுதங்களைக் காட்சிப்படுத்தியது. ஆனால், இந்த மோதலின் ஊடாக சீனா இந்தியாவுடன் 'மறைமுகப் போரை' நடத்தியதாகக் கூறுவது சீனாவின் பங்கினை மிகைப்படுத்துவதாகும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், சீனா தனது ஆயுதங்களின் திறன்களைச் சோதிக்கவும் மேம்படுத்தவும் இந்த மோதலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டதாக அறிக்கை கூறுகிறது. "இந்தியாவுடனான அதன் தற்போதைய எல்லைப் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பாக வளர்ந்து வரும் சீனாவின் விருப்பங்களை வைத்துப் பார்க்கையில், இது பயனுள்ளதாக இருந்துள்ளது," எனக் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, பாகிஸ்தானின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தரான சீனா, 2019 மற்றும் 2023க்கு இடையில் அந்நாட்டு ஆயுதங்களில் 82 சதவிகிதத்தை வழங்கியிருந்தது. HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு, PL-15 வான்வழி ஏவுகணைகள், J-10 போர் விமானங்கள் போன்ற மேம்பட்ட ஆயுத அமைப்புகள் போரில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. இந்த மோதல், ஒரு களப் பரிசோதனையை மேற்கொள்வதற்கான வாய்ப்பை சீனாவுக்கு வழங்கியது.

கடந்த மே 10ஆம் தேதியன்று, இந்தியாவின் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி (வலது), விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை குறித்து விளக்கினர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த மே 10ஆம் தேதியன்று, இந்தியாவின் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி (வலது), விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை குறித்து விளக்கினர்.

சீனா, 40 ஜெ-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள், KJ-500 விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை ஜூன் மாதத்தில் பாகிஸ்தானுக்கு விற்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. அதே மாதத்தில் பாகிஸ்தான் 2025-26க்கான தனது பாதுகாப்பு பட்ஜெட்டில் 20 சதவிகித அதிகரிப்பை அறிவித்தது.

இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு, பல்வேறு நாடுகளில் உள்ள சீன தூதரகங்கள் இந்த மோதலில் தங்கள் ஆயுதங்களுக்கு கிடைத்த வெற்றியைப் பாராட்டியதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக "இந்த மோதலில், பிரெஞ்சு ரஃபேல் போர் விமானங்களை வீழ்த்த சீன ஆயுதங்களைப் பயன்படுத்தியது, ஒரு முக்கிய விற்பனைப் புள்ளியாக முன்வைக்கப்பட்டது" என்று அறிக்கை கூறுகிறது.

இந்த மோதலில் ஆறு இந்திய ரஃபேல் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. எனினும், இந்தியா இந்தக் கூற்றை ஒருபோதும் உறுதி செய்யவில்லை. மேலும், இரு நாடுகள் இடையே நடந்த மோதலில் எத்தனை இந்திய விமானங்கள் சேதமடைந்தன என்பதையோ, அவை எந்த விமானங்கள் என்பது பற்றியோ எந்தத் தகவலையும் இந்தியா வழங்கவில்லை.

சீனா தனது ஜெ-35 விமானங்களை ஊக்குவிக்கவும், பிரெஞ்சு ரஃபேல் விற்பனையைப் பாதிக்கக்கூடிய வகையிலும் தவறான பிரசாரத்தைத் தொடங்கியதாக பிரெஞ்சு உளவுத்துறை அமைப்புகளை மேற்கோள் காட்டி அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீன ஆயுதங்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தின் எச்சங்கள் என்று கூறி போலி சமூக ஊடக கணக்குகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வீடியோ கேம்களால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைப் பரப்புவது இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நடந்தவை என்றும் கூறியுள்ளது.

ரஃபேல் விமானங்களை வாங்கும் செயல்முறையை நிறுத்துமாறு சீன தூதரக அதிகாரிகள் இந்தோனேசியாவை வற்புறுத்தியதாகவும், இது சீனா தனது பாதுகாப்பு உபகரணங்களைப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு விற்பதற்கான வாய்ப்பை உருவாக்கியதாகவும் அறிக்கை கூறுகிறது.

இந்தியா பாகிஸ்தான் மோதல், அமெரிக்கா அறிக்கை

பட மூலாதாரம், Reuters

இந்தியாவில் எதிர்வினை

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் இந்த அறிக்கை தொடர்பாக பிரதமர் மோதி மற்றும் மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை விமர்சித்துப் பேசியுள்ளார்.

அறிக்கையில் உள்ள சில கூற்றுக்களைக் குறிப்பிட்டு, "அதிபர் டிரம்ப் இதுவரை, ஆபரேஷன் சிந்தூரை தான் நிறுத்தியதாக 60 முறை கூறியுள்ளார். இந்த விஷயத்தில் பிரதமர் முற்றிலும் மௌனமாக இருக்கிறார். இப்போது இந்த அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தின் அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆணையத்திடம் இருந்து வந்துள்ளது.

இது இந்தியாவால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு பிரதமரும், வெளியுறவு அமைச்சகமும் ஆட்சேபனை எழுப்பி எதிர்ப்புத் தெரிவிப்பார்களா? நமது ராஜதந்திரம் மற்றொரு கடுமையான அடியைச் சந்தித்துள்ளது" என்று தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், ஜெய்ராம் ரமேஷின் அறிக்கை குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஏப்ரலில் நடந்த பஹல்காம் தாக்குதலை ஒரு 'கிளர்ச்சித் தாக்குதல்' என்று ஓர் அதிகாரபூர்வ அமெரிக்க அறிக்கை எப்படிக் குறிப்பிட முடியும்?

நான்கு நாட்கள் நடந்த ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் ராணுவ வெற்றியைப் பெற்றதாக எப்படிப் பேச முடியும்? இந்தியாவுக்கு சாதகமாக ஆதாரங்களையும், ராஜதந்திரத்தையும் வழங்க மோதி அரசு தவறியது ஏன்? இதற்கு மோதி அரசு நாடாளுமன்றத்தில் பதில் கூற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

எஃப்-35 போர் விமானம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செளதி அரேபியா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று இந்தியா பெயரிட்டது.

பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித் மால்வியா அமெரிக்க அறிக்கையின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி மறைமுகமாக எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசியுள்ளார்.

"சீனாவின் கூற்றை இவ்வளவு தீவிரமாக யார் முன்னெடுத்துச் செல்கிறார்கள் என்பதுதான் உண்மையான கேள்வி. இந்திய விமானப் படை அதன் அனைத்து சொத்துகளும் பாதுகாப்பாக உள்ளன என்றும், மோதலின்போது செயல்பாட்டுத் தகவல்களைப் பகிர்வது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் தெளிவாகக் கூறியது.

இருந்த போதிலும், எத்தனை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது போன்ற புள்ளிவிவரங்களை யார் கோரினர். சீனப் பிரசார இயந்திரத்தை இயக்கியவர்கள் வெளியாட்கள். ஆனால் அதன் ஊதுகுழல் இந்தியாவுக்குள் இருக்கிறது. அதை யார் இயக்கினார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு