வலுவிழந்த 'திட்வா புயல்' - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கு நிலை கொண்டுள்ளது?

திட்வா புயலின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம்.

பட மூலாதாரம், IMD

படக்குறிப்பு, திட்வா புயலின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம்.

இலங்கையில் கடந்த சில தினங்களாக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய திட்வா புயல் இன்று மாலை 05:30 மணி அளவில் 5 கிமீ வேகத்திற்கு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரையை ஒட்டி நகர்ந்த திட்வா புயல் நாளை (டிசம்பர் 1-ஆம் தேதி) காலை மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், "நவம்பர் 30 மாலை 05:30 மணி நிலவரப்படி, காரைக்காலுக்கு கிழக்கு-வடகிழக்கே 130 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 90 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது''.

திட்வா புயலின் மையப் பகுதியானது, இன்று 30ம் தேதி நவம்பர், இரவு வடதமிழகம்-புதுச்சேரி கடற்கரையிலிருந்து 40 கி. மீ தொலைவிலும் நாளை டிசம்பர் 1ம் தேதி காலை 20 கி.மீ. தொலைவிலும் இருக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

வங்கக் கடலில் தற்போது நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த சில நாள்களுக்கு எந்தெந்த இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

நவம்பர் 30

திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே கனமழை பெய்யலாம்.

டிசம்பர் 1

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று வீச வாய்ப்பு

வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த தரைக் காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

திட்வா புயலின் கணிக்கப்பட்ட பாதை

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வீசிவரும் சூறாவளிக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்திலும் வீசுகிறது. அது 30ம் தேதி காலை வரை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் வேகம், டிசம்பர் ஒன்றாம் தேதி மணிக்கு 45-55 கி.மீ ஆகக் (அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசும்) குறையும்.

நவம்பர் 30 காலை வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் அதில் முன்னேற்றம் காணப்படும்.

டிசம்பர் 1 முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. "45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்." என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இடங்களில் இந்த காலகட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலில் இருப்பவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி & தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளை டிசம்பர் ஒன்றாம் தேதி வரை தவிர்க்கவேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடற்கரையை நவம்பர் 30 வரை தவிர்க்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது.

புயல் எச்சரிக்கை கூண்டு

கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

பாம்பன், தூத்துக்குடி, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் நான்காம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு