பாமகவில் உட்சக்கட்ட மோதல்: அன்புமணியை நீக்கிய ராமதாஸ், பதிலடி கொடுத்த கே. பாலு

பட மூலாதாரம், PMK
பாமகவிலிருந்து அன்புமணி நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்காத நிலையில், அவர் நீக்கப்படுவதாக அறிவித்தார். ஆனால், அன்புமணியை கட்சியிலிருந்து நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று அன்புமணி தரப்பில் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். பொதுக்குழு தீர்மானத்தின் படியும், தேர்தல் ஆணைய உத்தரவின் படியும் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியே கட்சியின் தலைவர் என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறினார்.
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை சுமத்தி அதற்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அவரிடமிருந்து விளக்கம் கேட்டிருந்தது. ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவருக்கு பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அன்புமணி எந்த பதிலும் அளிக்காத நிலையில், மீண்டும் அவருக்கு பதிலளிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால் அன்புமணியிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் இன்று காலை அறிவித்திருந்தார்.

பட மூலாதாரம், PMK
"கட்சி விரோத நடவடிக்கை உள்பட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதில் அளிக்க வழங்கிய அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு இருமுறை அவகாசம் அளித்தும் அன்புமணி பதில் அளிக்கவில்லை. பதில் அளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். அன்புமணி மீதான அனைத்து குற்றச்சாட்டுகள் உண்மையானது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பாமக தொடங்கியதில் இருந்து இதுவரை எவரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கையில் அன்புமணி ஈடுபட்டுள்ளார். அரசியல்வாதி என்பதற்கு தகுதியற்றவர் அன்புமணி. ஆகவே பாமக செயல்தலைவர் உட்பட அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கம் செய்கிறோம். அன்புமணியுடன் பாமகவைச் சேர்ந்த யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. அன்புமணியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் பாமகவினரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி நீக்கப்படுவதால் கட்சிக்கு பின்னடைவா என்று சிலர் கேட்கின்றனர். பயிரிடும் போது களைகள் வரும், அதை அகற்றிட வேண்டும், இப்போது களை நீக்கப்பட்டுள்ளது என்றும் ராமதாஸ் பேசினார்.
அன்புமணி சில தொண்டர்களுடன் தனிக்கட்சி போன்று செயல்படுவதாகவும், அவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னிக்க தயாராக இருப்பதாக ராமதாஸ் கூறினார். "அவர்கள் யார் என்று சொல்ல இந்நேரத்தில் தேவை இல்லை. அன்புமணியோடு இருந்தால் நன்மைகள் இருக்கும் என்று நினைத்து அவருடன் இருக்கலாம். அவர்களும் என்னோடு இருந்தவர்கள் தான், நான் இல்லாமல் அவர்கள் வளர்ந்திருக்க முடியாது. மூத்த தலைவர்கள் சிலர் அன்புமணிக்கு அறிவுரை சொன்ன போது, அவர் எதையும் கேட்காமல், மதிக்காமல் போனார். பழ கருப்பையா கூட தந்தையிடம் மகன் தோற்பது, தோல்வி அல்ல என்று கூறியிருக்கிறார்." என்று ராமதாஸ் பேசினார்.
'அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை'
அன்புமணி ராமதாஸை பாமகவிலிருந்து நீக்க, ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று, கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாலு, அன்புமணியை நீக்குவதாக கூறுவது கட்சி விதிகளுக்கு விரோதமானது என்று கூறினார்.
அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் இன்று காலை விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தார். அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் பதில் தருவதாக கூறி பாலு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, " பாமக விதிகளின் படி பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், செயலாளருக்கே நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது. கட்சியின் நிறுவனருக்கு அதிகாரம் இல்லை. இன்றைய அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது. கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வருகிறார். ஆகஸ்ட் 9ம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. அதில் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் பொறுப்புகள் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. அது ஒரு மனதாக பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினோம். அதை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக் காலத்தை பொதுக்குழு தீர்மானங்களின் படி நீட்டித்து அறிவித்தது. எனவே, தலைவராக அன்புமணி ராமதாஸ், பொருளாளராக திலகபாமா, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன் தொடர்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
எனவே கட்சி நிறுவனரின் இன்றைய அறிவிப்பு செல்லாது,ராமதாஸின் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது என்றும் பாலு தெரிவித்தார். "கட்சியின் நிறுவனராக ராமதாஸ் தொடர்கிறார். ஆனால் வேறு பொறுப்புகளில் யாரேனும் நியமிக்கப்பட்டதாக அறிவிப்புகள் வந்தால், அந்த தகவல்களை பாமக நிர்வாகிகள் பகிர வேண்டாம்." என்றும் அவர் வலியுறுத்தினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












