மிக்ஜாம் புயல்: சென்னையில் மழை நின்றது, பல இடங்களில் நீர் தேக்கம் - சமீபத்திய தகவல்கள்

மிக்ஜாம் புயல், சென்னை மழை

சென்னையில் மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) தொடங்கி நேற்று முழுதும் (டிசம்பர் 4) பெய்த பெரும் மழை காரணமாக நகரத்தில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின.

இதனால், மாநகர் முழுதும் போக்குவரத்துச் சேவைகள் ஸ்தம்பித்தன. பல இடங்களில் மின்சாரம் இல்லாமலும், தொலைதொடர்பு இணைப்புகள் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டனர்.

பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் குடியிருப்பு வளாகங்களுக்குள்ளும் நீர் புகுந்ததாலும் மக்கள் சிரமத்திற்குள்ளாயினர்

இந்நிலையில், இன்று (டிசம்பர் 5) சென்னையில் மழை நின்றிருக்கிறது.

ஆனாலும் நகரின் பல இடங்களிலும் நீர் தேங்கி நிற்கிறது.

பிபிசி செய்தியாளர்கள் களத்திலிருந்து அளிக்கும் தகவல்களின்படி, பல இடங்களில் வீடுகளிலும் குடியிருப்பு வளாகங்களிலும் நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (புதன்கிழமை, டிசம்பர் 6) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மிக்ஜாம் புயல், சென்னை மழை
படக்குறிப்பு, திருவான்மியூர், காமராஜர் நகர்

சென்னையில் பல இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீர்

மாநகரில் பல இடங்களில் தேங்கிய நீர் இன்னும் வடியாமல் இருக்கிறது.

களத்தில் இருக்கும் பிபிசி செய்தியளர்கள் அளித்த தகவலின்படி, அடையாறு, கூவம் நதியின் கரைப்பகுதிகள், முகப்பேர், சைதாப்பெட்டை, சூளைமேடு, திருவான்மியூர், ஆகிய பகுதிகளில் நீர் இன்னும் தேங்கியிருக்கிறது.

தி நகர் இருந்து கோடம்பாக்கம் செல்லும் சாலையில் நீர் தேங்கியிருக்கிறது. சைதாப்பேட்டையின் பல பகுதிகளிலும் நீர் தேங்கியிருக்கிறது.

சூளைமேட்டில் கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளில் இருக்கும் சில தெருக்களிலும் வீடுகளிலும் தேங்கியிருக்கிறது. சூளைமேட்டில் விழுந்த மரங்கள் இன்னும் விழுந்துகிடக்கின்றன.

ஆனால், 100அடி சாலை, போரூர்-கிண்டி சாலைம் அண்ணா சாலையின் பல பகுதிகள், ஆகிய சென்னையின் முக்கியச் சாலைகளில் தேங்கியிருந்த நீர் வடிந்திருக்கிறது.

சென்னை பெருநகரக் காவல்துறையின் அறிக்கையின்படி, நீர் தேங்கியுள்ளதால் 17 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டிருக்கின்றன. சூளைமேடு, கோயம்பேடு புதுபாலம், வியாசர்பாடி, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகியவையும் இதில் அடக்கம்.

மிக்ஜாம் புயல், சென்னை மழை
படக்குறிப்பு, சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலம்

பலி 8 ஆக உயர்வு

மழை தொடர்பான சம்பவங்களில் நேற்று 5 பேர் இறந்திருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இதில் ஒருவர் மின்சாரம் தாக்கியும், ஒருவர் மரம் விழுந்ததாலும், ஒருவர் சுவர் இடிந்து விழுந்ததாலும் இறந்திருக்கின்றனர், என்று சென்னை பெருநகரக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

சீர்செய்யப்பட்டு வரும் மின் இணைப்புகள்

மழையால் நேற்று சென்னை முழுதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மின் இணைப்புகளை சரிசெய்யும் பணி நடந்து வருவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, அண்ணா சாலை, அண்ணா நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, செயிண்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய பகுதிகள் உட்படப் பல பகுதிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விமான நிலையம் திறப்பு

சென்னை விமான நிலையத்தில் நீர் தேங்கியிருந்ததால் விமானச் சேவைகள் நேற்று நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று சேவைகளுக்காக விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)