வெளியீட்டு சிக்கலில் சிக்கிய 4 விஜய் திரைப்படங்கள் - பிரச்னைகள் எப்படி தீர்க்கப்பட்டன?

பட மூலாதாரம், KVN PRODUCTIONS
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கடைசி திரைப்படமாகக் கருதப்படும் 'ஜன நாயகன்' திரைப்படம், தணிக்கை தொடர்பான சிக்கல்களால் வெளியாகும் தேதி தள்ளிப் போடப்பட்டுள்ளது. இதுபோல, இதற்கு முன் வெளியாவதில் சிக்கல்களைச் சந்தித்த விஜயின் திரைப்படங்கள் எவை? என்ன காரணம்?
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருந்த 'ஜன நாயகன்' திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சில திரையரங்குகளில் முன்பதிவுகளும் துவங்கப்பட்டன.
ஆனால், இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது.
இந்த வழக்கில் நாளை (ஜனவரி 9) தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், ஜன நாயகன் படத்தின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டு இருப்பதாக படத்தைத் தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் ஜனவரி 7ஆம் தேதியன்று இரவில் அறிவித்தது.
விஜய் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் வெளியீட்டின்போது சிக்கலைச் சந்திப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாகவும் அவரது படங்கள் பல்வேறு காரணங்களால் சிக்கலைச் சந்தித்திருக்கின்றன.
1. தலைவா (2013)

பட மூலாதாரம், X/Actor Vijay
ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'தலைவா'. இந்தப் படத்தில் மும்பையின் 'டான்' ஆன தனது தனது தந்தை இறந்த பிறகு அவரது இடத்தை 'தலைவா' என்ற பட்டத்துடன் ஏற்றுக்கொள்வார் விஜய். இதற்குப் பிறகு மும்பையில் அமைதி திரும்பச் செய்ய, முயற்சிகளை மேற்கொள்வார் என்பதுதான் கதை.
இந்தப் படத்தின் தலைப்பின் கீழே 'Time to Lead' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதுதான் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இப்படி ஒரு வாசகம் இடம்பெற்றிருந்ததை அப்போதைய ஆளும் கட்சி ரசிக்கவில்லை என்று சொல்லப்பட்டது.
இந்தப் படத்தை 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்த பல திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு, புதுச்சேரியில் அறிவித்த தேதியில் 'தலைவா' வெளியாகவில்லை. பிற இடங்களில் படம் வெளியானது.
இதற்குப் பிறகு விஜய் தனது தரப்பை விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், "தலைவா திரைப்படம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தமிழகத்தில் வெளியாகவில்லை. வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பாக, படத்தை வெளியிட்டால் பிரச்னை வரும் என அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல்கள் வந்தன."
"அதனால்தான் இந்தத் தாமதம். கோலிவுட்டே கொஞ்சம் ஆடிப் போய்தான் இருக்கிறோம், அதிர்ச்சியில் இருக்கிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். கூடிய சீக்கிரம் எங்களைச் சந்திப்பார்கள் என நம்புகிறோம்" என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் இந்தப் படத்தின் திருட்டு விசிடிகளும் சென்னை, சேலம் போன்ற நகரங்களில் வெளியாகின. தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தலைப்புக்குக் கீழே இருந்த 'Time to Lead' என்ற வாசகம் நீக்கப்பட்டது. இதையடுத்து, ஆகஸ்ட் 20ஆம் தேதி படம் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் வெளியானது.
2. காவலன் (2011)

பட மூலாதாரம், Lakshmi Movie Makers
இயக்குநர் சித்திக் மலையாளத்தில் திலீப், நயன்தாரா ஆகியோரை வைத்து இயக்கிய 'பாடி கார்ட்' திரைப்படம் தமிழில் 'காவலன்' என்ற பெயரில் ரீ - மேக் செய்யப்பட்டது. அதில் விஜயும் அசினும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் ஆரம்பத்திலிருந்தே பல பிரச்னைகளைச் சந்தித்தது.
'பாடி கார்ட்' படத்தைத் தயாரிக்க நிதியளித்த நிறுவனம், இந்தப் படம் தொடர்பாக ஒரு வழக்கைத் தொடர்ந்தது. அந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து, அடுத்த பிரச்னை எழுந்தது. அதாவது, விஜய் நடித்து அதற்கு முன்பு வெளியான 'சுறா' திரைப்படம் பெரும் தோல்வியைச் சந்தித்ததால், அந்த இழப்பை விஜய் சரிசெய்ய வேண்டுமென திரையரங்க உரிமையாளர்கள் குரல் கொடுத்தனர்.
இதையெல்லாம் தாண்டி, படம் 2010ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு, கிறிஸ்துமஸ் தினத்தன்று படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. இறுதியாக ஜனவரி 14ஆம் தேதி படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது.
ஆனால், பட வெளியீட்டிற்கு ஒத்துழைக்கப் போவதில்லை என திரையரங்க உரிமையாளர்கள் வெளியீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அறிவித்தனர். பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு ஜனவரி 14ஆம் தேதி மதிய காட்சியில் இருந்துதான் படம் திரையிடல் தொடங்கப்பட்டது.
இந்தப் படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட பிரச்னைகளின் பின்னணி நிதி சார்ந்த காரணங்கள்தான் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும் அரசியல் காரணங்களும் இருப்பதாக விஜய் தரப்பு கருதியது.
இந்த விவகாரம் குறித்து வார இதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த விஜய், சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "காவலன் படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையைத் தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போறதுன்னு புரியாமல் எனக்கு பயங்கர ஷாக்" என்றார்.
''காவலன் படம் ரிலீஸ் ஆகக்கூடாதுன்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டுத் தெளிவாகத் திட்டம் போடுறதைப் புரிஞ்சுக்கிட்டேன். பல தரப்புகளில் இருந்து காவலன் படத்துக்குப் பெரிய பிரஷர் கொடுத்தாங்க. வேறு சிலர், தியேட்டர் அதிபர்களையும் ஓப்பனா மிரட்டி இருக்காங்க. 'காவலன்' படத்தைச் சுற்றி அவ்வளவு பிரச்னைகள். அது எல்லாத்தையும் தீர்க்க, கஷ்டப்பட்டுப் போராடி பொங்கல் ரிலீஸ் ஏற்பாடு செய்தோம்'' என்று குறிப்பிட்டார் விஜய்
3. புலி (2015)

பட மூலாதாரம், X/Actor Vijay
சிம்பு தேவனின் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் புலி. இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதற்கு முந்தைய தினம், அதாவது செப்டம்பர் 30ஆம் தேதி விஜயின் அலுவலகம், தயாரிப்பாளர் பி.டி. செல்வக்குமாரின் வீடு, அலுவலகம், மற்றொரு தயாரிப்பாளர் சிபுதமீன் என்பவரின் வீடு, தியாகராய நகரில் இருந்த ஃபைனான்சியர் ஒருவரின் அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரி சோதனைகள் நடைபெற்றன. அடுத்த நாள் அதிகாலையில் படம் வெளியாவதற்கு முன்பாக சில நிதி தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியிருந்தது.
ஆனால், முந்தைய நாள் சோதனைகள் நடந்ததால் அந்த நிதி சிக்கல்கள் தீர்க்கப்படவில்லை. இதனால் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், விஜய் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி, நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பேற்றனர். இருந்தபோதும் அதிகாலை காட்சிகளும் சிறப்புக் காட்சிகளும் ரத்து செயய்ப்பட்டன.
பெரும்பாலான நகரங்களில் படம் காலை 10.30 மணிக்கு வெளியானது. கோயம்புத்தூர் போன்ற சில இடங்களில் மதியம் காட்சியில் இருந்து திரைப்படம் வெளியானது.
4. தெறி (2016)

பட மூலாதாரம், X/Actor Vijay
அட்லீயின் இயக்கத்தில் விஜய், சமந்தா ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 'தெறி'. இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது.
ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்தப் படம் வெளியாகவில்லை. திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் இடையிலான பிரச்னையே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. திரையரங்க உரிமையாளர்கள் குறைந்தபட்ச தொகையைக் கொடுத்து படத்தை வாங்க மறுத்தனர்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய காலகட்டம் என்பதால், செங்கல்பட்டு விநியோக வரம்புக்குள் இருந்த சில திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கப்படுவது குறித்து சோதனைகள் நடந்ததாகவும் கூறப்பட்டது.
இதன் காரணமாகவும் திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வாங்கத் தயங்கினர். இந்தப் பிரச்னைகள் அனைத்தையும் பேசித் தீர்க்க சில நாட்கள் ஆயின. முடிவில் ஏப்ரல் 29ஆம் தேதி செங்கல்பட்டு வட்டாரத்தில் படம் வெளியானது.
இந்த நான்கு படங்கள் தவிர விஜயின் நடிப்பில் வெளியான கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியீட்டிற்குப் பிறகு சில பிரச்னைகளைச் சந்தித்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












