சீனாவின் கே-விசா இந்தியர்களுக்கு ஹெச்-1பி விசாவுக்கு மாற்றாக இருக்குமா?

1990 ஆம் ஆண்டு அறிமுகமான ஹெச்-1பி விசா பெரும்பாலும் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணிதத் துறைகளில் திறமையான நிபுணர்களுக்கு வழங்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா, தொழில் வல்லுநர்களுக்கான ஹெச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது, இது சீனாவின் கே-விசா மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.
    • எழுதியவர், தீபக் மண்டல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அமெரிக்கா ஹெச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர் (சுமார் ரூ.88 லட்சம்) ஆக உயர்த்தியுள்ள நிலையில், சீனாவின் புதிய கே -விசா மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

1990-ஆம் ஆண்டு அறிமுகமான ஹெச்-1பி விசா பெரும்பாலும் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கணிதத் துறைகளில் திறமையான நிபுணர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதில் அதிகமாக இந்தியர்களுக்கே விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் சீனக் குடிமக்கள் உள்ளனர்.

2025-ஆம் ஆண்டு ஆகஸ்டில், உலகின் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களை ஈர்க்க சீனா கே-விசாவை அறிவித்தது.

சீன அரசு செய்தி நிறுவனம் ஷின்வா தெரிவித்ததன்படி, இந்த திட்டம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்.

அமெரிக்காவின் புதிய விசா கொள்கை குறித்து சீனா கருத்து தெரிவிக்கப் போவதில்லை என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாக நியூஸ்வீக் கூறுகிறது. ஆனால் சீனா உலகெங்கிலும் உள்ள சிறந்த திறமையாளர்களை வரவேற்கிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியது.

திறமையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சீனாவிற்கு வந்து பணிபுரிய ஊக்குவிப்பதற்காக கே- விசா தொடங்கப்பட்டது.

கே - விசாவின் அம்சங்கள்

கே- விசா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திறமையான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சீனாவிற்கு வந்து பணிபுரிய ஊக்குவிப்பதற்காக கே- விசா தொடங்கப்பட்டது.

சீனாவில் தற்போதுள்ள 12 வகையான விசாக்களைப் போன்று இல்லாமல், கே-விசாவில் வருபவர்கள் நாட்டிற்குள் நுழைதல், விசா செல்லுபடியாகும் காலம் மற்றும் அங்கு தங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் கூடுதல் வசதிகளைப் பெறுவார்கள் என்று செய்தி நிறுவனமான ஷின்வா தெரிவித்துள்ளது .

கே-விசாவில் சீனாவிற்கு வருபவர்கள் கல்வி, கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பணியாற்றவும், தொழில்கள் மற்றும் வணிகங்களைத் தொடங்கவும் முடியும்.

கே-விசாவின் மிக முக்கியமான நன்மை என்னவென்றால், விண்ணப்பதாரர்கள் அதைப் பெறுவதற்கு அவர்களின் சீன முதலாளி அல்லது நிறுவனத்திடமிருந்து அழைப்பை பெறத் தேவையில்லை. அதேபோல் விசா வழங்கும் செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய பட்டதாரிகள், சுயாதீன ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு கே- விசா மிகவும் வசதியானது என்று கூறப்படுகிறது.

இந்த விசாவிற்கு அவர்கள் சீனாவில் வேலை செய்ய வேண்டும் என்ற தேவையில்லை. அவர்கள் அங்கு சென்றும் வேலை தேடலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கே -விசா என்பது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்காக 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சீனாவின் ஆர் விசாவின் நீட்டிப்பாகக் கருதப்படுகின்றது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய நிபுணர்களால் சீனா நிறைய பயனடையக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம் அல்லது ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதத்தில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட பட்டம் பெற்ற வெளிநாட்டு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் கற்பிக்கும் அல்லது ஆராய்ச்சி செய்யும் நிபுணர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கே- விசாவிற்கு வயது, கல்வித்தகுதி மற்றும் அனுபவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கே -விசா என்பது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதற்காக 2013-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சீனாவின் ஆர் விசாவின் நீட்டிப்பாகக் கருதப்படுகின்றது.

அமெரிக்க அரசாங்கத்தின் ஹெச்-1பி விசா கட்டண உயர்வால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், ஏனெனில் இவை இந்தியப் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வழங்கப்பட்டுள்ளன.

சமீபத்திய தரவுகளின்படி, 71 சதவீத விசாக்கள் இந்திய குடிமக்களுக்கும், அதைத் தொடர்ந்து 11.7 சதவீதம் சீன குடிமக்களுக்கும் வழங்கப்பட்டன.

இப்போது, ​​அமெரிக்கா அதன் தொழில்நுட்பத் துறை விதிமுறைகளை கடுமையாக்கிய பிறகு, சீனா இந்திய பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விருப்பமான இடமாக மாறக்கூடும்.

சமீபத்திய ஆண்டுகளில், சீனா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்காவிற்கு சவால்விடத் தயாராகி வருகிறது.

சீனாவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய சக்தியாக மாற விரும்புகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பம், விண்வெளிப் பயணங்கள், உலோக தொழில்நுட்பம், ஐடி துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சீனா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது.

இந்தியப் பொறியாளர்கள் இதன் மூலம் பயனடையலாம். அதேபோல், இந்தியப் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் சீனாவும் பயனடையலாம்.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் தற்போது பணிபுரியும் பொறியாளர்கள் சீனாவுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் மேம்படுவதால், இந்தியர்கள் சீனாவிற்கு பயணம் செய்வது எளிதாகிவிடும். இது இந்திய நிபுணர்களுக்குப் பயனளிக்கும்.

இந்தியப் பொறியாளர்களுக்கான நன்மைகள்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகளுக்கான மையத்தின் இணைப் பேராசிரியர் அரவிந்த் யெலாரி கூறுகையில், "ஷாங்காய் மற்றும் ஷென்சென் உள்ளிட்ட பல மாகாணங்களில் சீனா உயர் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்கியுள்ளது. இவற்றில் சீனா அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. 2006-2007 முதல், சீன அரசாங்கம் இந்திய ஐஐடிகளில் இருந்து பெரிய அளவில் பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறது" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவில் முக்கிய பொறியியல் துறையில் அதிக எண்ணிக்கையிலான பொறியாளர்கள் உள்ளனர். இதில் ஒரு சதவீதம் சீனாவுக்குச் சென்றால் கூட, அவர்கள் மேலதிக முன்னிலைப் பெறுவார்கள். சீன நிறுவனங்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் புதுமைகளுக்காக தங்கள் அரசாங்கத்திடமிருந்து மலிவான கடன்களைப் பெறுகின்றன, ஆனால் அவற்றின் செயல்திறன் மோசமாக உள்ளது. எனவே இந்திய பொறியாளர்கள் இந்த நெருக்கடியிலிருந்து அவர்களை மீட்க முடியும்" என்று குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"சீனா மட்டுமல்ல, தாய்வானும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அதன் வாய்ப்புகளைத் திறந்துவிட்டது," என்கிறார் யெலாரி.

"எனவே ஹெச்-1பி விசாக்கள் கிடைக்காதவர்கள் தாய்வானுக்குச் செல்லலாம். விசா கட்டண உயர்வு அமெரிக்காவைப் பாதிக்கும் மற்றும் வளர்ந்து வரும் ஆசிய பொருளாதாரங்களுக்கு பயனளிக்கும்."

"இது சீனாவிற்கு ஒரு வாய்ப்பு," என்றும் யெலாரி கூறுகிறார்.

"அதனால்தான் அவர்கள் கே-விசாவை வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். உலகின் சிறந்த திறமையாளர்களுக்கு சீனா ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது என்று அவர்கள் பலமுறை கூறி வருகின்றனர்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு