திருச்செங்கோடு: 10 வயது சிறுமி சத்தம் போட்டதால் ஐ.டி. ஊழியர் கழுத்தை அறுத்தாரா? என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)
திருச்செங்கோட்டில் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கொலை செய்ய முயன்ற ஐடி நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியைக் காக்க வந்த இருவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், பத்து வயது சிறுமி ஏன் கத்தியால் தாக்கப்பட்டார்?
சிறுமியை கொலை செய்ய முயற்சி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கட்டட வேலை செய்து தினக்கூலியாக பிழைப்பு நடத்தி வருபவர் பிரபு. இவரது 10 வயது மகள் தனது வீட்டு அருகே உள்ள சம்பூரணம் என்பவரின் வீட்டில் பள்ளி விடுமுறை என்பதால் விளையாடிக் கொண்டிருந்தார்.
அங்கு சம்பூரணத்தின் இளைய மகன் கலைக்கோவனின் குழந்தைகள் துபாயில் இருந்து வந்திருந்ததால், அவர்கள் கொண்டு வந்த லேப்டாப்பில் சிறுமியும் இணைந்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது தனது அறையை விட்டு வெளியே வந்த தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரான செந்தில்குமார், திடீரென சிறுமியின் கழுத்தை அறுத்துக் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் செந்தில்குமாரைத் தடுக்க முயன்றபோது, அவர்கள் மீதும் செந்தில்குமார் கத்தியால் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தைக் கண்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
ஐடி ஊழியர் கத்திக்கொண்டு சிறுமியின் கழுத்தை அறுக்க முயற்சி செய்ததில், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உயர் சிகிச்சைக்காக அந்தச் சிறுமி தற்போது சேலத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி தாக்கப்படும்போது காக்க வந்த வந்த தங்கராசு, முத்துவேல் ஆகியோர் இருவரும் வெட்டுக் காயங்களுடன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறுமியைக் கொலை செய்த முயற்சி செய்ததாக செந்தில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது?

கொலை முயற்சிக்கு ஆளான சிறுமியின் தந்தை பிரபு ஒரு கட்டடத் தொழிலாளி. சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள வீட்டில் குடியிருக்கிறார். தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது, ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதாக, உடனடியாக சம்பூரணத்தின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு ஒரு குழந்தையின் உடல் துணியால் மூடப்பட்டு இருந்ததைப் பார்த்தாகக் கூறுகிறார் பிரபு.
”சத்தம் கேட்டு சம்பூரணத்தின் வீட்டை எட்டிப் பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் ஒரு சிறுமி இறந்து விட்டதாகக் கருதி துணியைப் போர்த்தியபடி வைக்கப்பட்டு இருந்தது. அது என்னுடைய குழந்தை என்று நான் நினைக்கவில்லை. என் சகோதரர் வந்து அது என்னுடைய குழந்தை என்று சொன்னார். தன்னுடைய குழந்தை வெட்டப்பட்டதைத் தெரிந்த கொண்டவுடன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிளம்ப முயன்றேன்."
அப்போது செந்தில் குமார் தன்னையும் வெட்ட முயற்சி செய்ததாகவும், வீட்டின் மதில் சுவரில் ஏறிக் குதித்து வேகமாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் அன்று நடந்ததை பிரபு விவரிக்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
’மனநோயாளி என சந்தேகம்’

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள செந்தில் குமாரை காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொலை முயற்சிக்காகக் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் குமார், ஒரு மன நோயாளி என்று கூறி காவல்துறையினர் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கப் பார்ப்பதாகவும், சிறுமி தாக்குதலுக்கு உள்ளானபோது துணியால் மூடி வைத்து உடந்தையாக இருந்த இளைஞரின் தாய் சம்பூரணத்தையும் கைது செய்ய வேண்டும் என்றும் சாலை மறியலில் ஈடுபட்ட சிறுமியின் உறவினர் தெரிவித்தனர்.
“செந்தில்குமார் ஒரு மன நோயாளி என்றால் எப்படி ஒரு ஐ.டி. நிறுவனத்தில் லட்சக்கணக்கில் அவர் சம்பளம் வாங்க முடியும்” என்று சிறுமியின் உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், ஆன்லைனில் ஆர்டர் செய்து செந்தில் குமார் கத்தியை வாங்கியது குறித்தும், லேப்டாப்பில் செந்திலுடைய சகோதரரின் குழந்தைகளுடன் சிறுமி விளையாடிய நிலையில், சிறுமி மட்டும் எப்படி கத்திக்கு இலக்கானார் என்றும் சிறுமியின் தந்தை சந்தேகம் தெரிவித்தார்.
மேலும் பாலியல்ரீதியாகத் தனது மகளிடம் அத்துமீற முயற்சி செய்தபோது தாக்கினாரா என்பதையும் விசாரிக்க வேண்டுமென சிறுமியின் தந்தை பிரபு கோரிக்கை வைத்தார்.
காவல்துறை என்ன சொல்கிறது?
இந்தச் சம்பவம் தொடர்பாக செந்தில் குமார் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய காவலர் மைதிலி, பாலியல் ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் இந்தக் கொலை முயற்சி நடந்ததாக விசாரணையில் ஏதும் தெரியவில்லை என்றார்.
வழக்கு விசாரணை காவல் நிலையத்தில் நடந்தபோது, சாலையில் சென்ற வாகனங்கள் ஒலி(ஹாரன்) எழுப்பியபோது, அந்தச் சத்தம் கேட்டால் தனக்கு டென்ஷன் ஆவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் குமார் காவலர்களிடம் கூறியதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் வழக்கின் விசாரணை அதிகாரியான தீபா.

சத்தம் கேட்டால் தனக்கு அதீத கோபம் வரும் என்று செந்தில் குமார் கூறியதை அடுத்து, அவரது உடல்நிலை குறித்து அறிய சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தனக்கு சத்தம் கேட்டால் அது பிரச்னை என்று வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட நபரே எங்களிடம் கூறினார். ஆனால் மருத்துவரீதியாக அவரது கூற்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மனச் சிதைவு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அது தொடர்பாக அவர் பணியாற்றிய நிறுவனத்தில் உள்ள சக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளோம்.”
வீட்டில் விளையாடிய குழந்தைகள் எழுப்பிய சத்தத்தின் காரணமாக சிறுமியைக் கத்தியால் செந்தில் வெட்ட முயன்றாரா என எழுப்பிய கேள்விக்கு திருச்செங்கோடு சரக துணை காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன் பிபிசிக்கு பதில் அளித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கு மாயக்குரல் (Auditory hallucinations) கேட்கும் பிரச்னை இருப்பதாக விசாரணையின் போது எங்களிடம் கூறினார். தன்னியல்பான இந்தச் சத்தம் கேட்கும்போது கோபம் அதிகமாக வரும் என்றும், இதைத் தடுக்க சத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஹெட்போனை (Sound Muffler Headphones) பயன்படுத்தியதாகவும் இமயவரம்பன் தெரிவித்தார்.
“இது குற்றம் சாட்டப்பட்டவரின் விளக்கம் மட்டுமே. இதை அடிப்படையாக வைத்து வழக்கு விசாரணை நடக்காது. மருத்துவப் பரிசோதனை முடிவுகள் முழுமையாகக் கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும்,” என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய டிஎஸ்பி இமயவரம்பன், சிறுமிகள் சோபாவில் அமர்ந்து சத்தம் போட்டு விளையாடியது இவருக்குத் தொந்தரவாகி கொலை செய்யத் தூண்டப்பட்டாரா என்பது இன்னும் தெரியவில்லை. போதைப் பழக்கத்தால் இந்தக் குற்றம் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள செந்தில் குமாரின் தந்தையும் தன்னை யாரோ கொல்ல வருகிறார்கள் என்று கூறி அடிக்கடி வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்வார் என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சத்தம் கேட்டால் கோபம் வருமா?

சத்தம் கேட்டு சமநிலையை இழப்பது தொடர்பாகவும், கோபம் எழுவது தொடர்பாகவும் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் பிபிசி தமிழுக்கு விளக்கமளித்தார்.
பொதுவாக எந்தவொரு வழக்காக இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி தப்பிக் கொள்ளும் வழக்குகள் ஏற்கெனவே நிறைய வந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்துப் பேசிய உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த், "Schizophrenia என்ற மனச்சிதைவு நோய் ஏற்பட்டால் ஆடிட்டரி ஹாலுசினேசன் என்ற 'இல்லாத, மாயமான சத்தங்கள்' காதில் கேட்பதாகத் தோன்றலாம். இது போன்ற சத்தங்கள் அவர்களுக்கு உண்மையாகவும், எண்ணத்தை திசை திருப்பும் வகையிலும் இருக்கக்கூடும்" என்றார்.
"ஆழ்ந்த மன அழுத்தம் இருப்பவர்கள் இதை எதிர்கொள்ளலாம். பாரனாய்டு என்ற ஓர் உணர்வு அதாவது 'தம்மை யாரோ தாக்க வருகிறார்கள்' என்று பாதுகாப்பற்ற உணர்வு அவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் எதிரியாகத் தோன்ற வைக்கக்கூடும்" என்கிறார் அவர்.
மேலும், "இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்தச் சத்தங்கள் அவர்களுடைய மூளையில் உருவாகிக் கேட்பது. என்னதான் ஹெட்ஃபோன் அணிந்தாலும் இதுபோன்ற சத்தம் அவர்களது காதில் விழுவதைத் தவிர்க்க முடியாது. எனவே இந்த நபர் ஆடிட்டரி ஹாலுசினேஷனுக்காக ஹெட்போன் அணிந்திருக்கிறார் எனச் சொல்வது முரணாக உள்ளது" என்றும் விளக்கினார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.
மற்றொரு வகையில் சவுண்ட் அலர்ஜி, அதாவது சத்தங்களுக்கு எரிச்சலடைவது என்ற தொந்தரவால் ஹைப்பர் சென்சிடிவ் என்ற அதீத உணர்திறன் பிரச்னை உள்ளவர்களும் உண்டு எனக் கூறும் அவர், ஓசிடி எனப்படும் Obsessive Compulsive Disorder என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
இவை இரண்டுமே வெவ்வேறு. அதே நேரம் "மன வியாதிகளைக் கேடயமாகப் பயன்படுத்தி தண்டனையில் இருந்து தப்ப நினைப்பவர்கள், அது பொய்யாக இருப்பின் போலீசார் விசாரணையில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே உண்மை நிலவரம் தெரிய வரும்," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












