வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்கள் பிபிசியிடம் கூறியது என்ன? அன்றிரவு என்ன நடந்தது?
பெரும் வெள்ளமும் நிலச்சரிவும் தன்னுடைய ஊரையே அழித்துவிட்ட ஒரு மழையிரவில், கையில் செல்போனை வைத்துக் கொண்டு ஒவ்வொருவரிடமும் சென்று, தனது அண்ணன் மகளை அடையாளம் காட்டுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர். செவ்வாய்க்கிழமை இரவு வலிமிக்கதாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
சூரல்மலை, முண்டகை, மேப்பாடியில் ஒவ்வொருவரும் தன்னுடைய, காணாமல் போன உறவுகளைத் தேடித் திரிந்த வண்ணம் செய்வதறியாது திகைத்துக் கிடந்தனர். அதில் இவரும் ஒருவர். அவர் காட்டிய செல்போன் புகைப்படத்தில் இருப்பவர் அனிதா, வயது 9.
"இது என் புள்ளைதானே.. என் புள்ளைதானே.. பார்த்துச் சொல்லுங்க" என உடையும் குரலில் செல்போனைக் காட்டிக் கேட்கிறார் அந்தப் பெண்மணி.
அவரது செல்போனில் 9 வயதுச் சிறுமியான அனிதாவின் இரண்டு படங்கள் இருக்கின்றன. ஒன்று உயிரோடு இருக்கும்போது எடுத்தது. மற்றொன்று, நிலச்சிரிவில் சிக்கி உயிரிழந்த கோலத்தில் இருப்பது.
சடலத்தில் தலையின் மேற்பகுதி சிதைந்திருப்பதால், புகைப்படத்தில் இருப்பது தனது அண்ணன் மகளா என உறுதிசெய்ய முடியாமல் தடுமாறுகிறார் அந்த அத்தை. போனில் புகைப்படங்களை வைத்துக்கொண்டு சிறுமியின் உடலைத் தேடும் அவரின் நிராதரவான குரல், யாரையும் உலுக்கிவிடும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



