மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி துறை பறிப்பு

Getty images

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்மிருதி இரானி

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி வசம் இருந்து தகவல் ஒலிபரப்புத் துறை பறிக்கப்பட்டு அத்துறையின் இணை அமைச்சராக இருந்த ராஜ்யவர்தன் சிங் ரத்தோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையைத் தொடர்ந்து இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கட்கிழமை இரவு பிறப்பித்துள்ளதார்.

இதன்படி, மத்திய ஜவுளித்துறை, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகங்களை கவனித்து வந்த ஸ்மிரிதி இரானியிடம் இருந்து தகவல் ஒலிபரப்புத் துறை பறிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்ந்து ஜவுளித் துறை அமைச்சககத்தை கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சராக இனி அத்துறையை கவனிப்பார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தற்போது உடல்நலமின்றி இருப்பதால் அவர் வகித்து வந்த நிதியமைச்சர் பொறுப்பு, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வசம் தாற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை இணை அமைச்சர் பொறுப்பில் இருந்து எஸ்.எஸ். அலுவாலியாவும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து அல்போன்ஸ் கன்னன்தானமும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் பொறுப்பு, எஸ்.எஸ். அலுவாலியாவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: