இலங்கை நெருக்கடி: நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது ஏன்? 'வைரல் போட்டோ' போராட்டக்காரர் கூறுவது என்ன?

- எழுதியவர், எம்.மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
இலங்கையில் அதிகார மையங்களாக விளங்கிய 4 முக்கியமான கட்டடங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில், அதில் முன்வரிசையில் செயல்பட்ட ஒரு போராட்டக்காரர், மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டது.
அந்தப் போராட்டக்காரரின் பெயர் டேனிஸ் அலி. புதன்கிழமையன்று பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட்டதிலும் காலி முகத்திடல் மற்றும் அதிபர் மாளிகையில் போராட்டங்களை முன்னெடுத்ததிலும் முக்கியப் பங்காற்றியவர்.
2019, 2020-ஆம் ஆண்டில் அவரும் நாமல் ராஜபக்ஷவும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் புதன்கிழமை முதல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. நாமல் ராஜபக்ஷவுடன் அவர் தொடர்பில் இருப்பதாக பலர் விமர்சனம் செய்தார்கள்.
நாமல் ராஜபக்ஷ தரப்பிலும் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. டேனிஸ் அலி தம்மை முன்பு தம்மைச் சந்தித்ததாகவும் ஆனால் வன்முறைகளுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் நாமல் ராஜபக்ஷ தரப்பிலான ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பிபிசி தமிழிடம் டேனிஸ் அலி பேசினார். "நாமல் ராஜபக்ஷவைச் சந்தித்தது புகைப்படம் எடுத்துக் கொண்டது எல்லாம் உண்மைதான். அந்தப் புகைப்படங்கள்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன". என்றார் அவர்.
"நான் கால்பந்துடன் தொடர்புடையவன். நாமல் ராஜபக்ஷவுக்கும் கால்பந்தில் ஆர்வம் உண்டு. அவர் அப்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். நான் கால்பந்து தொடர்பான ஊடகம் ஒன்று வைத்திருக்கிறேன். எனது அப்பா, தம்பி ஆகியோர் தேசிய அளவில் விளையாடி இருக்கிறார்கள். நானும் பள்ளி அளவில் கால்பந்து விளையாடி இருக்கிறேன். கால்பந்து தொடர்பான நிகழ்வின்போது விளையாட்டு அமைச்சர் என்ற முறையில் நான் அவரைச் சந்தித்தேன்" என்று டேனிஸ் அலி கூறினார்.
போராட்டக்காரர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று கருதுகிறீர்களா என்று கேட்டபோது, "நான் பிரதமர் அலுவலகத்தில் இருப்பது அவர்களுக்குப் பிரச்னை" என்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்குச் சென்று அதில் மக்களுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புங்கள் என்று கூறினோம். ஆனால் அதைக் கைப்பற்றுவது எங்களது நோக்கமல்ல. அதன் பிறகுதான் எனது புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. என்னை ஒரு தீவிரவாதி போலச் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்" என்றார் டேனிஸ் அலி.
அரசுக் கட்டடங்களை விட்டு வெளியேறிய போராட்டக்காரர்கள்
புதன்கிழமையன்று மிகவும் ஆவேசமாக நடந்த போராட்டங்கள் மறுநாளே சற்றுத் தணிந்திருந்தது. அவசரச் சட்டம், ஊரடங்கு ஆகியவை காரணமாக மக்கள் கூட்டம் குறைந்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, 24 மணி நேரத்துக்கும் மேலாக தங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த பிரதமர் அலுவலக கட்டடத்தை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேறினார்கள். இப்போது அது அரசின் கட்டுப்பாட்டில் சென்றிருக்கிறது.
போராட்டக்காரர்களில் ஒரு தரப்பினர் கட்டடங்களை விட்டு வெளியேறுவதற்கு ஆதரவாக இருந்தாலும் மற்றொரு தரப்பினர் அதை ஏற்கவில்லை. கடைசியாக அரசுக் கட்டடங்களை ஒப்படைப்பது என்ற முடிவுக்கு வந்ததாக டேனிஸ் அலி பிபிசியிடம் தெரிவித்தார்.
"தனிப்பட்ட முறையில் எனக்கு இந்தக் கட்டடத்தை விட்டு வெளியேற விருப்பம் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த முடிவை ஏற்று வெளியேறுகிறோம்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறியபோது பலர் உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினாலும் சிலர் தயக்கத்துடனேயே வெளியேறினார்கள்.
இதே போல் அலரி மாளிகை எனப்படும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதிபர் மாளிகையும் இப்போது அரசின் நிர்வாகத்தின் கீழ் வந்திருக்கிறது.

கைப்பற்றப்பட்ட 4 கட்டடங்களை போராட்டக்காரர்கள் ஒப்படைந்திருந்தாலும், காலி முகத் திடல் பகுதியில் இருக்கும் அதிபரின் அலுவலகத்தை மட்டும் இப்போது ஒப்படைப்பதாக இல்லை என்று போராட்டகாரர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
முக்கிய இலக்கான கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பது நடந்துவிட்டது. இன்னும் அவர்களுக்குப் பல கோரிக்கைகள் உண்டு. அதற்காக காலி முகத்திடல் பகுதியில் போராட்டம் வெல்லட்டும் என்ற முழக்கங்கள் அதே உற்சாகத்துடனும் புதிய கொண்டாட்டத்துடனும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












