இலங்கை: ஜனாதிபதி மாளிகையில் பணம் - காவல்துறையிடம் திருப்பி கொடுத்த போராட்டக்காரர்கள்

நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து கோடி கணக்கான ரூபாயை பொதுமக்கள் கையகப்படுத்தியுள்ளதாக கொழும்பு போலிஸ் பொறுப்பு அதிகாரிக்கு கிடைத்த தகவலையடுத்து கோட்டை போலிஸ் பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மாளிக்கைக்கு சென்ற அந்த பணத்திற்கு பொறுப்பேற்றுள்ளனர்.

பொதுமக்களால் இந்த பணம் எடுக்கப்பட்டு இது தொடர்பில் விசேட அதிரடிப் படையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் ஊடக பிரிவுக்கு பொறுப்பு அதிகாரி அறிவுறுத்தப்பட்ட நிலையில் கோட்டை போலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளிட்டோர் அங்கு சென்று அந்த பணத்தை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் நாளை நீதிமன்றத்திற்கு விடயங்கள் தெளிவுப்படுத்தப்படுத்தப்பட இருக்கின்றன. சுமார் ஒரு கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் பணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் என்ன நடக்கிறது?

இலங்கையில் இரண்டு மாத காலமாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்று வந்தது. பின்பு அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அதன்பின் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார்.

நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரமராக பதவியேற்றார். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நாட்டின் அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோரும் போராட்டம் மீண்டும் தீவிரமடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று போராட்டக்காரர்கள் காவல்துறையின் பாதுகாப்பை மீறி ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.

இதுகுறித்த பல்வேறு புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் மக்கள் குளித்து விளையாடினர். சமையலறையில் உள்ள உணவுகளை உண்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. அதுகுறித்துதான் ரணில் விக்ரமசிங்க இன்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: