You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நெருக்கடி: புத்தகங்கள் கொளுத்தப்பட்டது குறித்து ரணில் கண்ணீர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு போராட்டக்காரர்கள் சிலரால் தீக்கு இரையாக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில், கட்சி உறுப்பினர்களிடையே சிறப்பு கூட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அதில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் பேசிய அவர், "சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது குறித்து தான் எந்த விதத்திலும் கவலை கொள்ளவில்லை ஆனால் தாம் படித்த புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டதை எண்ணிதான் கவலைக் கொள்கிறேன்," என தெரிவித்தார்.
தான் மூன்று தலைமுறைகளாக சேர்த்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை மூன்று அறைகளில் சேமித்து வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புத்தகங்கள்தான் நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அவரின் அந்த வீட்டை அவர் ஏற்கனவே கொழும்புவில் உள்ள ராயல் கல்லூரிக்கு எழுதி வைத்துள்ளார்.
இந்த நிலையில்தான் இந்த வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தை சரி செய்வதற்கு தான் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் , ஐஎம்எஃப் கடன் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான இறுதி கட்ட நடவடிக்கை வரை தான் பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோல நெருக்கடியை தீர்ப்பதற்கான நடவடிக்கையின் கடைசி கட்டத்தில்தான் அரசியல் பழிவாங்கல் நிகழ்வாக தனது வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடவில்லை.
அமைதியை கோரும் ராணுவம்
இலங்கை பாதுகாப்புப் படை தலைமைத் தளபதி ஜெனரல் ஷெவேந்திர சில்வா, நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வரும் சூழலில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் என்ன நடக்கிறது?
இலங்கையில் 100 நாட்களை கடந்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்று வந்தது. பின்பு அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அதன்பின் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார்.
நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரமராக பதவியேற்றார். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நாட்டின் அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோரும் போராட்டம் மீண்டும் தீவிரமடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று போராட்டக்காரர்கள் காவல்துறையின் பாதுகாப்பை மீறி ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைந்தனர்.
இதுகுறித்த பல்வேறு புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் மக்கள் குளித்து விளையாடினர். சமையலறையில் உள்ள உணவுகளை உண்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. அதுகுறித்துதான் ரணில் விக்ரமசிங்க இன்று தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்