இலங்கை: பசில் ராஜபக்ஷ எம்பி பதவியில் இருந்து விலகல் - அடுத்த திட்டம் என்ன?

இலங்கை பசில் ரஜாபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாம் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவயில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 9) விலகியிருக்கிறார். தமது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் அவர் வழங்கினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

அதைத்தொடர்ந்து ஆளும் அரசாங்கத்தின் நிதி அமைச்சராக சிறிது காலம் பதவி வகித்தார். அண்மையில் அவர் தமது அமைச்சு பொறுப்பில் இருந்து விலகினார். ஆளும் கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்று வந்த நிலையிலேயே பசில் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகியதாக பேசப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் இப்போது விலகியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதேவேளை, பதவியை ராஜினாமா செய்த பசில், ஊடகவியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அரசியல் பயணம் தொடரும்

பசில் ராஜபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

அப்போது அவர், அரசாங்கத்திலிருந்து விலகினாலும், அரசியலில் தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

''அரசாங்கம் மற்றும் அரசியல் என்பது இரு வேறு விடயங்கள் என்பதை நான் நம்புகின்றேன். அரசாங்கத்திலிருந்து முழுமையாக விலகுவதே இன்றைய தீர்மானத்தின் பிரதான இலக்காகும். இன்று முதல் எந்தவொரு அரசாங்கம் சார்ந்த விடயங்களிலும் நான் தொடர்புப்பட மாட்டேன் என்பதை கூறிக்கொள்கின்றேன். எனினும், அரசியலில் ஈடுபடுவதை நான் நிறுத்த மாட்டேன். என்னுடன் இருந்த எனது கட்சி அங்கத்தவர்களுக்காக அந்த அர்ப்பணிப்பை செய்ய வேண்டும்" என பசில் ராஜபக்ஷ கூறினார்.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதர்களில் ஒருவரே இந்த பசில் ராஜபக்ஷ.

இவர், இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமையையும் பெற்றிருப்பவர்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பசில் இலங்கை பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருந்தார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்த பிறகு, பசில் ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் முயற்சியால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்டது.

இந்த கட்சி உருவாக்கப்பட்டு, குறுகிய காலத்தில் நடத்தப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அந்த கட்சியின் முன்னேற்றத்திற்கு பசில் ராஜபக்ஷவே மூல காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

அதன் பின்னர், மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் ஊடாக இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

கோட்டாபய ஆட்சியில் சட்டத்திருத்தம்

இலங்கை பசில் ராஜபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பசில் ராஜபக்ஷ

இதனாலேயே, இரட்டை பிரஜாவுரிமையை கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர், அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தார்.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவியேற்றத்தை அடுத்து, அரசியலமைப்பில் மற்றுமொரு திருத்தம் ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி, அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு அமைய, இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முடியும் என ஷரத்து மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

இந்த 20வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜயந்த கெட்டகொட தனது நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, தேசிய பட்டியல் ஊடாக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்ததை அடுத்து, அவருக்கு நிதி அமைச்சுப் பொறுப்பை வழங்கினார் ஜனாதிபதி கோட்டாபய.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நிதி அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொண்ட பசில், பொருளாதார ரீதியில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முயற்சித்த போதிலும், பொருளாதார ரீதியில் இலங்கை பாரிய வீழ்ச்சியை நோக்கி நகர ஆரம்பித்தது.

இதையடுத்து, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், அவற்றின் விலை பல மடங்குகளாக அதிகரித்திருந்தது.

தீவிரமான அரசு எதிர்ப்பு போராட்டங்கள்

பசில் ராஜபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தொடங்கிய நேரத்தில், கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நாளுக்கு நாள் அந்த போராட்டங்கள் தீவிரம் அடைந்தன.

நாளடைவில் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் குரல் கொடுத்தனர். இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ நீங்கலாக பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சு பொறுப்புக்களை வகித்த ராஜபக்ஷ குடும்பத்தினர் அடுத்தடுத்து பதவி விலகினர்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் 9ஆம் தேதி காலி முகத்திடலில் ஏற்பட்ட வன்முறை, நாடு தழுவிய வன்முறையாக விரிவடைந்த பிறகு பிரதமர் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலகினார்.

இந்தப் பின்னணியில், ஜூன் 9ஆம் தேதி பசில் ராஜபக்ஷ தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.

பசில் விலகலுக்கு என்ன காரணம்?

பசில் ராஜபக்ஷ
படக்குறிப்பு, அ. நிக்சன், அரசியல் ஆய்வாளர்

தமது குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலேயே பசில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதாக மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான அ.நிக்சன் பிபிசி தமிழிடம் கூறினார். தமது குடும்பம் அரசியலில் தோல்வி அடைந்த குடும்பமாக வரலாற்றில் பதிவாகக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே பசில் பதவி விலகியிருக்க வேண்டும். கட்சியையும், தமது குடும்ப அரசியலையும் வலுப்படுத்த இனி அவர் முயற்சிக்கக் கூடும் என அவர் கூறுகிறார்.

இதேவேளை, பசில் ஒருபோதும் அரசியலிலிருந்து விலக மாட்டார் என்றும் நிக்சன் தெரிவித்தார்.

''ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பசில் மீள்கட்டி எழுப்பப் போகின்றார். அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடப்போகிறார் என்பது பொய். இனி எப்படியும் வர முடியாது என்பது அவருக்கு தெரியும். எனினும், எதிர்வரும் 10 வருடங்களை இலக்காக கொண்டு அவர் வேலைகளை செய்யலாம். அரசியல் அலுவலகங்களிலுள்ள அதிகாரிகளின் ஊடாக ஊடுறுவ முயற்சிப்பார். ஏனெனில், அரச அலுவலகங்களிலுள்ள பெரும்பாலானோர் அவர்களின் ஆட்கள் என்பதால், அரசு அலுவலகங்களின் ஊடாக அவர் ஊடுருவ முயற்சிக்கலாம். தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்கான திட்டத்தையே அவர் முன்னெடுப்பார் என்பதால் அவர் முழுமையாக அரசியலில் இருந்து வெளியேற மாட்டார்" என்கிறார் நிக்சன்.

காணொளிக் குறிப்பு, ''கையில் ஒரு ரூபாய் வருமானம் கூட இல்ல; பணம் அச்சடிக்க வேண்டும்'' - ரணில் விக்ரமசிங்க

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: