இலங்கை நெருக்கடி: பொது வேலைநிறுத்தத்தால் முடங்கிய சேவைகள் - வீதிகளில் தொடரும் போராட்டம்

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழ்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, நாட்டில் இன்று பல்வேறு துறையினரால் மிகப்பெரிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தலைநகரில் இயங்கி வந்த வணிக நடவடிக்கைகள் மூடப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பிற தொழில்துறையினர் இன்றை வேலைநிறுத்தத்தை மேற்கொண்டு வருகிறார்கள். ஜனாதிபதி மாளிகைக்கு எதிரே உள்ள பிரதான போராட்ட களத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் காணப்படுகிறார்கள்.

அரசு, அரசு சார்பற்ற மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த சுமார் 1,000 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த பணிப் புறக்கணிப்பை நடத்தி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதன்படி போக்குவரத்து, மின்சாரம், கல்வி, துறைமுகம், தபால், சமுர்த்தி, வங்கிகள், அபிவிருத்தி அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் கருத்திற்கு தலை சாய்ப்போம் - அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

"தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும்"

அரசாங்கம் பதவி விலக தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இன்றைய தினம் முதல் கட்டமாக அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

''இன்றைக்கு இலங்கை வரலாற்றிலேயே பெரிய தொழிற்சங்க நடவடிக்கை நடக்கிறது. ஆயிரத்திற்கும் மேல் தொழிற்சங்கங்கள் ஒன்றாக சேர்ந்து நாங்கள் எல்லோரும் கோட்டாபய ராஜபக்ஷ அரசு வெளியேறு என்ற கோஷத்தோடு தான் நாங்கள் போறோம். அது தான் முக்கிய காரணம். இலங்கையில் தற்போது வாழ முடியாத அளவு செலவு அதிகரித்துள்ளது. ஆனால், அரசு அதனுடைய இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கான எல்லா செயற்பாடுகளையும் செய்றாங்க. அதனால், தொழிற்சங்க ஒன்றியம் என்ற வகையில் முழு இலங்கையிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை எல்லோரும் இதில் பங்குப்பற்றியிருக்கின்றார்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்த நடத்தப்படுகின்ற பாரிய தொழிற்சங்க போராட்டம் தான் இது. இந்த போராட்டத்தையும் பார்த்து அரசு ஒரு தீர்மானம் எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதை தடுக்க இயலாது" என்கிறார் ஜோசப் ஸ்டாலின்.

"இது மக்களுக்கான போராட்டம்"

இதற்கிடையே இன்றைய போராட்டம் வெற்றி அளித்துள்ளதா என பிபிசி தமிழ் அவரிடம் வினவியது.

''உண்மையிலேயே வெற்றிகரமாக உள்ளது. கொழும்பு புகையிரத நிலையத்தை பார்த்தால், ஒரு ரயில் கூட இயக்கப்படவில்லை. அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. ஏ.ஜி ஓபிஸ் மூடி. எல்லா இடங்களும் மூடி. நாங்கள் மக்களோடு சேர்ந்து, நாங்கள் இவ்வளவு நாளும் போராடியது வந்து, எங்கட சம்பளத்தை அதிகரிப்பது, எங்கட சேவை பிரச்னைகள் ஆகியவற்றினாலே போராடினோம். ஆனால் இன்று இந்த போராட்டம் மக்களுக்கான போராட்டம். மக்களோடு இணைந்து செல்லும் போராட்டம். இது மக்கள் போராட்டம். கோட்டாபய அரசாங்கம் இந்த தகவலை பார்த்து வெளியேற வேண்டும். இல்லை என்றால், எங்கட போராட்டம் தீவிரமடையும்" என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, தற்போதைய ஆளும் ஆட்சியாளர்களே காரணம் என தெரிவித்து, நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், கொழும்பு - காலி முகத்திடலில் கடந்த 9ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டம் இன்றும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.

இது மாத்திரமன்றி, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கண்டியிலிருந்து ஆரம்பித்த விடுதலைக்கான புரட்சி பேரணி கடந்த 26ம் தேதி கண்டி நகரில் ஆரம்பித்தது.

இந்த பேரணி கொழும்பை நோக்கி இன்று மூன்றாவது நாளாகவும் நடத்தப்பட்டு வருகிறது.

மே மாதம் கடைப்பிடிக்கப்படவுள்ள தொழிலாளர் தினத்தன்று, குறித்த பேரணி கொழும்பு நகரை வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில், இன்று ஆயிரக்கணக்கான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பாரிய பணிப்பகிஷ்கரிப்பொன்றை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொழும்புக்கு இன்று பெரும் எண்ணிக்கையிலானோர் வருகைத் தந்த வண்ணம் உள்ளனர்.

கொழும்பில் இன்று பாரிய போராட்டங்களை நடத்தவும் இன்று ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :