You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நெருக்கடி: சுற்றுலாத் துறையின் நிலை என்ன? போராட்டங்களால் பலவீனமாகிறதா?
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
டாலர் கையிருப்பு குறைந்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, விலைவாசி உயர்ந்துவிட்டதால், இலங்கையில் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் போராட்டங்கள் காரணமாகவே டாலர் வரத்து மேலும் குறையக்கூடும் என்ற அச்சமும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்திருப்பதே இதற்குக் காரணம்.
இலங்கையில் அழகான கடற்கரைகளைப் பார்க்கலாம், வியக்க வைக்கும் சரணலாயங்களில் இயற்கையோடு இயற்கையாக விலங்குகளைக் காணலாம். இங்கு பௌத்த, இந்து மத ஆன்மிகத் தலங்களும் இருக்கின்றன.
அந்நியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டுவருவதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இலங்கையின் சுற்றுலாத்துறை, வெளிநாடு வாழ் தொழிலாளர்கள், ஜவுளி ஆகிய துறைகளுக்கு அடுத்த இடத்தைப் பெற்றிருக்கும் இந்தத் துறை, நாட்டின் மொத்த அந்நியச் செலாவணி வரவில் 13 முதல் 15 சதவிகிதம் வரையிலான பங்களிப்பை வழங்கியிருக்கிறது.
"2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு முடங்கிய சுற்றுலாத்துறை 6 மாதங்களுக்குப் பிறகுதான் படிப்படியாக மீளத் தொடங்கியது. சில மாதங்களில் கொரோனா பொது முடக்கம் வந்ததால், மீண்டும் முடங்கிவிட்டது" என்கிறார், கொழும்பு நகரில் ஹோட்டல்கள் நடத்தும் இந்தியரான வின்சென்ட்.
இலங்கையின் சுற்றுலாத் துறையில் வாகன ஓட்டுநர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உணவகங்களை நடத்துவோர், பயண வழிகாட்டிகள், பயண ஏற்பாட்டாளர்கள் என பல தரப்பினரும் அடங்கியிருக்கின்றனர்.
"இலங்கையில் சுமார் 5 லட்சம் பேர் சுற்றுலாத் துறையில் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் சுற்றுலாத் துறையில் மறைமுகமாக ஈடுபட்டுள்ளோரையும் சேர்த்து மொத்தம் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுத் துறையின் தலைவர் கிர்மார்லி ஃபெர்னாண்டோ.
இலங்கை வரலாற்றிலேயே சுற்றுலா உச்சத்தில் இருந்தது 2018-ஆம் ஆண்டில்தான். மொத்தம் 23 லட்சம் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தார்கள். 4.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நாட்டுக்கு அந்நியச் செலாவணி கிடைத்தது. அடுத்த ஆண்டிலேயே இது 3.6 பில்லியன் டாலர்களாகக் குறைந்துவிட்டது.
2020-ஆம் ஆண்டில் 8 மாதங்கள் சர்வதேச விமான சேவை முடக்கப்பட்டதால், அந்த ஆண்டு வெறும் 5 லட்சம் பேர் மட்டுமே இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார்கள். 2021-ஆம் ஆண்டில் நிலைமை இன்னும் மோசம். கொரோனா அச்சம் காரணமாக இரண்டு லட்சத்துக்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார்கள்.
ஒரு பயணி இலங்கைக்கு வருகை தருவதன் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 170 முதல் 180 அமெரிக்க டாலர்கள் வரை இலங்கைக்கு வருமானம் கிடைப்பதாக கிர்மார்லி ஃபெர்னாண்டோ கூறுகிறார்.
இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள்.
இலங்கைக்கு வரும் சுமார் 46 சதவிகித சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களையே பயன்படுத்துகின்றனர். இதுவும் அந்நியச் செலாவணி வரும் வழியாக இருக்கிறது.
அரசு அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்திருக்கிறது. உதாரணத்துக்கு மார்ச் மாதத்தில் மட்டும் 1.06 லட்சம் பயணிகள் வந்திருக்கிறார்கள். ஆனால் ஏப்ரல் மாதத்தில் இது மீண்டும் குறைந்திருக்கிறது.
"நாட்டில் பிரச்னைகள் வரும்போது முதலில் வீழ்ச்சியடையும் துறையாகவும், கடைசியாக மீண்டுவரும் துறையாகவும் சுற்றுலா இருக்கிறது" என்கிறார் வின்சென்ட்.
இலங்கையில் நிலவும் பல்வேறு வகையான சிக்கல்களும் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களும் உலக அளவில் பயணம் செய்யும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக சுற்றுலாத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் கூறுகிறார்கள்.
மின்வெட்டும், எரிபொருள் பற்றாக்குறையும்தான் முக்கியமான பிரச்னைகளாக முன்வைக்கப்படுகின்றன. மின்வெட்டு காரணமாக தனது ஹோட்டலில் தங்கியிருந்த சுவிட்சர்லாந்து, போலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அறைக்கு வெளியே வந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறுகிறார் கொழும்பு மவுண்ட் பியர்ல் ஹோட்டலின் மேலாளர்.
"இப்போது 3 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கிறது. சிறு ஹோட்டல்களில் ஜெனரேட்டர்கள் இருப்பதில்லை. பெரிய ஹோட்டல்களில் ஜெனரேட்டர்கள் இருந்தாலும் போதுமான டீசல் கிடைப்பதில்லை. மின்சாரம் இல்லாததால் பயணிகள் திரும்பிப் போய்விடுகிறார்கள்"
அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் சுற்றுலாத் துறைகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கிறார்கள்.
சுற்றுலாத் துறையில் இருப்பவர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் ஒன்று, பெட்ரோல், டீசல், எரிவாயுவை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். இரண்டாவது தள்ளிவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும். மூன்றாவது மின்வெட்டை ரத்து செய்ய வேண்டும் என்பவைதான் அவை. கொரோனா காலத்தில் தள்ளிவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு கூடுதல் வட்டி போடப்படுவதாக அவர்கள் குறைகூறுகிறார்கள்.
பொதுவாக இலங்கைக்கு இந்தியாவில் இருந்துதான் அதிகமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். கொழும்பு, கண்டி, வனவிலங்கு சரணாலயங்கள், ராமாயணப் பயணம் போன்றவற்றுக்காக அவர்கள் இலங்கையை நாடுகிறார்கள்.
2018-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் இருந்து 4.24 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். சராசரியாக அவர்கள் 7.4 நாள்கள் இலங்கையில் தங்குகிறார்கள். அவர்கள் மூலம் சுமார் 76.3 கோடி அமெரிக்க டாலர்கள் இலங்கைக்கு வருமானமாகக் கிடைத்திருக்கிறது.
சுற்றுலாத் துறை மீண்டுவிட்டதாகக் கருதப்பட்ட கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து 55 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவை அதிகரித்த பிறகு ஏப்ரல் மாதத்தில் 24-ஆம் தேதி வரை சுமார் 7 ஆயிரம் பேர் மட்டுமே சுற்றுலாவுக்கு வந்திருக்கிறார்கள்.
"ஹோட்டல்களில் மின்சாரம் இல்லை. சாலையில் வாகனங்கள் நிற்கின்றன. உணவகங்கள் எரிவாயு இல்லாததால் மூடப்பட்டிருக்கின்றன. அறைகளில் ஏ.சி. வேலை செய்யவில்லை. எப்படி சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்?" என்று கேட்கிறார் பயண வழிகாட்டியாக இருக்கும் யோகேஷ்.
இந்த மாதத்தில் மட்டும் தன் மூலம் வர வேண்டிய சுற்றுலாப் பயணிகள் 200 பேர் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அவர் கூறுகிறார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ரம்ஜான் தனது தொழிலை முற்றிலுமாக இழந்துவிட்டதாகக் கூறுகிறார்.
"வாகனக் கடன்களுக்கு தவணைகளைத் தள்ளி வைப்பதாகக் கூறினார்கள். ஆனால் அதற்கு வட்டி அதிகமாகப் போட்டு கடன்களைக் கட்டச் சொன்னதால் என்னிடம் இருந்த இரு கார்களையும் விற்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இப்போது ஆட்டோ ஓட்டும் நிலைமைக்கு வந்துவிட்டேன்"
சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டிருப்போரின் கோரிக்கை குறித்து அரசு என்ன செய்கிறது என்ற கேட்டபோது, "கடன் தவணை பற்றி அரசு பரிசீலித்து வருகிறது" என்று கூறினார் சுற்றுலா மேம்பாட்டுத் துறைத் தலைவர் கிமார்லி.
"உண்மையில் சுற்றுலாப் பயணிகள் அச்சப்படத் தேவையில்லை. போக்குவரத்து போன்றவற்றில் சில அசவுகரியங்கள் இருக்கலாம். போராட்டங்கள் அமைதியான முறையில்தான் நடக்கின்றன. அதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" என்கிறார் அவர்.
இலங்கையின் நாணய மதிப்பு குறைந்திருப்பதால் வெளிநாட்டுப் பயணிகள் தங்களது நாணயத்தின் மூலம் சிக்கனமாக இலங்கைப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றும் கிமார்லி கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்