இலங்கை அரசியலில் ராஜபக்ஷே குடும்பம் பெரும் செல்வாக்கை பெற்றது எப்படி?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்துவருகின்றனர். 2005ல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷே குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், மஹிந்தவும் கோட்டாபயவும் ஆட்சியில் நீடிக்கவே செய்கின்றனர். இலங்கையில் இவர்களுடைய செல்வாக்கிற்கு என்ன காரணம், ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் பின்னணி என்ன என்பது குறித்த தொடரின் முதல் பாகம் இது.

ஒரு காலத்தில் மனித உரிமைப் போராளியாக தீவிரமாகச் செயல்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்தபோது பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர். இருந்தபோதும் ராஜபக்ஷே குடும்பத்தினர் இலங்கை அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றனர். முழுமையான பின்னணி.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து, உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தபோது சர்வதேச அளவிலான கவனம் அவர் மீது விழந்தது. அந்தப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டு, யுத்தம் முடிவுக்கு வந்தபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு உரிய செல்வாக்கு, அதிகாரம் ஆகியவற்றையும் தாண்டி ஒரு அரசனுக்குரிய செல்வாக்கோடு வலம்வந்தார் மஹிந்த ராஜபக்ஷ.

மஹிந்த மட்டுமல்லாமல் அவருடைய சகோதரர்கள் சமல் ராஜபக்ஷ, கோட்டாபய, பக்ஷ, மஹிந்தவின் மகன் நாமல் என அவருடைய குடும்பமே மிகப் பெரிய செல்வாக்குக்குரியதாக உயர்ந்தது.

தற்போதைய ராஜபக்ஷ குடும்பத்தின் கதை என்பது மூன்று தலைமுறையாக, தொடர்ந்து அரசியலில் செயல்பட்டு, உச்சத்தை அடைந்த ஒரு குடும்பத்தின் கதை.

இலங்கையின் தென்கோடியில் இருக்கிறது அம்பாந்தோட்டை மாவட்டம். ராஜபக்ஷக்களின் மாவட்டம் என்பதால், இலங்கையிலேயே அரசின் கவனிப்பை அதிகம் பெற்ற மாவட்டமாக இருக்கிறது அம்பாந்தோட்டை. மிகப் பெரிய துறைமுகம், சர்வதேச விமான நிலையம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் என மெகா நகரத்திற்கு உரிய எல்லாம் இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன. சீனாவின் குவாங்ஸு நகரின் சகோதர நகரமாகவும் அம்பாந்தோட்டை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாவட்டத்திலிருக்கும் வீரகட்டிய கிராமமே, ராஜபக்ஷேக்களின் சொந்த ஊர். அந்த ஊருக்குள் நுழையும் அந்நியர் யாருக்கும் அச்ச உணர்வு ஏற்படும். அந்தச் சிறிய ஊருக்குப் பொருந்தாத வகையில் பெரும் எண்ணிக்கையில் காவலர்கள் அந்த கிராமத்தில் தென்படுகிறார்கள். ராஜபக்ஷ குடும்பத்தினரின் வீடு, தோட்டம், அவர்களது பெற்றோரின் நினைவிடம் என எல்லா இடங்களிலும் காவலர்களைப் பார்க்க முடிகிறது.

ஆனால், ராஜபக்ஷே குடும்பத்திலிருந்து முதன் முதலில் ஒருவர் அரசியலில் இறங்கியபோது, இந்தப் பிரதேசமே காடுகளும் வறண்ட வயல்வெளிப் பிரதேசங்களும் கொண்ட பகுதியாக இருந்தது. மக்கள் தொகையும் மிகவும் குறைவு. அதிலும் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் கிராமப்புறங்களிலேயே வசித்துவந்தனர்.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இந்தப் பகுதியைச் சேர்ந்த டான் டேவிட் ராஜபக்ஷ, வீரகெட்டிய கிராமத்தில் ஒரு கிராம அதிகாரியாகப் பணியாற்றினார். அதுதவிர, அவருக்கு உள்ளூர்செல்வாக்கும் இருந்தது. இந்த டான் டேவிட்டின் மகன்தான் டான் மேத்யூ ராஜபக்ஷ. ராஜபக்ஷ குடும்பத்திலேயே முதன்முதலில் அரசியலுக்கு வந்தவர் இவர்தான்.

1936ல் ஸ்டேட் கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் அம்பாந்தோட்டை தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார் டான் மேத்யூ. அந்தப் பகுதியில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த டான் மேத்யூ, 1945-ல் காலமானார். அந்தத் தருணத்தில் அவருடைய மகன்கள் மிகவும் சிறியவர்களாக இருந்ததால், அம்பாந்தோட்டை தொகுதியில் டான் மேத்யூவின் தம்பி டான் ஆல்வின் ராஜபக்ஷே களமிறக்கப்பட்டார்.

மிக எளிதாக அந்தத் தேர்தலில் வென்ற டான் ஆல்வின், 1947ல் அம்பாந்தோட்டையிலிருந்து பிரிக்கப்பட்ட பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இப்படியாக சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்திலேயே இடம்பெற்றார் டான் ஆல்வின்.

1951ல் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா (எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக) பிரிந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைத் துவங்கியபோது, அவருடன் சென்றார் டான் ஆல்வின். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது ராஜாங்க அமைச்சர் பதவி டான் ஆல்வினுக்கு வழங்கப்பட்டது.

பண்டாரநாயக கொல்லப்பட்டவுடன் பதவியேற்ற விஜயானந்த தகநாயக்கவின் அமைச்சரவையில் முழுப் பொறுப்புடன் விவசாயம் மற்றும் நிலங்கள் துறையின் அமைச்சராக அமைச்சராக 1959 செப்டம்பரிலிருந்து 1960 மார்ச்வரை சிறிதுகாலம் பணியாற்றினார்.

இதற்கு பிறகு சிறிது காலத்திற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெலிவத்த தொகுதியின் அமைப்பாளராக இருந்தபடியே அம்பாந்தோட்டையைச் சுற்றி தன் அரசியலைச் சுருக்கிக்கொண்டார் டான் ஆல்வின்.

ஆனால், இந்த காலகட்டத்தில் வீரகெட்டிய கிராமத்தில் செல்வாக்கு சிறப்பாகவே இருந்தது. டான் ஆல்வினுக்கு சாமல், ஜெயந்தி, மஹிந்த, சந்திரா, கோட்டாபய, ப்ரீத்தி, பசில், டட்லி, கந்தானி என ஒன்பது குழந்தைகள்.

இதில் மூன்றாவது குழந்தையான மஹிந்த, மிகப் பெரிய தலைவராக உருவெடுக்கக்கூடும் என அந்தத் தருணத்தில் யாரும் யூகித்திருக்க முடியாது.

வீரகெட்டிய கிராமத்தைச் சேர்ந்த கே.பி. ஜெயசேகர மஹிந்தவின் தீவிர ஆதரவாளர். மனிதருக்கு வயது எழுபதாகிவிட்டது. இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷவுடனான சிறுவயது நாட்களை துல்லியமாக நினைவுகூர்கிறார்.

"அந்த காலகட்டத்தில் நான், மஹிந்த, கோட்டாபய என எல்லோருமே ஒன்றாகத்தான் விளையாடினோம். சைக்கிள் ஓட்டிக்கொண்டு திரிவோம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மகன்கள் என்ற தோற்றமின்றி பழகுவார்கள் மஹிந்தவும் அவரது சகோதரர்களும். எனக்கும் பஷிலுக்கும் ஒரே வயது" என்கிறார் வீரகெட்டியவைச் சேர்ந்த கே.பி. ஜெயசேகர.

1966வாக்கில் மூத்த மகனான சாமல் ராஜபக்ஷ காவல்துறையில் துணை ஆய்வாளராக வேலைக்குச் சேர்ந்தார். இந்த நிலையில், 1967ல் டான் ஆல்வின் ராஜபக்ஷ உடல்நலம் குன்றி இறந்துபோனார். அப்போது மஹிந்த வித்யோதயா பல்கலைக்கழகத்தில் உள்ள நூல்நிலையத்தில் பணியாற்றிவந்தார்.

டான் ஆல்வினின் மறைவுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரை நினைவுகூரும் சடங்கு ஒன்று அவர்களது பூர்வீக வீட்டில் நடந்தது. அந்த நிகழ்வுக்கு வந்தார் சிறிமாவோ பண்டாரநாயக. அப்போது, டான் ஆல்வின் வகித்துவந்த பெலிவத்த தொகுதியின் கட்சி அமைப்பாளர் பொறுப்பை, சாமல் ராஜபக்ஷவுக்குக் கொடுக்க முன்வந்தார் சிறிமாவோ. ஆனால், அவர் அப்போது காவல்துறை பணியில் இருந்ததால், அந்தப் பொறுப்பை மஹிந்தவுக்கு அளிக்கும்படி கேட்டார் அவரது தாயார்.

மஹிந்தவுக்கு அப்போது வெறும் 21 வயதுதான். வயதுக்கு உரிய பொறுப்பாக இருக்குமா என்று யோசித்தாலும், அந்தப் பொறுப்பை அளித்தார் சிறிமாவோ. இது நடந்தது 1968 மே மாதம்.

இதற்குப் பிறகு அரசியலில் மஹிந்த வளர்ச்சி படிப்படியாக இருந்தது என்கிறார் ஜெயசேகர.

"வீரகெட்டிய பகுதி மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முன்வந்து நிற்பார். அதனால், இந்தப் பகுதியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்தது" என்கிறார் ஜெயசேகர.

தொடரின் இரண்டாவது பாகம் நாளை வெளியாகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: