You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இலங்கை இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்களா?" மெளனம் கலைந்த சரத் ஃபொன்சேகா
இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, 40,000 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்னாள் ராணுவ தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா புதிய விளக்கத்தை அளித்திருக்கிறார்.
அந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், இறுதி கட்ட யுத்தம் நடந்த காலகட்டத்தில் சுமார் 5,000 - 6,000 வரையிலான பொதுமக்களே உயிரிழந்திருக்கக்கூடும் என கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட பதுங்கு குழிகளில், பொதுமக்கள் முன்நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அவ்வாறான சூழலிலேயே பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று் அவர் குறிப்பிட்டார்.
பதுங்கு குழிகளில் கேடயமாக நிறுத்தப்பட்டிருந்த பொதுமக்களை தாம் காப்பாற்றியதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் பேசினார்.
இதன்படி, இறுதிக் கட்ட யுத்தம் நடந்தபோது இரு தினங்களில் மாத்திரம், இலங்கை ராணுவம் சுமார் 2,70,000 பொதுமக்களை காப்பாற்றியதாக அவர் விளக்கம் அளித்தார். அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 50,000 பேர் விடுதலைப்புலிகளிடமிருந்து காட்டு வழியாக தப்பி வந்தவர்கள் என்றும் ஃபொன்சேகா கூறினார்.
எஞ்சிய மக்களை யுத்தத்தின் மூலம் தாம் காப்பாற்றியதாகவும் சரத் பொன்சேனா தெரிவித்தார்.
இதேவேளை, இறுதி கட்ட யுத்தம் நடந்த காலத்தில் 35 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருந்ததாகவும், அவர்களில் 23,000 பேரை தமது ராணுவம் கொன்றதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
எஞ்சிய 12 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை தாம் உயிருடன் கைது செய்து, அவர்களுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களை சமூகமயப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் சரத் ஃபொன்சேகா கூறினார்.
இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் உருவாக இடமளிக்க முடியாது என்று கூறிய சரத் ஃபொன்சேகா, பாதுகாப்பு பிரிவுகளை மறுசீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர், கிளைமோர் குண்டொன்றுடன் கைது செய்யப்பட்டதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், விடுதலைப் புலிகளின் நிழல்கள் இன்றும் செயல்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், நாட்டின் பாதுகாப்பு துறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் யுத்தம் இல்லாத போதிலும், ராணுவ கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என சரத் ஃபொன்சேகா வலியுறுத்தினார்.
ஒரு நாட்டின் ராணுவ கட்டமைப்பு மிக வலுவாக இருக்குமேயானால், அது அந்நாட்டிற்கு கம்பீரமான ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர், ராணுவம் மறுசீரமைக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், 1955ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட யுத்த தாங்கிகளையே ராணுவம் இன்றும் பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
தான் இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் 80 யுத்த தாங்கிகள் இருந்த போதிலும், யுத்தத்தினால் அவற்றில் 50 தாங்கிகள் சேதமடைந்துள்ளதாக கூறிய அவர், தற்போது 30 யுத்த தாங்கிகள் மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் தெரிவித்தார்.
"விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இலங்கையில் மாத்திரமன்றி, உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்திற்கு பிரித்தானியாவில் பிரபாகரனின் புகைப்பட பதாகையொன்று வைக்கப்பட்டிருந்தது. அதை அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் அப்புறப்படுத்தினர்." என்று அவர் கூறினார்.
"இலங்கையில் நடந்த ஜே.வி.பி கலவரத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்படுத்தி பேசுவது தவறானது. தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டை பிளவுப்படுத்தி, தனிநாட்டை கோரியே யுத்தம் செய்தனர். ஜே.வி.பி நாட்டை பிளவுப்படுத்துவதற்கான போராட்டத்தை செய்யவில்லை," என அவர் சுட்டிக்காட்டினார்.
பிற செய்திகள்:
- டெனெட் – திரை விமர்சனம்
- நடராஜனின் மறுபக்கம்: வறுமையின் பிடியில் அவதிப்பட்ட "அந்த 15 ஆண்டுகள்"
- ''நட்சத்திர நாயகர்களாக அங்கீகாரம் பெற ஸ்டாலின், பழனிசாமி காத்திருக்கவில்லை''
- அமித் ஷா தமிழகம் வருகை; GoBackAmitShah இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடம்
- பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து கப்பலில் கடத்தப்பட்ட கிளிகள்
- டெல்லி காற்று மாசு: மருத்துவர் அறிவுரையால் கோவா சென்ற சோனியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: