You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தோனீசியாவில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து கப்பலில் கடத்தப்பட்ட கிளிகள்
(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில படங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)
இந்தோனீசியாவின் கிழக்கு பகுதியான பப்புவாவில், கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் பிளாஸ்டிக் பாட்டில்களில் டஜன் கணக்கான கிளிகள் அடைக்கப்பட்டு கடத்தப்பட்டது தெரிய வந்தது.
அங்கிருந்து ஒரு பெரும் பெட்டியில் சத்தம் வந்ததையடுத்து சென்று பார்த்ததில் உயிருடன் 64 கிளிகளும், 10 இறந்த கிளிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆசியாவிலேயே அதிக அளவில் இந்த அழிந்துவரும் பறவை இனங்களுக்கு புகலிடமாக இந்தோனீசியாக இருக்கிறது. அதோடு அங்குதான் சட்டவிரோதமாக பறவைகள் வர்த்தகமும் அதிகமாக இருக்கிறது.
உள்ளூரில் உள்ள பெரும் பறவை சந்தைகளில் பறவைகள் விற்கப்படுவதோடு, வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன.
துறைமுக நகரான ஃபக்பக்கில் வியாழக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்ட இந்த கிளிகள் எங்கே கொண்டு செல்லப்பட இருந்தன என்பது தெளிவாக தெரியவில்லை என உள்ளூர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் டொடிக் ஜுனைதி ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
"அசாதாரண சத்தம் கேட்டதையடுத்து, பெட்டிக்குள் விலங்குகள் இருந்ததாக கப்பலில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டதாக" அவர் கூறினார்.
இதுவரை இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
மீட்கப்பட்ட பறவைகள் நியூ கினி மற்றும் தென் மேற்கு பசிபிக் பெருங்கடல் தீவுகளில் காணப்படும் ப்ளேக் கேப்புட் லோரீஸ் (black-capped lories) என்ற வகையை சேர்ந்த கிளிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பறவைகள் கடத்தல் இந்தோனீசியாவில் அதிகம் நடப்பதாகவும், ஆனால், குற்றவாளிகள் கைதுதான் அவசியமான ஒன்றாக இருக்கிறது என்றும் வனவிலங்குகளின் சட்டவிரோத வர்த்தகங்களை கண்காணிக்கும் அமைப்பின் தலைவர் எலிசபெத் ஜான் கூறுகிறார்.
இவ்வாறு பிளாஸ்டிக் பாட்டில்களில் பறவைகள் அடைத்து கடத்தப்படுவது புதிதல்ல.
2015ஆம் ஆண்டு, அழியும் விளிம்பில் இருக்கும் எல்லோ கிரெஸ்ட்டேட் காக்கடூஸ் (yellow-crested cockatoos) என்ற 21 பறவைகளை பாட்டில்களில் கடத்தியதற்காக இந்தோனீசிய போலீசால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
2017ல் 125 வெளிநாட்டுப் பறவைகளை வடிகால் குழாய்களில் வைத்து கடத்தியதாக பலர் கைது செய்யப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: