You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி காற்று மாசு: மருத்துவர் அறிவுரையால் கோவா சென்ற சோனியா காந்தி
இந்தியத் தலைநகரான டெல்லியின் காற்று மாசு அளவு பொதுவாக கவலையோடு விவாதிக்கப்படும் பிரச்சனைதான். அதுவும் குளிர் காலம் வந்தால் அது மோசமான பொது சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுப்பது வழக்கம்தான்.
அதுவும் கடந்த ஆண்டு காற்று மாசு, ஒரு மோசமான கட்டத்தில் 999 என்ற அளவை எட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த ஆண்டு, காற்று மாசுபாட்டுடன் கொரோனா வைரஸ் பரவலும் இந்தியத் தலைநகரை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெள்ளிக்கிழமையன்று, தமது மகன் ராகுல் காந்தியோடு கோவா தலைநகர் பனாஜி சென்றுள்ளார்.
ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி உடலுக்கு, இந்த குளிர் காலத்தில் டெல்லியின் காற்று மாசு மோசமான விளைவை ஏற்படுத்தலாம் என்று அஞ்சிய மருத்துவர்கள், அவரை மாசுபாடு இல்லாத நகரில் சிறிது காலம் இருக்கும்படி அறிவுரை கூறியதை அடுத்து அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாக பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
மாசு குறைவாக உள்ள நகரில் வசிக்கும்படி மருத்துவர்கள் சோனியாவுக்கு அறிவுரை கூறியதாக தங்களுக்கு கிடைத்த தகவல்கள் கூறுவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
தீபாவளி அன்று காற்றுத் தரக்குறியீடு டெல்லியின் பல பகுதிகளிலும் 400ஐக் கடந்து அபாயமான நிலையில் இருந்ததாக, காற்றுத் தரத்தைக் கண்காணிக்கும் பல செயலிகளும் சுட்டிக்காட்டின.
விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி டெல்லி முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன, கொளுத்தப்பட்டன.
ஆனால், தீபாவளி அன்று இரவு பெய்த பரவலான மழையை அடுத்து தில்லியின் பல இடங்களிலும் காற்று மாசு வெகுவாகக் குறைந்தது. ஆனாலும், ஆரோக்கியமான அளவுக்கு வரவில்லை.
எடுத்துக்காட்டாக acquin.org என்ற காற்று மாசு கண்காணிக்கும் இணைய தளம் வெள்ளிக்கிழமை இரவு டெல்லி ஆர்.கே.புரம், அமெரிக்கத் தூதரகம் முதலிய பகுதிகளில் காற்று தரக்குறியீடு சுமார் 200 என்ற அளவுக்கு இருந்ததாக காட்டியது.
டெல்லியின் மோசமான மாசுபாட்டுக் காலங்களை ஒப்பிடும்போது இது அதிகம் இல்லை என்றாலும், ஆரோக்கியமான நிலையில் இருக்கவேண்டியதைவிட இந்த மாசுபாடு பல மடங்கு அதிகம் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- ஐ.நாவில் திருமூர்த்தியின் ஆவேச பேச்சு: இந்தியாவின் திடீர் துணிச்சலுக்கு என்ன காரணம்?
- அழகிய பெண் நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்?
- கொரோனா வைரஸ்: இந்தியாவில் ரூ. 500-600 விலையில் விற்க திட்டமிடும் சீரம் நிறுவனம்
- "தமிழ்நாடு எம்.பி.க்கு இந்தியில் பதில் தருவது விதி மீறல்" அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: