You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ரூ.4500 வரை விற்கப்படுவதற்கான காரணம் என்ன?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட பெரிமளவிலான மஞ்சள் பொதிகளுடன் சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தற்போது அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மஞ்சள் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கை அரசாங்கம் மஞ்சள் இறக்குமதிக்கான தடையை விதித்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், மஞ்சள் இறக்குமதிக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டதை அடுத்து, இலங்கையில் மஞ்சள் பாவனை முழுமையாக தடைப்பட்டது.
உள்நாட்டு உற்பத்தியின் ஊடாக மஞ்சள் சந்தைக்கு விநியோகிக்கப்படாத பின்னணியில், பெருமளவிலான மஞ்சள் இந்தியாவிலிருந்தே இதுவரை காலமும் இறக்குமதி செய்யப்பட்டது.
எனினும், மஞ்சளுக்கான இறக்குமதி தடையான நிலையில், உள்நாட்டு சந்தையில் மஞ்சளுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளதை காண முடிகின்றது.
குறிப்பாக 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மஞ்சள் ஒரு கிலோகிராம் தற்போது கறுப்பு சந்தையில் சுமார் 4500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக புறக்கோட்டை வர்த்தகர்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர்.
எனினும், மஞ்சள் விற்பனை தற்போதைய சூழ்நிலையில் முழுமையாக தடைப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மஞ்சளுக்கு பதிலாக, கோதுமை மா மற்றும் மஞ்சள் நிற நிறப்பூச்சிகளை பயன்படுத்தி போலி மஞ்சள் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படுவதை நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்திருந்தனர்.
எனினும், போலி மஞ்சள் சந்தைகளில் தொடர்ந்தும் காணப்படுவதாக நுகர்வோர் கவலை வெளியிடுகின்றனர்.
இவ்வாறான பின்னணியில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் மஞ்சள் கொண்டு வரப்படும் நடவடிக்கை கடந்த சில வாரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக தமிழகத்திலிருந்து படகு மூலம் மன்னார் பகுதிக்கு மஞ்சள் கொண்டு வரப்பட்டு, அவை இலங்கைக்குள் விநியோகிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு இலங்கைக்குள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 1338 கிலோகிராம் மஞ்சளை கடந்த இரு தினங்களில் இருவேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.
ஆயிரக்கணக்கில் சட்டவிரோத மஞ்சள்
கொழும்பில் சட்டவிரோதமாக கடத்த முயற்சித்த 33,000 கிலோகிராம் மஞ்சள் தொகையுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்ணாடி இறக்குமதி செய்யும் போர்வையில், சட்டவிரோதமாக டுபாயிலிருந்து இந்த மஞ்சள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணைகளின் தெரியவந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக மூன்று கொள்கலனங்களில் இந்த மஞ்சள் தொகையை கொண்டு செல்ல முயற்சித்த நிலையில், புளுமெண்டல் போலீஸாரினால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சிலாபம் பகுதியில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த முயற்சித்த 1000 கிலோகிராம் மஞ்சள் தொகையை கடற்படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடந்த 16ஆம் தேதி முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 510 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டதுடன், அந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, மன்னார் கரையோர பகுதியொன்றில் அன்றைய தினமே முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த 308 கிலோகிராம் எடையுடைய மஞ்சள் பொதிகள் ஐந்தை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.
அதன்பின்னர், மன்னார் - முந்தலம்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த 520 கிலோகிராம் மஞ்சள் பொதிகளுடன் மூன்று சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
படகொன்றின் ஊடாக 12 பொதிகளில் காய்ந்த மஞ்சளை நாட்டிற்குள் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் இந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கையில் இதுவரை கைப்பற்றப்பட்ட மஞ்சள் பொதிகளுக்கு, கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவற்றை கடற்படையினர் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
அத்துடன், கொவிட்-19 அச்சுறுத்தல் காணப்படுகின்றமையினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
- நீட் விவகாரம் தொடர்பாக சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை - உயர் நீதிமன்றம்
- இந்தியாவில் கொரோனா வைரஸ் நாம் நினைப்பதை விட பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறதா?
- “வணக்கம். நான் இறந்தவன் பேசுகிறேன்” – இறுதிச் சடங்குகளில் வருமானம் ஈட்டும் நபர்
- `இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த சுகாதார பணியாளர்கள் குறித்த தகவல் இல்லை`
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :