You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ஒட்டி நடிகர் சூர்யா தெரிவித்த கருத்திற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்ன சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, இந்திய நீதித்துறையின் தொழில்முறை மகத்துவத்தால் நான் ஆழமாக ஈர்க்கப்பட்டுள்ளேன். மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரே நம்பிக்கையாக உள்ள நீதித்துறை மீது நான் எப்போதும் உயரிய மதிப்பை வைத்திருக்கிறேன், சென்னை உயர் நீதிமன்றம் காட்டிய நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையான அணுகுமுறையால் நான் தாழ்மையுடன் ஊக்கமும் அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
கடந்த வாரம் நடந்த நீட் தேர்விற்கு முன்பாக, தேர்வு எழுதவிருந்த மாணவர்களில் சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா, "கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வெழுத வேண்டுமென உத்தரவிடுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் "நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், "என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் நேர்மை மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதி அமைப்பை குறைமதிப்புக்குட்படுத்தியும், தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். மேலும், இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோரியிருந்தனர்.
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகளான கே. சந்துரு, கே.எம். பாஷா, டி. சுதந்திரம், டி. ஹரிபரந்தாமன், கே. கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
அதில், "சூர்யாவின் கருத்து குறித்து நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளது போன்று எந்த நடவடிக்கையும் எடுக்க அவசியம் இல்லை கருதுகிறோம். 4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவியுள்ளார். அவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிடலாம்.சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பது எங்கள் கடமை என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் உங்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறோம்" என்று முன்னாள் நீதிபதிகள் கடிதத்தில் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில், நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் எழுதிய கடிதம், தமிழக அட்வகேட் ஜெனரலுக்கு அனுப்பப்பட்டு, அவரது கருத்து கோரப்பட்டது. இதற்குப் பதிலளித்த அட்வகேட் ஜெனரல், இந்த விவகாரத்தில் நடவடிக்கை தேவையில்லையென தெரிவித்தார்.
இந்த விவகாரம் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கு நடிகர் சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான சாத்தியக்கூறு இல்லையென்றும் அது தொடர்பான கோரிக்கைகளை நிராகரிப்பதாகவும் தெரிவித்தது.
"தன்னளவில் சரியாக நடந்துகொள்வதாகக் கூறும் சூர்யா போன்றவர்கள் நீதித்துறை மீது விமர்சனங்களை வைப்பதற்கு முன்பாக அது நியாயமானதா, இல்லையா என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்" என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- இந்தியாவில் கொரோனா வைரஸ் நாம் நினைப்பதை விட பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறதா?
- “வணக்கம். நான் இறந்தவன் பேசுகிறேன்” – இறுதிச் சடங்குகளில் வருமானம் ஈட்டும் நபர்
- `இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த சுகாதார பணியாளர்கள் குறித்த தகவல் இல்லை`
- இந்தியக் கலாசாரம் குறித்து ஆராயக் குழு: தென் இந்தியர் இடம்பெறாதது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :